Harmanpreet Kaur PTI
கிரிக்கெட்

603/6... வரலாற்று சாதனை படைத்த பெண்கள் கிரிக்கெட் அணி..!

Viyan

பெண்கள் கிரிக்கெட்டில் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்து சரித்திரம் படைத்திருக்கிறது இந்திய பெண்கள் அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சென்னையில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி 606 ரன்கள் குவித்தது இந்தியா. இதன்மூலம் பெண்கள் கிரிக்கெட்டில் 600 ரன்களைக் கடந்த முதல் அணி என்ற சாதனையும் படைத்தது ஹர்மன்ப்ரீத் அண்ட் கோ.

தென்னாப்பிரிக்க பெண்கள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்து ஃபார்மர்களிலும் விளையாடுகிறது. முதலில் பெங்களுருவில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முன்பாக இரு அணிகளும் சென்னையில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மோதின. வெள்ளிக்கிழமை சேப்பாக்கத்தில் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீராங்கனைகளாக துணைக் கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவும் ஷெஃபாலி வர்மாவும் களமிறங்கினார்கள். தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய இருவரும் பௌண்டரிகளாக அடித்து நொறுக்கினார்கள் தென்னாப்பிரிக்க வீராங்கனைகள் எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஓவருக்கு சராசரியாக 4-5 ரன்கள் வந்துகொண்டே இருந்தன. முதலில் ஸ்மிரிதி மந்தனா தன் அரைசதத்தை 78 பந்துகளில் கடந்தார். அதன்பிறகு ஷெஃபாலி 66 பந்துகளில் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இருவரும் இப்படி மாறி மாறி அதிரடி காட்டிக்கொண்டே இருந்தார்கள். தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் 7 பௌலர்களைப் பயன்படுத்தியும் அவரால் அந்த பார்ட்னர்ஷிப்பைப் பிரிக்க முடியவில்லை. முதல் செஷனில் 28 ஓவர்களில் விக்கெட்டே இழக்காமல் 130 ரன்கள் விளாசியது இந்திய அணி.

Shafali Verma



இரண்டாவது செஷனிலும் அவர்கள் அதிரடி தொடங்கியது. தன் அதிரடியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற ஷெஃபாலி 113 பந்துகளில் தன் முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். விரைவிலேயே தன்னுடைய இரண்டாவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார் ஸ்மிரிதி. 122 பந்துகளில் 19 ஃபோர்களுடன் மூன்று இலக்கத்தைக் கடந்தார் ஆர்சிபி கேப்டன். மிரட்டல் ஃபார்மில் இருக்கும் ஸ்மிரிதி மந்தனா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்த மாதம் ஆடியிருக்கும் 4 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் அடித்திருக்கிறார். முதல் 2 ஒருநாள் போட்டிகளிலுமே சதமடித்திருந்த அவர், மூன்றாவது போட்டியிலும் 90 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது. 150 ரன்களை அவர் நிறைவு செய்வார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 149 ரன்களுக்கு அவுட் ஆனார் ஸ்மிரிதி. 161 பந்துகளில் 27 ஃபோர்களும், 1 சிக்ஸரும் விளாசினார் அவர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்த 4 இன்னிங்ஸ்களில் 492 ரன்கள் குவித்திருக்கிறார் அவர்!

ஸ்மிரிதி ஆட்டமிழந்தாலும் ஷெஃபாலி தன் அதிரடியைத் தொடர்ந்தார். 158 பந்துகளில் 150 ரன்களைக் கடந்த அவர், சிக்ஸர் மழையாகப் பொழிந்தார். தொடர்ந்து ரன் மழையாகப் பொழிந்துகொண்டிருந்த அந்த இளம் வீராங்கனை 194 பந்துகளில் தன் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தார். இதன்மூலம் பெண்கள் கிரிக்கெட் வரலாற்றிலேயே 100+ ஸ்டிரைக் ரேட்டில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். இன்னும் அவர் வானவேடிக்கை தொடரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் 205 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

ஷெஃபாலி அவுட் ஆனாலும், இந்தியாவின் ரன் குவிப்பு அடங்கவில்லை. அடுத்து வந்த ஜெமீமா ராட்ரிகியூஸ் (94 பந்துகளில் 55 ரன்கள்), கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் (115 பந்துகளில் 69 ரன்கள்), ரிச்சா கோஷ் (90 பந்துகளில் 86 ரன்கள்) என எல்லோருமே அரைசதம் கடந்தனர். முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 525 ரன்கள் குவித்திருந்த இந்திய அணி, இரண்டாவது நாள் காலையிலும் தங்கள் அதிரடியைத் தொடர்ந்தது. 114.2வது ஓவரில் 600 ரன்களைக் கடந்து, பெண்கள் கிரிக்கெட்டில் அந்த மைல்கல்லை எட்டிய முதல் அணி என்ற சரித்திரம் படைத்தது இந்தியா. ரிச்சா கோஷ் சதமடிக்கட்டும் என இந்திய அணி காத்திருக்க, அவர் 86 ரன்களில் அவுட் ஆனதும் இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டது. அதனால் இந்தியாவின் இன்னிங்ஸ் 603/6 என்ற கட்டத்தில் முடிவுக்கு வந்தது. ஷெஃபாலி, ஸ்மிரிதி, ரிச்சா ஆகியோரின் அதிரடியால் 5.23 என்ற ரன்ரேட்டில் ஆடிய இந்தியா 115.1 ஓவர்களிலேயே இப்படியொரு இமாலய ஸ்கோரை பதிவு செய்தது.

பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் டாப் 5 ஸ்கோர்கள்


1. இந்தியா vs தென்னாப்பிரிக்கா - 603/6 டிக்ளேர், ஜூன் 2024
2. ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா - 575/9 டிக்ளேர், ஃபிப்ரவரி 2024
3. ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து - 569/6 டிக்ளேர், ஆகஸ்ட் 1998
4. ஆஸ்திரேலியா vs இந்தியா - 525, ஃபிப்ரவரி 1984
5. நியூசிலாந்து vs இங்கிலாந்து - 517/8, ஜூன் 1996