நடப்பு உலகக்கோப்பை தொடரின் 33வது லீக் போட்டி, இன்று (நவ. 2) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், இலங்கையும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் ஜெயித்த இலங்கை அணி, முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. அதன்படி, தொடக்க பேட்டராய்க் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களில் ஏமாற்றினாலும், பின்னர் வந்த சுப்மன் கில் (92 ரன்கள்), விராட் கோலி (88), ஸ்ரேயாஸ் ஐயர் (82) ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.
கடைசிநேரத்தில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் (35) அதிரயில் கலக்க, இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 357 ரன்களைக் குவித்தது. ஆனால், பின்னர் கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைந்தது.
குறிப்பாக, 3 ஓவர்களுக்குள் 3 ரன்கள் எடுத்த நிலையில் 4 விக்கெட்களை இழந்திருந்தது. தொடர்ந்து இந்திய பந்துவீச்சாளர்கள் வீறுகொண்டு எழுந்த நிலையில், அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 55 ரன்களில் சுருண்டது. அவ்வணியில், ராஜிதா (14), தீக்ஷனா (12), மேத்யூஸ் (12) ஆகிய வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க எண்களை எடுத்திருந்தனர்.
இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் 5 பேட்டர்கள் (நிஷாங்கே, கருணாரத்னே, சதீரா, ஹேமந்தா, சமீரா) டக் அவுட் முறையில் பெவிலியன் திரும்பியிருந்தனர். இதையடுத்து இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும் இத்தொடரில் விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றிபெற்று முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.
தற்போதைய நிலவரப்படி, இந்திய அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அடுத்து, 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளைப் பெற்றிருக்கும் தென்னாப்ரிக்கா, 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
எனினும், ரன்ரேட்டில் இந்திய அணியைவிட (+2.102) தென்னாப்ரிக்கா (+2.290) முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 4 வெற்றிகளுடன் (+0.970) 3வது இடத்தில் உள்ளது. அதே 4 வெற்றிகளைப் பெற்றிருக்கும் நியூசிலாந்து ரன் ரேட்டில் (+0.484) குறைந்திருப்பதால் 4வது இடத்தில் நீடிக்கிறது.
10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 6 அணிகள் 7 போட்டிகளிலும், 4 அணிகள் 6 போட்டிகளிலும் விளையாடி உள்ளன. இன்னும் இந்த அணிகள் 2 அல்லது 3 எஞ்சிய போட்டிகளில் விளையாட உள்ளன. இறுதியில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துவிடும்.
இதில் இந்திய அணி, முதல் அணியாக நுழைந்துவிட்டதால் மற்ற அணிகள் அடுத்தசுற்றுக்கு முன்னேறுவதற்குப் போட்டிபோட்டு வருகின்றன. இறுதியில் நவம்பர் 12ஆம் தேதிக்குள் எந்தெந்த அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குள் விளையாடும் என்பது முடிவாகிவிடும். முன்னதாக, இந்தத் தொடரில் இருந்து முதல் அணியாக, அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வங்கதேசம் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.