இயன் சேப்பல் எக்ஸ் தளம்
கிரிக்கெட்

“ஐபிஎல் அணிகளால் சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஆபத்து” - எச்சரிக்கை விடுத்த ஆஸ்திரேலிய வீரர்!

Prakash J

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக ஐபிஎல் பார்க்கப்படுகிறது. இதில் ஆண்டுதோறும் 10 அணிகள் விளையாடி வருகின்றன. இதன்மூலம் அவ்வணிகள் மட்டுமல்லாது பிசிசிஐயும் நல்ல வருமானம் பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இதையறிந்தே பிற நாடுகளும் ஐபிஎல் போன்ற அணிகளை உருவாக்கி லாபம் பார்த்து வருகின்றன. குறிப்பாக சி.எஸ்.கே., மற்றும் மும்பை ஆகிய அணிகள் தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் அணிகளை வாங்கி லாபம் பார்த்து வருகின்றனர்.

ipl cup, chennai ground

இந்த வழிமுறையைத் தெரிந்துகொண்ட ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள அணியை வாங்குமாறு ஐபிஎல் அணிகளை வற்புறுத்தி வருகிறது. இதன்மூலம் பெரும் லாபம் பார்க்க முடியும் என ஒவ்வொரு கிரிக்கெட் வாரியங்களும் நினைக்கிறது. ஏற்கெனவே துபாய், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளில் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்தும் தாங்கள் நடத்தும் தி ஹெண்ட்ரட் தொடரில் உள்ள அணிகளை ஐபிஎல் அணிகள் வாங்க கோரிக்கை விடுத்து இருக்கிறது.

இதையும் படிக்க:'அமெரிக்காவின் சதியே காரணம்' | குற்றஞ்சாட்டிய ஷேக் ஹசீனா.. மறுத்த மகன்.. வங்கதேசத்தில் நடப்பது என்ன?

இந்த நிலையில், ஐபிஎல் அணிகளால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் இயன் சேப்பல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர், “வெற்றிகரமான ஐபிஎல் அணிகளை வைத்து தங்கள் நாட்டில் நடக்கும் கிரிக்கெட் தொடருக்கான அணியை வாங்க ஒவ்வொரு கிரிக்கெட் வாரியங்களும் நடவடிக்கை எடுத்து வருகிறது. புத்திசாலித்தனமான உரிமையாளர்கள் சிறந்த தரவரிசை வீரர்களை நீண்ட ஒப்பந்தங்களில் தங்களுக்காக விளையாட கையெழுத்திட தொடங்கியுள்ளனர். இது கிரிக்கெட் நிர்வாகங்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் வீரர்கள் தங்களுடைய நாட்டு வாரியத்தைவிட ஐபிஎல் உரிமையாளர்களிடம் ஈடுபாட்டில் இருக்கக்கூடும். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிச்சயம் ஆபத்துதான் ஏற்படும்.

பெரும்பாலான நாடுகளில் விளையாட்டுக்கு பணம் தேவைப்படும் நிலையில் ஐபிஎல் உரிமையாளர்களிடம் அதிகமான நிதி இருக்கிறது. அதனால் இப்படி நடப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் இங்கே கடந்த சில தசாப்தத்துக்கு முன்பாகவே விளையாட்டுக்கான நீண்ட கால வரைபடத்தை அந்தந்த நாட்டு வாரியங்கள் உருவாக்கத் தவறியதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை சமாளிக்க அவர்கள் குறைந்தபட்ச திட்டத்தை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில், வருங்காலத்தில் இந்த விளையாட்டு முழுக்க முழுக்க பணக்கார உரிமையாளர்களால் நடத்தப்படும் டி20 ஆட்டமாக மாறிவிடலாம்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க: சரிந்த வேகத்தில் மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த அதானிகுழும பங்குகள்! நிலவரம் என்ன?