mohammed shami ICC
கிரிக்கெட்

2019 தோல்விக்கு நியூசியை பழிதீர்த்து இறுதிப்போட்டிக்கு சென்ற இந்தியா! 7 விக்கெட் வீழ்த்தி ஷமி சாதனை!

நியூசிலாந்து அணியை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது இந்திய அணி.

Rishan Vengai

2023 ஒருநாள் உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தன. 2019 உலகக்கோப்பை மோதலுக்கு பிறகு இரண்டு அணிகளும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்வதால் அதிக எதிர்ப்பார்ப்புடன் போட்டி தொடங்கப்பட்டது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா நியூசிலாந்தை பந்துவீசுமாறு அழைத்தார்.

397 ரன்களை குவித்த இந்திய அணி!

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க பேட்டர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இன்னிங்ஸைத் தொடங்கினர். எப்போதும்போல அதிரடியில் கலக்கிய ரோகித் சர்மா, சொந்த மண்ணில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என பறக்கவிட்டு 47 ரன்களில் ஆட்டமிழந்து, தன்னுடைய வேலையை தரமாக செய்துவிட்டு வெளியேறினார். பின்னர் கைக்கோர்த்த கில் மற்றும் கோலி இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கோலி பொறுமையாக ஆட்டத்தை தொடங்க, மறுபுறம் பொறுப்பை எடுத்துக்கொண்ட சுப்மன் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என பறக்கவிட்ட சுப்மன் கில் 80 ரன்களில் இருந்த நிலையில், சதமடிப்பார் என நினைத்த போது தசைபிடிப்பின் காரணமாக ரிட்டயர்டு ஹர்ட் முறையில் பேட்டிங் செய்யாமல் வெளியேறினார்.

kohli - shreyas

பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் மற்றும் கிங் கோலி இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிங் கோலி நாக் அவுட் போட்டிகளில் விளையாடவே மாட்டார் என்ற மோசமான ரெக்கார்டை உடைத்து, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 50வது சதத்தை பதிவுசெய்து இமாலய சாதனை படைத்தார். விராட் கோலி 117 ரன்கள் அடித்து வெளியேற, கோலி விட்ட இடத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டத்தை எடுத்துச்சென்றார். 4 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் 67 பந்துகளில் 3வது அதிவேக உலகக்கோப்பை சதத்தை எடுத்துவந்தார். 105 ரன்னில் ஸ்ரேயாஸ் வெளியேற, கடைசிவரை களத்தில் நின்ற கேஎல் ராகுல் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்து 20 பந்தில் 39 ரன்கள் அடிக்க 50 ஓவர் முடிவில் 397 ரன்களை குவித்தது இந்திய அணி.

இந்திய அணியை பயமுறுத்திய டேரில் மிட்செல்!

398 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர்களான ரச்சின் மற்றும் கான்வே இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார் முகமது ஷமி. 39 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தாலும் அடுத்து கைக்கோர்த்த கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இருவரும் போட்டிக்கு உயிர் கொடுத்தனர். சிறப்பான ஃபார்மில் இருக்கும் டேரில் மிட்செல் இந்த போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். உடன் கேன் வில்லியம்சனும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த நியூசிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது.

Daryl Mitchell

ஷமி ஒருவரை தவிர மற்ற எந்த இந்திய பவுலர்களும் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணற, சிக்சர் பவுண்டரிகள் என விரட்டிக்கொண்டே இருந்த இந்த கூட்டணி 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு கலக்கியது. இரண்டு வீரர்களும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்த, நியூசிலாந்து அணி 200 ரன்களை எட்டியது. யாராவது விக்கெட்ட எடுங்கப்பா என இந்திய ரசிகர்கள் புலம்பவே ஆரம்பிக்க, மீண்டும் ஒரு காப்பானாக பந்துவீச வந்த முகமது ஷமி ஒரே ஒவரில் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் துணை கேப்டன் டாம் லாதம் இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றி இந்திய அணியை போட்டிக்குள் எடுத்துவந்தார். ஆனால் என்ன தான் தொடர்ச்சியாக விக்கெட்டை வீழ்த்தினாலும் மீண்டும் கைக்கோர்த்த மிட்செல் மற்றும் பிலிப்ஸ் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

7 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த முகமது ஷமி!

டேரில் மிட்செல் மற்றும் பிலிப்ஸ் ஜோடியும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடக்க இந்திய அணி மீது அழுத்தம் அதிகமானது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் சதமடித்து அசத்த, அடுத்தடுத்து சிக்சர் பவுண்டரிகளாக விரட்டிய பிலிப்ஸ் ஒரே ஓவரில் 20 ரன்களை எடுத்து வந்து மிரட்சியை ஏற்படுத்தினார். ஆனால் இந்த முறை பிலிப்ஸை 41 ரன்னில் வெளியேற்றி விக்கெட்டை எடுத்துவந்தார் ஜஸ்பிரித் பும்ரா. உடன் அடுத்து வந்த சாப்மனை குல்தீப் வெளியேற்ற, அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து வந்து போட்டிக்குள் ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி. என்ன தான் ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் கடைசிவரை போராடிய டேரில் மிட்செல் 9 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என பறக்கவிட்டு தனியொரு ஆளாக கெத்து காட்டினார். 134 ரன்கள் அடித்து போராடிய மிட்செல்லை வெளியேற்றிய முகமது ஷமி நியூசிலாந்தின் ஃபைனல் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

shami

அடுத்தடுத்து வந்த சவுத்தீ மற்றும் ஃபெர்குஷனையும் அவுட்டாக்கி வெளியேற்றிய முகமது ஷமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றார். 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து தொடரை விட்டே வெளியேறியது நியூசிலாந்து அணி. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 7 விக்கெட்டை கைப்பற்றி முதல் இந்திய பவுலராக மாறிய முகமது ஷமி, உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலராகவும் மாறி வரலாறு படைத்துள்ளார்.

ind vs nz

2019 உலகக்கோப்பை தோல்விக்கு பழிதீர்த்து நியூசிலாந்தை வீட்டுக்கு அனுப்பியது இந்திய அணி.