இம்ரான் தாஹிர் X
கிரிக்கெட்

ஓடினார்.. ஓடினார்! 500 டி20 விக்கெட்டுகள்! 44 வயதில் இமாலய சாதனை படைத்த இம்ரான் தாஹிர்!

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய அதிகவயது வீரராக மாறி சாதனை படைத்துள்ளார் இம்ரான் தாஹிர்.

Rishan Vengai

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த லெக் ஸ்பின்னராக வலம்வந்த இம்ரான் தாஹிர், தன்னுடைய 32 வயதில் தான் சர்வதேச கிரிக்கெட்டிலேயே அறிமுகமானார். முதல்தர கிரிக்கெட் மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடி 784, 369 விக்கெட்டுகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை 20 டெஸ்ட் போட்டிகள், 107 ஒருநாள் போட்டிகள் மற்றும் 38 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

சர்வதேச வடிவில் மொத்தமாக 293 விக்கெட்டுகளை வீழ்த்தி ஓய்வுபெற்ற இம்ரான் தாஹிரை, அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்து 39 வயதில் மீண்டும் சென்னை சூப்பர் சிங்ஸ் அணியில் 2018 ஐபிஎல் தொடரில் வாய்ப்பளித்தார் கேப்டன் எம்எஸ் தோனி. சென்னை சூப்பர் சிங்ஸ் அணியின் கீ பவுலராக செயல்பட்ட இம்ரான் தாஹிர் 2018 மற்றும் 2021 ஐபிஎல் கோப்பைகளை வென்ற சென்னை அணியில் இடம்பெற்றிருந்தார்.

இம்ரான் தாஹிர்

தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள டி20 லீக் போட்டிகளில் விளையாடிவந்த இம்ரான் தாஹிர், டி20 கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இமாலய சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

500 டி20 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த இம்ரான் தாஹிர்!

பங்களாதேஷ் பிரீமியர் லீக் 2024 தொடரில் இன்று நடைபெற்ற ரங்பூர் ரைடர்ஸ் மற்றும் குல்னா டைகர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய இம்ரான் தாஹிர் குல்னா டைகர்ஸ் அணியின் டாப் 6 பேட்டர்களில் ஐந்து பேரின் விக்கெட்டை வீழ்த்தி ஒரு அசத்தலான வெற்றியை தேடித்தந்தார். 4 ஓவர்கள் வீசி வெறும் 26 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இம்ரான் தாஹிரின் அசத்தலான பவுலிங்கால் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ரங்பூர் ரைடர்ஸ் அணி.

இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 500வது விக்கெட்டை வீழ்த்தி ஒரு இமாலய சாதனை பட்டியலில் இணைந்துள்ளார் இம்ரான் தாஹிர். இந்த சாதனையை நிகழ்த்தியவர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டுவைன் பிராவோ, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் மற்றும் விண்டீஸ் சுனில் நரைன் முதலிய 3 பவுலர்களுக்கு பிறகு 4வது பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.

இந்த வீரர்களில் அதிக வயதில் இச்சாதனையை நிகழ்த்திய ஒரே பவுலர் இம்ரான் தாஹிர் மட்டுமே. சாதனைக்கு வயது முக்கியமல்ல என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளார் இம்ரான் தாஹிர்.

டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீத்தியவர்கள்:

1. டுவைன் பிராவோ - வெஸ்ட் இண்டீஸ் - 624 விக்கெட்டுகள் - 40 வயது

2. ரசீத் கான் - ஆப்கானிஸ்தான் - 556 விக்கெட்டுகள் - 25 வயது

3. சுனில் நரைன் - வெஸ்ட் இண்டீஸ் - 532 விக்கெட்டுகள் - 35 வயது

4. இம்ரான் தாஹிர் - தென்னாப்பிரிக்கா - 500 விக்கெட்டுகள் - 44 வயது