Paras Mhambrey PTI
கிரிக்கெட்

"ஆடுகளத்துக்கு ஏற்ற அணியையே எப்போதும் எடுப்போம்" - இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரே

அணியின் முடிவுகளை அஷ்வின் புரிந்துகொள்கிறார். அவர் சிறந்த மனிதர். நல்லதொரு டீம் பிளேயரும் கூட. அவர் முகம் சுழித்து நான் எப்போதுமே பார்த்ததில்லை.

Viyan

2023 ஐசிசி உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. முதல் 3 போட்டிகளையுமே வென்று அசத்தியிருக்கும் இந்திய அணி பந்துவீச்சில் குறிப்பாகக் கலக்கிக்கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என இரு பெரும் அணிகள் இந்தியாவுக்கு எதிராக 200 ரன்களைக் கடக்காமல் சுருண்டிருக்கின்றன. இந்திய பௌலர்கள் விக்கெட் வேட்டை நடத்திக்கொண்டே இருந்தாலும், ஒரு இடத்துக்கான விவாதம் மட்டும் ஓயாமல் சென்றுகொண்டே இருக்கிறது. அதுதான் அந்த நம்பர் 8 ஸ்லாட்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டி சென்னையில் நடக்க, ரவிச்சந்திரன் அஷ்வின் அந்தப் போட்டியில் ஆடினார். ஆனால் அடுத்த ஒரு போட்டிகளிலும் அந்த இடத்தில் ஷர்துல் தாக்கூர் களமிறக்கப்பட்டார். 2 போட்டிகளிலும் அவருக்கு மொத்தமே 8 ஓவர்கள் தான் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் பலரும் அஷ்வினே விளையாடியிருக்கலாமே என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இந்திய அணி அக்டோபர் 19ம் தேதி வங்கதேசத்தை புனேவில் சந்திக்கும் நிலையில், போட்டிக்கு முன்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இந்திய பௌலிங் கோச் பரஸ் மாம்பேர்விடம் இதுபற்றி கேட்கப்பட்டது. ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்தே எங்கள் அணி தேர்வு செய்யப்படுகிறது என்ற கருத்தை முன்வைத்த அவர், அது நிர்வாகத்துக்கு எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதைப் பற்றியும் கூறினார்.

"இது எப்போதுமே எளிதான முடிவாக இருந்ததில்லை. ஆனால் இதுபற்றிய உரையாடல்கள் நடக்கும்போதெல்லாம் அவரோடு ஒரு தெளிவான உரையாடலை நாங்கள் மேற்கொள்வோம். நாங்கள் எப்போதுமே ஒரு அணியைத் தேர்வு செய்யும்போது அறிவுறுத்தும் ஒரு முக்கியமான விஷயம் இது - நாங்கள் தேர்வு செய்யும் அணி, அந்த ஆடுகளத்துக்கான சிறந்த அணி. 15 பேர் கொண்ட ஸ்குவாடில் அஷ்வின் போன்ற ஒரு உலகத்தர பௌலர் இருந்தும், அவரை பிளேயிங் லெவனில் சேர்க்க முடியாதது மிக மிகக் கடினமான விஷயம். ஒரு மிகச் சிறந்த போட்டியில் எங்களால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது. ஆனால் எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய உரையாடல்கள் அணியை மையமாகக் கொண்டே இருக்கும். இந்தப் போட்டிக்காக மட்டுமல்ல. கடந்த சில ஆண்டுகளாக அப்படித்தான் இருந்திருக்கிறது" என்று டிராவிட், ரோஹித் போன்றவர்கள் சொன்ன கருத்தையே தானும் முன்வைத்திருக்கிறார் மாம்ப்ரே.

மேலும், இப்படியான சூழ்நிலையில் அஷ்வின் போன்ற ஒரு வீரர் இதைப் புரிந்துகொள்வதை அவர் பாராட்டியிருக்கிறார். "நாங்கள் அன்று விளையாடும் ஆடுகளத்துக்கு எந்த காம்பினேஷன் செட் ஆகுமோ அதைத்தான் களமிறக்குகிறோம். அப்படியிருக்கும்போது, அணியின் முடிவுகளை அஷ்வின் புரிந்துகொள்கிறார். அவர் சிறந்த மனிதர். நல்லதொரு டீம் பிளேயரும் கூட. அவர் முகம் சுழித்து நான் எப்போதுமே பார்த்ததில்லை. அவர் எங்களோடு இருந்த கடந்த சில ஆண்டுகளில் ஒருமுறை கூட அவர் எதைப்பற்றியும் குறை சொல்லி நான் பார்த்ததில்லை. அணியில் அப்படியொரு வீரர் இருப்பது அணிக்கு பெரிய உதவியாக இருக்கும். அவரை நிச்சயம் பாராட்டியாகவேண்டும். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் இன்னும் விளையாடிக்கொண்டிருக்கிறார். அணிக்காக அவர் இன்னும் சிறப்பான செயல்பாட்டைக் கொடுக்கவேண்டும் என்று உழைக்கிறார். ஒவ்வொரு பிராக்டீஸ் செஷன்களிலும் பங்கேற்கிறார். கடுமையாக உழைக்கிறார். தொடர்ந்து பந்துவீசிக்கொண்டே இருக்கிறார்" என்று கூறினார் அவர்.

