ரித்திமான் சாஹா முகநூல்
கிரிக்கெட்

"கங்குலி வற்புறுத்தியதால்தான் இந்த சீசன் விளையாட முடிவு செய்தேன்" - ரித்திமான் சாஹா

ரித்திமான் சாஹா தான் இந்த சீசன் விளையாடும் மனநிலையிலேயே இல்லை என்றும், முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி வற்புறுத்தியதால் தான் விளையாடியதாலும் கூறியிருக்கிறார்.

Viyan

அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ரித்திமான் சாஹா. இந்த ரஞ்சி சீசனில் பெங்காலுக்காக ஆடி வரும் இவர், சீசன் முடிந்ததும் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவர் இந்த சீசன் விளையாடும் மனநிலையிலேயே இல்லை என்றும், முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி வற்புறுத்தியதால் தான் விளையாடியதாலும் கூறியிருக்கிறார் சாஹா.

"நான் இந்த சீசன் விளையாடும் மனநிலையிலேயே இல்லை. ஆனால் சவுரவ் கங்குலியும் என் மனைவியும் என்னை வற்புறித்தினார்கள். இரண்டு ஆண்டுகள் திரிபுரா அணிக்காக ஆடிவிட்ட நிலையில், பெங்கால் அணியில் என் கரியர் முடியவேண்டும் என்று கூறினார்கள். அதனால் தான் நான் இந்த சீசன் விளையாட முடிவெடுத்தேன்" என்று தன் ஓய்வு பற்றிக் கூறினார் சாஹா.

கங்குலியைப் போலவே சாஹாவும் பெங்காலைச் சேர்ந்தவர் என்பதால், சாஹா தன் கரியரை பெங்கால் அணியோடு முடிக்கவேண்டும் என்று நினைத்திருந்திருக்கிறார் கங்குலி. கடந்த 2 சீசன்களாக திரிபுரா அணிக்காக சாஹா விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த முடிவு பற்றிப் பேசிய சாஹா, "கடந்த ஒரு ஆண்டாக எனக்கு நானே அதிக அழுத்தம் கொடுத்துக்கொண்டேன். என்னுடைய உடல்நிலை காரணமாக, என் காயங்கள் காரணமாக என்னால் முழு சீசனும் ஆட முடியாது. அதனால் தான் நான் மிகவும் முக்கியமான இந்த ஃபார்மட்டைத் தேர்வு செய்தேன். தொடர்ந்து விளையாடுவது நிச்சயம் கடினமாகத்தான் இருக்கப்போகிறது. ஆனால் நான் நிச்சயம் விளையாட முயற்சி செய்வேன். நாங்கள் எப்படியும் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுவோம் என்று நம்புகிறேன். இல்லையெனில் நான் என் கரியரை ஈடன் கார்டனில் முடித்துக்கொள்வேன்" என்று கூறினார்

மேலும், சாஹா தன் இந்திய கிரிக்கெட் கரியரை நினைத்து வருந்தியது உண்டா என்று கேட்கப்பட்டது. தோனிக்கும், பன்ட்டுக்கும் இடையே அவரால் அதிக போட்டிகளில் விளையாட முடியாத நிலையில், அதுபற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சாஹா, "நான் எந்த வகையிலும் அப்படி நினைக்கவில்லை. எத்தனையோ வீரர்கள் அதீத திறமை இருந்த நிலையில், இந்திய அணிக்காக விளையாடாமலேயே ஓய்வு பெற்றிருக்கிறார்கள். அமோல் மஜும்தார், பத்மகார் ஷிவால்கர் போன்றவர்களெல்லாம்! அப்படியிருக்கையில் நான் இந்தியாவுக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருப்பதைப் பெருமையாய் நினைக்கிறேன்

நான் ஆரம்பித்தபோது விக்கெட் கீப்பர் தான். நான் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விரேந்திர சேவாக், விவிஎஸ் லக்‌ஷ்மண், விராட் கோலி ஆகியோரைப் போலவெல்லாம் ஆகப்போவதில்லை என்று எனக்கு நன்கு தெரியும். நான் சிறு வயதில் இருந்து செய்த ஒரு விஷயத்துக்காக நற்பெயர் எடுக்கவேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். அதனால் தான் விக்கெட் கீப்பிங்கில் அதிக கவனம் செலுத்தினேன்"என்று கூறினார் அவர். இந்தியாவுக்காக அவர் 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1353 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும், 9 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியிருக்கிறார். கடைசியாக இந்திய அணிக்காக 2021ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடினார் அவர்.

2021ம் ஆண்டு அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாக சாஹாவிடம் கூறியிருக்கிறார்.

அதுபற்றிக் கூறிய சாஹா, "அந்தக் கதவு அப்போது மூடியிருந்தாலும், டொமஸ்டிக் கிரிக்கெட், ஐபிஎல் போன்ற தொடர்கள் இருந்தன. அதனால் என்னுடைய உத்வேகத்தை நான் இழந்திடவில்லை. அதன்பிறகு நான் கிட்டத்தட்ட 3-4 ஆண்டுகள் ஆடிவிட்டேன். நான் எதற்காக விளையாடத் தொடங்கினேன்? நான் இந்த விளையாட்டை நேசித்ததால். கடந்த ஆண்டு நான் இந்த விளையாட்டை விரும்புவதை நிறுத்திவிட்டேன். இதிலிருந்து விலக முடிவு செய்துவிட்டேன். இந்த சீசனுக்குப் பிறகு முற்றிலும் விலகப் போகிறேன்" என்று கூறினார்.

அடுத்த திட்டமாக கோச்சிங்கில் கவனம் செலுத்த திட்டம் இருக்கிறதா என்று கேட்கப்பட, "பயிற்சி கொடுப்பது பற்றி இப்போதைக்கு நான் எதுவும் யோசிக்கவில்லை. ஒருவேளை பெங்கால் அணியோ, இல்லை வேறு ஏதேனும் அணியோ அழைத்தால் நிச்சயம் அதுபற்றி யோசிக்கலாம். இல்லையெனில் குடும்ப வாழ்க்கையை கவனிக்கவேண்டியதுதான். குழந்தையில் இருந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டே தான் இருக்கிறேன். வேறு எதுவுமே செய்யவில்லை. என்னுடைய கிரிக்கெட் அறிவை நான் நிச்சயம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதை எங்கள் ஊரில் உள்ள சில அகாடெமிகளில் ஏற்கெனவே நடைமுறைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன்" என்று கூறினார் அவர்.

அதேசமயம் இளம் கீப்பர்களுக்குத் தொடர்ந்து தன்னால் முடிந்த உதவிகளை செய்துகொண்டிருக்கிறார் சாஹா. "நான் பெண்கள் அணி கீப்பர்களோடு தொடர்ந்து பேசுவேன். நாங்கள் நிறைய உரையாடுவோம். கடந்த ஐபிஎல் தொடரின்போது துருவ் ஜூரெல் என்னுடன் பேசினார். நாங்கள் இணைந்து விளையாடியபோது ரிஷப் பண்ட் தொடர்ந்து ஆலோசித்திருக்கிறார். எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. அவர் அவருடைய அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொள்வார். நானும் என்னால் முடிந்த அளவுக்கான விஷயங்களை அவரோடு பகிர்ந்துகொள்வேன்" என்று அதுபற்றிப் பேசினார் அவர்.