இரு அணிகளும் போட்டி போட்டி விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா (131), ரவீந்திர ஜடேஜா (112), சர்ஃபராஸ் கான் (62) ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் 445 ரன்கள் குவித்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி பந்துவீச்சாளர்களை சோதித்தார். மற்றவர்கள் ஆட்ட மிழந்த போது தனி ஒருவனாக பவுண்டரிகளாக பறக்கவிட்டு சதம் விளாசினார். டக்கெட் 153 , ஒல்லி போப் 39, பென் ஸ்டோக்ஸ் 41 ரன்கள் எடுத்த போதும் சிராஜ் உள்ளிட்ட இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பால் இங்கிலந்து அணி 319 ரன்களில் ஆட்டமிழந்தது.
126 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 19, பட்டிதார் 0 ரன்களில் ஆட்டமிழந்த போதும், ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் நிதானமாக ஆட்டத்தை விளையாடி ரன்களை சேர்த்தனர். பின்னர் நேரம் போக போக அதிரடிக்கு மாறினார் ஜெய்ஸ்வால். சுப்மன் கில்லை எதிரே வைத்து மறுமுனையில் படம் காட்டினார் ஜெய்ஸ்வால். சதம் விளாசிய ஜெய்ஸ்வால் ரிட்டையர் ஹர்ட் மூலம் வெளியே வந்தார்.
பின்னர் வந்த குல்தீப் யாதவ் சுப்மன் கில்லுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கில் 91 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
பின்னர் ஜெய்ஸ்வால் மீண்டும் விளையாட வந்தார். நீண்ட நேரம் தாக்குப்பிடித்த குல்தீப் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து ஜெய்ஸ்வால் உடன் ஜோடி சேர்ந்தார் சர்ஃபராஸ் கான். ஒரே உறையில் இரண்டு அத்தி என்பது போல் இருவரும் அதிரடி காட்டினர். ஆண்டர்சன் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் பறக்கவிட்டார் ஜெய்ஸ்வால்.
இரட்டை சதம் நெருங்கும் வேளையில் சற்றே நிதானமாக விளையாடினார் ஜெய்ஸ்வால். அதற்கிடையில் 65 பந்துகளில் சர்ஃபராஸ் கான் அரைசதம் அடித்தார். ஒரு வழியாக 231 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார் இளம் வீரர் ஜெய்ஸ்வால். இந்திய அணியும் 97 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 412 ரன்கள் குவித்தது. இத்துடன் இந்திய அணி 544 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதனால் விரைவில் டிக்ளேர் செய்ய வாய்ப்புள்ளது.
இரட்டை சதம் விளாசிய பின் ஜெய்ஸ்வாலும், அரைசதம் அடித்த பின்னர் சர்ஃபராஸ் கானும் அதிரடியில் இறங்கினர். வினோத் காம்ளேவுக்கு பிறகு இரண்டாவது இரட்டை சதம் அடித்த இடது கை வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் ஜெய்ஸ்வால். இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை 545 ரன்கள் குவித்தும் சாதனை படைத்துள்ளார்.