ஆனால் இந்த விவாதங்கள் அஷ்வின் vs ஷர்துல் என முடிந்துவிடவில்லை. முகமது ஷமி போன்ற ஃபார்மில் இருக்கும் ஒரு பௌலரும் வெளியே அமர்ந்திருக்கும் நிலையில், அவரை வெளியே அமரவைத்திருப்பது பற்றியும் மாம்ப்ரேவிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "எங்களின் அணுகுமுறை சில வீரர்கள் லெவனில் இடம்பெற முடியாது. ஷமி போன்ற ஒரு வீரருக்கு வாய்ப்பு கிடைக்காது.அஷ்வின் போன்ற ஒரு வீரரும் பிளேயிங் லெவனில் இடம்பெற முடியாத நிலை ஏற்படும். ஆனால் அதை சரியாக அவரிடம் நாங்கள் தெரிவித்துவிடுவோம். நாங்கள் எங்கள் திட்டத்தில் தீர்க்கமாக இருக்கிறோம். ஆனால் இவையெல்லாம் மிகவும் கடினமான முடிவுகள். ஷமி போன்ற ஒரு வீரரால் நியூ பாலில் பந்துவீச முடியும், டெத்தில் பந்துவீச முடியும். அணிக்கு அவர் எக்கச்சக்க குவாலிட்டியை கொண்டுவருகிறார். அப்படியொரு வீரரை வெளியே வைத்திருப்பதென்பது மிகவும் கடினமான முடிவு. ஆனால் நீங்கள் 11 பேரைத் தான் ஆட்டத்தில் களமிறக்க முடியும். அதற்கு இதுபோன்ற முடிவுகளை எடுத்தாகவேண்டும்" எனக் கூறினார் மாம்ப்ரே.

இப்படி சில குட்டிக் குழப்பங்கள் இருந்தாலும், முக்கிய பௌலர்கள் எல்லோரும் பட்டையைக் கிளப்புகிறார்கள். அதிலும் குறிப்பாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டியிருக்கிறார். நெடுங்காலம் காயத்தால் அவதிப்பட்டுவந்த அவர், அணியில் இணைந்திருப்பது பற்றி மிகவும் ஆசுவாசமாகப் பேசினார் மாம்ப்ரே. "பும்ரா காயத்திலிருந்து மீண்டும் வந்திருப்பது பெரும் மகிழ்ச்சி. அவர் இல்லாமல் மிகவும் கடினமாக இருந்தது. கடந்த ஓரிரு ஆண்டாக அவர் இல்லாமல் ரொம்பவே சிரமப்பட்டோம். பும்ரா போன்ற ஒரு மிகச் சிறந்த பௌலர் இல்லாமல் விளையாடுவது எளிதான காரியம் இல்லை. கடந்த 3 போட்டிகளாக அவர் விளையாடியதை எல்லோரும் பார்த்திருக்கிறீர்கள். அணிக்கு அவர் என்ன கொண்டுவருகிறார் என்பதைப் பார்த்திருக்கிறீர்கள். அவர் ஒரு உலகத்தர பௌலர். பவர்பிளேவில் பந்துவீசும்போது நமக்குத் தேவையான அந்த விக்கெட்டை எடுத்துக் கொடுப்பார். மிடில் ஓவர்களில் நல்லபடியாக பந்துவீசும் வகையில் தன்னை அவர் தகவமைத்துக்கொண்டார். டெத் ஓவர்களில் அவர் மிகச் சிறந்த பௌலர். அவரை ரொம்பவே மிஸ் செய்தோம்"

"அவர் மீண்டு வந்ததற்கான பாராட்டை தேசிய கிரிக்கெட் அகாடெமி (NCA) உறுப்பினர்களுக்கு நிச்சயம் கொடுக்கவேண்டும். NCA மருத்துவர்கள், ஃபிசியோக்கள் மற்றும் இங்கு இருப்பவர்கள் அனைவருமே அட்டகாசமாக தங்கள் வேலையைச் செதிருக்கிறார்கள். திரைக்குப் பின்னால் கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் கடும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள். பும்ரா இருந்த இடத்திலிருந்து அவர் இப்போது இருக்கும் நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதனால் நிச்சயம் அவர்களைப் பாராட்டவேண்டும்" என்றும் அவர் கூறினார்.