இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. தொடரில் இந்திய அணி, 7 போட்டிகளிலும் வென்று முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. அதேநேரத்தில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழைய மல்லுக்கட்டி வருகின்றன.
அந்த வகையில், அரைஇறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும், அடுத்தசுற்றுக்கு முன்னேறுவதற்காகப் போராடிவரும் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும் நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
அந்தவகையில், இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை முதலில் பேட் செய்ய பணித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ட்ராவிஸ் ஹெட் 2ஆவது ஓவரிலேயே 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்து டேவிட் வார்னரும் நிலைக்காமல் 15 ரன்களில் கிளம்பினார். இதனால் ஆஸ்திரேலிய அணி, தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் வந்த வீரர்களான ஸ்டீவன் ஸ்மித் மற்றும் லபுசேன் ஆகியோர் பொறுப்புணர்ந்து விளையாட ஆரம்பித்தனர்.
எனினும் இங்கிலாந்து பவுலர்கள், அவர்களையும் நீண்டநேரம் விளையாட விடவில்லை. ஸ்மித்தை 44 ரன்களிலும், லபுசேனனை 71 ரன்களிலும் வெளியேற்றி பெவிலியனுக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் கிரீன் மற்றும் ஸ்டோனிஸ் மட்டுமே ஓரளவுக்கு நல்ல ரன்களை எடுக்க, அந்த அணி 300 ரன்களைக் கடந்தது. கிரீன் 47 ரன்களில் வில்லி பந்துவீச்சில் போல்டானார். ஸ்டோனிஸ் 35 ரன்களில் வீழ்ந்தார்.
இறுதியில் அந்த அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்களை எடுத்தது. உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்றைய போட்டியில்தான், இங்கிலாந்து வீரர் வோக்ஸ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதற்கு முன்பு கடந்த 2019இல் அதிகபட்சமாக 3 விக்கெட்களையே வீழ்த்தியிருந்தார்.
இதையும் படிக்க: சுற்றிவளைத்து தாக்கும் இஸ்ரேல்: அழிவின் பிடியில் காஸா
பின்னர் கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வணியின் தொடக்க பேட்டர் ஜானி பேர்ஸ்டோ ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஜோஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். எனினும் மற்றொரு தொடக்க பேட்டரான டேவிட் மாலன், ஓரளவு ஆஸ்திரேலிய பந்துவீச்சைத் தாக்குப்பிடித்து விளையாடினார்.
ஆனால், அவரும் அரைசதம் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் மட்டுமே அவ்வணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 64 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
இதையும் படிக்க: “வஞ்சகத்தை தவிர காங்கிரஸ் கட்சி மக்களுக்கு எதையும் கொடுக்கவில்லை” பிரதமர் மோடி
இறுதியில் மொயின் அலியும் ஓரளவுக்கு நல்ல ரன்களை எடுத்தாலும், அவரால் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. அவர் 42 ரன்களில் அவுட்டான பிறகு, அவருக்குப் பிறகு களமிறங்கிய அனைத்து வீரர்களும் அணியின் வெற்றிக்காகப் போராடினர். ஆனாலும், இங்கிலாந்து அணியின் தோல்வி, மீண்டும் உறுதியானது. அவ்வணி 48.1 ஓவர்களில் 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதுடன், அரையிறுதிக்கான வாய்ப்பையும் உறுதிசெய்தது.
அதேநேரத்தில், இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்ததால் 2ஆவது அணியாக உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. மேலும், நடப்புத் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கும் தகுதி பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, உலகக்கோப்பை தொடரை தோல்வியுடன் தொடங்கிய மைதானத்திலேயே இன்றைய ஆட்டத்தையும் தோல்வியிலேயே முடித்துள்ளது.