icc pt desk
கிரிக்கெட்

ஐசிசியின் புதிய விதிமுறை: நாளைய போட்டியில் சோதனை முயற்சி அமல்!

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி முதல், ஐசிசியின் புதிய விதிமுறை சோதனை முயற்சியில் அமல்படுத்தப்படுகிறது.

Prakash J

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) என்பது கிரிக்கெட்டின் உலகளாவிய நிர்வாக அமைப்பாகும். உலகம் முழுவதும் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட்டின் நிர்வாகத்திற்கு ஐசிசியே பொறுப்பாகும். இதில் விளையாட்டின் விதிகள், சர்வதேச போட்டிகளின் திட்டமிடல் மற்றும் தேர்வு ஆகியவை அடங்கும்.

மேலும், உலகக்கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப், சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகளையும் நடத்துகிறது. இந்த நிலையில் வளர்ந்துவரும் 3 வகையான (ஒருநாள், டி20, டெஸ்ட்) கிரிக்கெட்டில் அவ்வப்போது புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது.

அந்தவகையில், அண்மையில் ஐசிசி புதிய விதிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை வீச பந்துவீச்சை மேற்கொள்ளும் அணி, அடுத்த ஓவரின் முதல் பந்தை வீசுவதற்கு 60 விநாடிகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது. அவ்வாறு 60 விநாடிகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் களநடுவர்கள் இரண்டுமுறை எச்சரிக்கை செய்வார்கள். ஒரு இன்னிங்ஸில் மூன்றாவது முறை 60 விநாடிகளுக்கு மேல் எடுத்துக்கொண்டால், பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என ஐசிசி புதிய விதிமுறையை அறிவித்தது. இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் ஐசிசியின் இந்த புதிய விதிமுறை சோதனை முயற்சியில் அமல்படுத்தப்படுவதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மத்தியப் பிரதேசம்: புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு!

இதுதொடர்பாக ஐசிசி, ‘இந்த புதிய ஸ்டாப் வாட்ச் விதிமுறை ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையே பந்துவீச்சை மேற்கொள்ளும் அணி எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் குறைக்கும். சர்வதேச கிரிக்கெட்டின் வேகத்தை அதிகப்படுத்த ஐசிசி தொடர்ச்சியாக புதிய விதிமுறைகளை வகுத்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை (டிசம்பர் 12) நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சீனா: பெண்ணின் கண்களில் இருந்து எடுக்கப்பட்ட 60 புழுக்கள்.. பாதிப்பு ஏற்பட்டது எதனால்?