india team x page
கிரிக்கெட்

IND Vs SA | உகாண்டாவின் சாதனை முறியடிப்பு.. டி20யில் புதிய சரித்திரம் படைத்த இந்திய அணி..

ஒரே ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி சதவீதத்தை கொண்ட அணியாக இந்திய அணி புதிய சரித்திரம் படைத்துள்ளது.

Prakash J

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதல்

தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான் இந்திய அணி, அந்த நாட்டு அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கான முதல் டி20 போட்டி டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி ரன்மழை பொழிந்து. இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். இதில் 10 சிகஸ்ர்களும், 7 பவுண்டரிகளும் அடக்கம். பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 17.5 ஓவர்களில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் உள்ளது. சதம் அடித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதையும் படிக்க: ’உங்களை நான் காயப்படுத்தியிருந்தால்’- உருக்கமான பேச்சுடன் சந்திரசூட் ஓய்வு.. இறுதிநாளிலும் தீர்ப்பு

நேற்றைய போட்டியில் இந்தியா வெற்றிபெற்றதன் மூலம், இந்த ஆண்டில் மட்டும் 22 சர்வதேச டி20 வெற்றிகளைப் பெற்றுள்ளது. மேலும், ஒரே ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி சதவீதத்தை கொண்ட அணியாகவும் இந்திய அணி இருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் இந்திய அணி இதுவரை 23 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஜிம்பாப்வே தொடரில் ஒரு போட்டியில் தோற்றதைத் தவிர மற்ற 22 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் அதன் வெற்றி சதவிகிதம் 95.6 ஆக உள்ளது. இதுவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் ஓர் அணி பெற்ற அதிக வெற்றி சதவீதம் ஆகும். இதற்குமுன் 2023ஆம் ஆண்டு உகாண்டா அணி ஒரே ஆண்டில் 29 வெற்றிகளை பெற்று 87.98 சதவீதத்துடன் இருந்தது. அதற்கு முன்பு இந்திய அணி கடந்த 2022ஆம் ஆண்டு 28 போட்டிகளில் வெற்றிபெற்று 70 சதவிகிதத்தை வைத்திருந்தது.

ஒரே ஆண்டில் அதிக டி20 வெற்றி சதவிகிதம்

2023இல் 29 உகாண்டா (வெற்றி% 87.9)

2022இல் 28 இந்தியா (70.0%)

2024இல் 22 இந்தியா (95.6)*

2022இல் 21 தான்சானியா (72.4%)

2020இல் 20 பாகிஸ்தான் (69.0%)

இதையும் படிக்க: செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு|எலான் மஸ்க்கிற்கு மத்தியஅரசு கிரீன்சிக்னல்.. அம்பானிக்கு சிக்கல்!