Ajaz Patel Kunal Patil
கிரிக்கெட்

"ரிஷப் பன்ட்டுக்கு தனி திட்டம் தீட்டினேன்" - மும்பையில் மீண்டும் கலக்கிய அஜாஸ் படேல்

மும்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வெளிநாட்டு ஸ்பின்னர் என்ற பெருமையே அஜாஸ் படேல் வசம் இருக்கிறது.

Viyan

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களைப் பதம் பார்த்து நியூசிலாந்து அணி தொடரை கிளீன் ஸ்வீப் செய்யக் காரணமாக அமைந்தார் அஜாஸ் படேல். கடந்த முறை மும்பையில் ஆடியபோது ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்தவர், இந்த முறை மொத்தம் 11 விக்கெட்டுகள் வீழ்த்தி தன் அணி வெற்றி பெற உதவினார். போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பிக்கொண்டிருந்த ரிஷப் பன்ட்டின் விக்கெட்டுக்கு தனி திட்டம் தீட்டியதாகக் கூறியிருக்கிறார் அஜாஸ்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி யாரும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 12 ஆண்டுகள் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரைத் தோற்காத இந்திய அணியை 3-0 என வைட்வாஷ் செய்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி இந்தியாவில் வைட்வாஷ் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது நியூசிலாந்து ஸ்பின்னர்கள். புனேவில் நடந்த இரண்டாவது போட்டியில் மிட்செல் சான்ட்னர் அசத்த, மூன்றாவது போட்டியில் தன் முத்திரையைப் பதித்தார் அஜாஸ் படேல்.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டியவர், இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுத்தார். 147 என்ற இலக்கை சேஸ் செய்த இந்திய அணி எப்படியும் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜாஸ் தன் அசத்தலான பந்துவீச்சால் அதற்கு முட்டுக்கட்டை போட்டார். நன்கு திரும்பிய ஆடுகளத்தில் தன் யுக்திகளை சிறப்பாக அரங்கேற்றினார் அவர்.

வெற்றிக்குப் பிறகு தன் செயல்பாட்டைப் பற்றிப் பேசிய அவர், "ஸ்பின் பௌலிங்கைப் பொறுத்தவரை எல்லாம் உங்கள் ரிதமைப் பொறுத்தது தான். நீங்கள் சரியான ரிதமில் இருந்தால், அதை முடிந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். சூழ்நிலைகள் உங்களுக்குச் சாதகமாக இருக்கும்போது அதை நீங்கள் இரண்டு கைகளிலும் எடுத்துக்கொள்ளவேண்டும். அதை சாதகமாகப் பயன்படுத்தி உங்கள் அணிக்கு நல்ல பங்களிப்பைக் கொடுக்கவேண்டும்" என்றார்.

மேலும் பேசிய அவர், "உணவு இடைவேளைக்குப் பிறகு ஒரு கட்டத்தில் பந்து அதிகமாக சுழலத் தொடங்கியது. அது எனக்கு அதிக நம்பிக்கை கொடுத்தது. அதனால் நான் சற்று புத்திசாலித்தனமாக செயல்பட்டேன். பந்தை நன்கு தூக்கி வீசியதோடு மட்டுமல்லாமல், காற்றில் நன்கு திரும்பும் வகையில் பந்துவீசினேன். நான் அதுமட்டுமே முயற்சி செய்தேன். அதற்கு மேல் அதிகம் எதுவும் செய்ய நினைக்கவில்லை. சிம்பிளாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். காற்றில் நன்கு பந்தைத் திரும்ப வைப்பதிலும், பேட்ஸ்மேன்களை விட ஒரு படி முன்னாள் இருக்கவேண்டும் என்பதிலும் தான் என் கவனம் அதிகம் இருந்தது" என்று கூறினார்.

என்னதான் அஜாஸ் 11 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பண்ட் விக்கெட்டை வீழ்த்தியது தான் ஆட்டத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 64 ரன்கள் விளாசிய பண்ட், ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் கொண்டு சென்றார். ஆனால், அவரை வெளியேற்றி ஆட்டத்தின் போக்கை மாற்றினார் அஜாஸ். பண்ட் அவுட் ஆனதில் நிறைய சர்ச்சைகள் எழுந்தது. பந்து பேட்டில் பட்டதா, இல்லை பேட் பேடில் பட்டதால் சத்தம் வந்ததா என்ற கேள்வி கடைசி வரை தொடரத்தான் போகிறது. ஆனால், அந்த விக்கெட் நியூசிலாந்தை வெற்றி பெற வைத்துவிட்டது. வெற்றி பெற வைத்தார் அஜாஸ்.

அஜாஸின் பந்துவீச்சும் அப்படியான சிக்கல்களை பண்ட்டுக்கு ஏற்படுத்தியது. அவர் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தாலும், தன் வேகத்தை மாற்றி சில சிக்கல்களை ஏற்படுத்தினார் பண்ட். பந்தை வெளியே, உள்ளே என மாற்றினார். ஒருவழியாக அந்த வலையில் கடைசியில் பண்ட்டும் வீழ்ந்தார்.

போட்டிக்க்குப் பிறகு பண்ட் விக்கெட்டை வீழ்த்தியது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அஜாஸ், "ரிஷப் பண்ட்டுக்கு நான் மற்றவர்களுக்கு வீசியதைப் போலவே பந்துவீச முடியாது என்பதைப் புரிந்துகொண்டேன். மற்றவர்களுக்குப் போட்டதைப் போலவே நல்ல பந்துகள் வீசக்கொண்டிருந்தாலும், அவர் என்னை வெளியே தான் அடித்துக்கொண்டிருப்பார். அதனால் ஒரு புதிய திட்டத்தைத் தீட்டினேன். கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தேன். அவரை விட ஒரு முன்னாள் இருக்கவேண்டும் என்று நினைத்தேன்" என்று கூறினார்.

இப்போது மும்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வெளிநாட்டு ஸ்பின்னர் என்ற பெருமையே இவர் வசம் இருக்கிறது. தன் பூர்வீக மண்ணில் தொடர்ந்து முத்திரை பதித்துக்கொண்டே இருக்கிறார் அஜாஸ்!