இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டி டை ஆன நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி பிரேமதசா மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 240 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் அவிஷ்கா, கமிந்து மெண்டீஸ் தலா 40 ரன்களையும், குசால் மெண்டீஸ் 30 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். அக்சர் மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட் எடுத்திருந்தனர்.
241 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மா அதிரடியாக ஆட சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடித்து ஆடிய ரோகித் சர்மா 64 ரன்களை எடுத்து வெளியேறினார். சற்றே நிதானமாக ஆடிய கில் 35 ரன்களை எடுத்தார்.
பின் வந்த பேட்டர்களில் அக்சர் மட்டும் 44 ரன்களை எடுத்து ஆறுதல் அளிக்க மற்ற வீரர்கள் எல்லாம் வந்த வேகத்தில் திரும்பினர். விராட் கோலி வந்தர்சே பந்தில் 14 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து இரு முறை சுழற்பந்து வீச்சாளரிடம் எல்.பி.டபிள்யூ முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தது இதுவே முதன்முறையாகும்.
துபே மற்றும் ராகுல் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது. 13 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்களை எடுத்திருந்த இந்திய அணி, பின்னர் மொத்தமாக சரிந்தது. முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 208 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிறப்பாக பந்துவீசிய இலங்கை அணியில் ஜெஃப்ரி வந்தர்சே 6 விக்கெட்களையும், கேப்டன் அசலங்கா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்திய அணி தொடர்ந்து இரு போட்டிகளில் சுழலுக்கு எதிராக 9 விக்கெட்களை பறிகொடுத்துள்ளது. இரு போட்டிகளிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் 5 பேர் LBW முறையில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளனர். இன்றைய போட்டியில் அர்ஷ்தீப் சிங் மட்டுமே ரன் அவுட் ஆனார்.
10 ஓவர்களை வீசிய வந்தர்சே 33 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர்களில் வந்தர்சே மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
முதலிடத்தில், இலங்கையின் முத்தையா முரளிதரன் உள்ளார். இவர் 2000 ஆம் ஆண்டுகளில் சார்ஜாவில் நடந்த போட்டியில் 30 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இரண்டாவது இடத்திலும் இலங்கையின் அஜந்தா மெண்டஸ் உள்ளார். இவர் 2008 ஆம் ஆண்டு கராச்சியில் நடந்த போட்டியில் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். மூன்றாவது இடத்தில் வந்தர்சே உள்ளார்.