விராட் கோலி, ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ ட்விட்டர்
கிரிக்கெட்

கோலியின் 48-வது சதம் சாத்தியமானது எப்படி.. இந்திய தோல்விக்கு நடுவரைக் காரணம் கூறுவது நியாயமா?

இந்திய அணி உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்ததற்கு நடுவரே காரணம் என ரசிகர்கள் குறைகூறி வருகின்றனர்.

Prakash J

நடுவர் ரிச்சர்ட் கெட்டில்ப்ரோவுக்கு எதிர்ப்புக் குரல்

2023 உலகக்கோப்பையை இந்திய அணி தவறவிட்டதால், தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு புறமிருந்தாலும், மறுபுறம் இதன் இறுதிப்போட்டியில் பங்கேற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த நடுவர் ரிச்சர்ட் கெட்டில்ப்ரோவை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

’இந்திய அணிக்கு துரதிர்ஷ்டமான நடுவர்’ என ரசிகர்களால் விமர்சிக்கப்படும் நிலையில், நேற்றும் அவர் பங்கேற்றததாலேயே இந்திய அணி தோல்வியுற்றதாகக் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதையடுத்தே, நேற்று, ரிச்சர்ட் கெட்டில்ப்ரோவுக்கும் பரிசளிக்கும் நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது. அப்போது அவரது பெயரை அழைத்தவுடன் ரசிகர்கள் எதிர்ப்புக் குரலை கொடுத்தனர்.

ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ எப்போதெல்லாம் நடுவராக இருக்கிறாரோ அப்போதெல்லாம் இந்திய அணி தோல்வியைத் தழுவுவது வரலாறாக மாறி வருகிறது. இதையடுத்தே இந்திய ரசிகர்கள் அவருக்கு எதிராக எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: 2014 டூ 2023: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியும் இந்திய அணி தவறவிட்ட 9 ஐசிசி கோப்பைகள்!

நடுவர் மீது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்ன?

கடந்த 2019-உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டிக்கு நடுவராகச் செயல்பட்டவர் ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ. அதுபோல், நடப்பாண்டில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ மூன்றாவது நடுவராக இருந்தார். அதிலும் இந்தியா தோல்வியை தழுவியது.

குறிப்பாக, அந்தப் போட்டியில் சுப்மன் கில்லுக்கு அவர் வழங்கிய அவுட் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து, நேற்றைய போட்டியிலும் அவரே நடுவராக இருந்தார். இதன் காரணமாக ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ இந்தியாவுக்கு ராசியான நடுவர் கிடையாது என்றும் அவர் வந்தால் இந்தியாவுக்கு அது மனதளவில் பாதகத்தை கொடுக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதனாலேயே அவரது பெயரை முன்னிறுத்தி குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால் இந்த நடுவர் பங்கேற்றதால்தான் இந்திய அணி தோல்வியுற்றது என்பதெல்லாம் ஏற்கக்கூடியது அல்ல. கிரிக்கெட் என்று வந்துவிட்டால் அன்றைய நாளில் யார் திறமையின்படி சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவர்களுக்குத்தான் வெற்றி கிட்டும். உண்மையில் இந்திய அணி தோற்பதற்கு அவர் காரணமல்ல என்பதை ரசிகர்கள் உணர வேண்டும். மைதானத்தின் தன்மை, பேட்டர்கள் அதிக ரன்கள் குவிக்காமை, அஸ்வின் களமிறக்கப்படாமை, பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் சொதப்பல் ஆகியனவே இந்திய அணி தோல்வியுறுவதற்குக் காரணங்களாக அமைந்தன என்பதே உண்மை.

இதையும் படிக்க: ரோகித், கோலி, ஷமி... கோப்பையைப் பறிகொடுத்தாலும் சாதனையில் முதலிடம் பிடித்த இந்தியர்கள்!

விராட் கோலியின் 48-வது சதத்துக்கு உதவியதாக நடுவரின் மீது விழுந்த விமர்சனம்

மேலும் இதே நடுவர்தான், உலகக்கோப்பையின் வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில், விராட் கோலி 97 ரன்களில் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது வங்கதேச பவுலர்கள் அவரது 48வது சதத்தைத் தடுக்கும் வகையில் பந்துவீசினர். அதற்காக கோலிக்கு நசும் அகமது லெக் சைடில்கூட ஒரு பந்தை வீசினார். அந்த பந்துக்கு நடுவர் முறையாக வைடு கொடுத்திருக்க வேண்டும் என சர்ச்சை எழுந்தது.

ஆனால், அவர் வைடு வழங்கவில்லை. ஒருவேளை, ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ அந்த பந்துக்கு வைடு வழங்கியிருந்தால், விராட் கோலியால் அந்தப் போட்டியில் சதம் போட்டிருக்க முடியாதநிலை உருவாகி இருக்கும். அதே நடுவர், விராட் கோலி சதம் அடிப்பதற்காக உதவினார் என்ற விமர்சனமும் அவர்மீது வைக்கப்பட்டதை ரசிகர்கள் உணர வேண்டும்.

இதையும் படிக்க: உலகக்கோப்பை 2023: வெற்றி கைநழுவிப் போனது எப்படி..? இந்தியா தோற்றதற்கு மிக முக்கிய 5 காரணங்கள்!