பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் web
கிரிக்கெட்

RCB ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. பெங்களூர் IPL போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற திட்டம்? இதுதான் காரணமா?

பெங்களூரில் தொடர்ந்துவரும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கும் 2024 ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடரானது மார்ச் 22ம் தேதிமுதல் தொடங்கி நடக்கவிருக்கிறது. சமீபத்தில் 2024 ஐபிஎல் தொடரின் பகுதி அட்டவணையை அதிகாரப்பூர்வமாக் அறிவித்த ஐபிஎல் நிர்வாகம். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்புக்கு பிறகு முழு அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

முதல் 17 நாட்களில் நடைபெறும் 21 போட்டிக்கான அட்டவணையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 3 போட்டிகள் நடக்கவிருக்கின்றன. மார்ச் 22ம் தேதி மிகப்பெரிய ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை எதிர்கொண்டு விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, அடுத்து நடக்கவிருக்கும் பஞ்சாப் கிங்ஸ் (மார்ச் 25), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மார்ச் 29) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (ஏப்ரல் 2) முதலிய அணிகளுக்கு எதிரான போட்டியில் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடவிருக்கிறது.

virat kohli - maxwell

இந்நிலையில் தான் பெங்களூரில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தால் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கும் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரை வாட்டிவதைக்கும் தண்ணீர் பஞ்சம்!

கர்நாடகாவின் தலைநகர் மழையின்மையால் தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ”பெங்களூரு கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தை எதிர்கொள்ளும்” என ஐ.நாவால் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், தற்போது பெங்களூரு கோடைக்காலத்திற்கு முன்பே தண்ணீர் பஞ்சத்தால் திண்டாடி வருகிறது.

பெங்களூரு

எந்தளவு தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது என்றால், தண்ணீர்ப் பஞ்சத்தின் தாக்கம் பெங்களூருவில் உள்ள சாமானிய மக்களுக்கு மட்டுமில்லாமல், முதல்வர் சித்தராமையாவின் அரசு அலுவலக இல்லமான கிருஷ்ணா, துணை முதல்வரின் அரசு இல்லம், சில அமைச்சர்களின் வீடுகளுக்கும் காவிரி குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் 236 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதில், 219 தாலுகாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பெங்களூரு

வரும் கோடைக்காலம் மிக தீவிரமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், கர்நாடகா முழுவதும் 7,082 கிராமங்கள், பெங்களூரு நகரம் உட்பட 1,193 வார்டுகளில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இதையும் படிக்க: மக்களின் அவஸ்தை முதல் அபராதம் வரை: பெங்களூருவை வாட்டிவதைக்கும் தண்ணீர்ப் பஞ்சம்.. முழு அலசல்!

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நகரம் முழுவதும் தண்ணீர் டேங்கர்களுக்கான தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. அறிக்கைகளின்படி, ரூ.700-800ஆக இருந்தத தண்ணீர் டேங்கர் ஒன்றின் கட்டணம், தற்போது ரூ.1500-1800 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூரில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகள் இடம் மாறுகிறதா?

இதுபோன்ற சூழலில் 2 வாரத்தில் 3 ஐபிஎல் போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெறும் நிலையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவானது நிச்சயம் அதிகமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு ஐபிஎல் போட்டிக்காகவும் ஆடுகளத்தை தயார் செய்ய எடுக்கப்படும் தண்ணீரின் அளவு சிறியது அல்ல என்பதால், அதற்கு என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் கர்நாடகா மாநில கிரிக்கெட் வாரியம் குழப்பத்தில் இருந்துவருகிறது.

இதற்கிடையில் சமூகவலைதளத்தில் கருத்திட்டு வரும் கிரிக்கெட் ரசிகர்கள், ”பெங்களூர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போட்டிகள் நடந்தால், அதிகமாக தண்ணீர் பயன்படுத்தப்படும், அதனால் போட்டிகளை நடத்தாதீர்கள் அல்லது வேறு இடத்திற்கு மாற்றுங்கள்” என்ற பதிவுகளை கடந்த இரண்டு நாட்களாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தவிவகாரம் குறித்து சமீபத்தில் பதிவிட்டுவரும் ரசிகர்கள், “தண்ணீர் பற்றாக்குறை காரணமாக RCB-ன் ஹோம் மேட்ச்கள் பெங்களூருவில் இருந்து மாற்றப்படவிருக்கிறது. நகரம் தற்போது பெரும் தண்ணீர் நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும் நிலையில், பெங்களூரில் நடக்கும் போட்டிகள் விசாகப்பட்டினம் மற்றும் கொச்சி முதலிய மாற்று இடங்களுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது” என்று பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கர்நாடகா மாநில கிரிக்கெட் வாரியம் விரைவில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் தண்ணீர் பிரச்னையால் போட்டிகள் தடைபடாது என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்றுவரும் பெரும்பாலான போட்டிகள் பெங்களூர் ஸ்டேடியத்தில் தான் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.