விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் ஐசிசி
கிரிக்கெட்

2019 தோல்விக்கு பதிலடி கொடுத்த இந்தியா! WC அரையிறுதியில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்து சாதனை!

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 398 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

Rishan Vengai

2023 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று முதல் அரையிறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா நியூசிலாந்தை பந்துவீசுமாறு அழைத்தார்.

அடுத்தடுத்து சதமடித்து மிரட்டிய கோலி-ஸ்ரேயாஸ்!

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க பேட்டர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இன்னிங்ஸைத் தொடங்கினர். எப்போதும்போல அதிரடியில் கலக்கிய ரோகித் சர்மா, சொந்த மண்ணில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என பறக்கவிட்டு 47 ரன்களில் ஆட்டமிழந்து, தன்னுடைய வேலையை தரமாக செய்துவிட்டு வெளியேறினார். பின்னர் கைக்கோர்த்த கில் மற்றும் கோலி இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கோலி பொறுமையாக ஆட்டத்தை தொடங்க, மறுபுறம் பொறுப்பை எடுத்துக்கொண்ட சுப்மன் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

kohli - shreyas

8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என பறக்கவிட்ட சுப்மன் கில் 80 ரன்களில் இருந்த நிலையில், சதமடிப்பார் என நினைத்த போது தசைபிடிப்பின் காரணமாக ரிட்டயர்டு ஹர்ட் முறையில் பேட்டிங் செய்யாமல் வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் மற்றும் கிங் கோலி இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிங் கோலி நாக் அவுட் போட்டிகளில் விளையாடவே மாட்டார் என்ற மோசமான ரெக்கார்டை உடைத்து, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 50வது சதத்தை பதிவுசெய்து இமாலய சாதனை படைத்தார். விராட் கோலி 117 ரன்கள் அடித்து வெளியேற, கோலி விட்ட இடத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டத்தை எடுத்துச்சென்றார்.

virat kohli

4 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் 67 பந்துகளில் 3வது அதிவேக உலகக்கோப்பை சதத்தை எடுத்துவந்தார். 105 ரன்னில் ஸ்ரேயாஸ் வெளியேற, கடைசிவரை களத்தில் நின்ற கேஎல் ராகுல் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்து 20 பந்தில் 39 ரன்கள் அடிக்க 50 ஓவர் முடிவில் 397 ரன்களை குவித்தது இந்திய அணி.

2019 உலகக்கோப்பை தோல்விக்கு தகுந்த பதிலடி கொடுத்த இந்தியா!

2019 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, அதற்கு பழிதீர்க்கும் வகையில் ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளது. ஒரு உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் பதிவுசெய்யப்பட்ட அதிக ரன்கள் இதுவாகும். இதற்கு முன் 2015 உலகக்கோப்பை காலிறுதிப்போட்டியில் நியூசிலாந்து குவித்திருந்த 393 ரன்கள் என்ற சாதனையை, நியூசிலாந்துக்கு எதிராகவே செய்து அசத்தியுள்ளது இந்திய அணி.

shreyas iyer

உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன் சேஸிங்கே 345 ரன்கள் தான். அதேபோல வான்கடேவில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ரன்களே 288 ரன்கள் தான் என்ற நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான வெற்றியை கிட்டத்தட்ட உறுதிசெய்துள்ளது இந்திய அணி. 2019 உலகக்கோப்பை தோல்விக்கு பழிதீர்க்கும் ஒரு இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி இந்திய ரசிகர்களை ஆனந்தத்தில் தள்ளியுள்ளது.

shami

398 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிவரும் நியூசிலாந்து அணி 50 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடிவருகிறது.