ind vs ban cricinfo
கிரிக்கெட்

7.36 ரன்ரேட்டில் டெஸ்ட் போட்டியை முடித்த இந்தியா.. வங்கதேசத்துக்கு எதிரான தொடரை வென்று உலக சாதனை!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி.

Rishan Vengai

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரண்டு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.

ind vs ban test

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. முதல்நாளில் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், இரண்டாவது மற்றும் 3வது நாள் ஆட்டங்கள் மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக நடத்தப்படவில்லை.

பும்ரா

இந்நிலையில் 4வது நாளான நேற்று முதல் இன்னிங்ஸை தொடர்ந்த வங்கதேசம் 233 ரன்களில் ஆட்டமிழந்தது. பின்னர் தன்னுடைய முதல் இன்னிங்ஸை அதிரடியாக விளையாடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் முன்னிலையுடன் 285 ரன்கள் விளாசி டிக்ளார் செய்தது.

146 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசம்..

52 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேச அணி, அஸ்வின், பும்ரா மற்றும் ஜடேஜாவின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 146 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அஸ்வின், பும்ரா, ஜடேஜா அனைவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸை போலவே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் அரைசதமடித்த ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதமடித்து அசத்தினார். 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் அடித்த இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வாலும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜெய்ஸ்வால்

WTC இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான நெருடல் இருந்த நிலையில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வென்று இந்தியா வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா படைத்த சாதனைகள்..

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை வென்ற இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து அசத்தியுள்ளது. அவை,

* 11 வருடங்கள்: 2013-லிருந்து 2024 வரை சொந்த மண்ணில் நடந்த ஒரு டெஸ்ட் தொடரை இழக்காமல் வெற்றிநடை போட்டு வருகிறது.

* 18 தொடர் வெற்றி: சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18* டெஸ்ட் தொடர்களை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ரோகித் சர்மா

* 312 பந்தில் வெற்றி: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா, இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 312 பந்தில் போட்டியை வென்றுள்ளது.

* அதிக ரன்ரேட்டுடன் வெற்றி: இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 7.36 ரன்ரேட்டில் போட்டியை வென்று உலக சாதனை படைத்தது இந்தியா. முதல் இரண்டு இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா (6.80), இங்கிலாந்து (6.73) அணிகளை பின்னுக்கு தள்ளி சாதனை.