பெண்களுக்கான ஆஷஸ் தொடரில் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றிருந்த நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வென்று தொடரை சமன் செய்திருக்கிறது இங்கிலாந்து. 4 புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தும் ஷார்ட் ஃபார்மட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தடுமாறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
ஆண்கள் ஆஷஸ் போலவே ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையில் ஆஷஸ் தொடர் நடைபெறுவது வழக்கம். 1934-35 சீசன் முதல் நடந்து வந்த பெண்கள் ஆஷஸ், 2010-11 சீசன் வரை டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் டெஸ்ட் போட்டிகள் மட்டும் ஆடப்பட்டபோது குறைந்தபட்சம் 3 டெஸ்ட் போட்டிகளாவது இந்தத் தொடரில் நடந்தது. நாளைடைவில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் பிரசித்தி பெற்றதால் ஒருகட்டத்தில் ஒற்றை டெஸ்ட் போட்டி மட்டுமே நடந்தது. அதனால் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று ஃபார்மட்டும் பெண்கள் ஆஷஸில் இணைக்கப்பட்டது. ஒவ்வொரு போட்டிக்கும் புள்ளிகள் ஒதுக்கப்படும். ஒட்டுமொத்தமாக எந்த அணி அதிக புள்ளிகள் பெறுகிறதோ அந்த அணிக்கு ஆஷஸ் கோப்பை அளிக்கப்படும்.
டெஸ்ட் போட்டியை வென்றால் 4 புள்ளிகள். ஒருவேளை டிரா ஆனால் இரண்டு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்படும். ஒவ்வொரு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு 2 புள்ளிகள் கொடுக்கப்படும். இந்த பெண்களுக்கான ஆஷஸ் என்ற முறை தொடங்கியதும் முதல் இரண்டு தொடர்களையும் இங்கிலாந்து அணியே வென்றிருந்தது. ஆனால் அதன்பிறகு ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியது. 2015, 2019, 2021-22 ஆஷஸ் தொடர்களை ஆஸ்திரேலிய அணி வென்றது. 2017-18 ஆஷஸ் டிரா ஆனது.
இந்நிலையில் 2023 பெண்கள் ஆஷஸ் கடந்த ஜூன் 22ம் தேதி தொடங்கியது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 473 ரன்கள் குவித்தது. அனபெல் சதர்லேண்ட் சதமடித்து அசத்தினார். அடுத்து ஆடிய இங்கிலாந்தும் சிறப்பாக விளையாடியது. டேமி பூமான்ட் இரட்டை சதமடிக்க 463 ரன்கள் அடித்தது அந்த அணி. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 257 ரன்கள் எடுத்தது. இரண்டு இன்னிங்ஸ்களிலுமே 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் இளம் ஸ்பின்னர் சோஃபி எகில்ஸ்டன்.
268 என்ற இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து அணி ஆஷ் கார்ட்னரின் சுழலுக்கு சிக்கி 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் எடுத்திருந்த கார்ட்னர், இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி மிரட்டினார். இறுதியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. அதனால் 4 புள்ளிகள் முன்னிலை பெற்றது அந்த அணி.
அடுத்தது 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடர் தொடங்கியது. டெஸ்ட் போட்டியில் சிறப்பாகவே செயல்பட்டிருந்தாலும் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது. அதனால் டெஸ்ட் போட்டியில் விட்டதை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியது இங்கிலாந்து அணி. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 153 ரன்கள் எடுக்க, ஒரு பந்து மீதமிருக்க அந்த இலக்கை சேஸ் செய்தது ஆஸ்திரேலியா. இந்த இரு புள்ளிகளையும் சேர்த்து 6-0 என முன்னிலை பெற்றது ஆஸ்திரேலியா. அடுத்து மீதமிருந்தது 5 ஷார்ட் ஃபார்மட் போட்டிகள். அதாவது 10 புள்ளிகள். அதில் 2 வெற்றிகள் பெற்றாலே, ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை வென்றுவிடும். அதனால், அது நிச்சயம் நடந்துவிடும் என்றே எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் சரியான நேரத்தில் மீண்டெழுந்தது இங்கிலாந்து அணி.
இரண்டாவது டி20 போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி, கடைசிப் போட்டியை DLS முறையில் வென்று டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. அதன்மூலம் 6-4 என ஆஸ்திரேலியாவுடனான இடைவெளியைக் குறைத்தது.
அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியது. முதல் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெல்ல, தொடர் உச்சகட்ட பரபரப்பை அடைந்தது. ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியை 3 ரன்களில் வென்றது ஆஸ்திரேலியா. இதற்கு மேல் இங்கிலாந்தில் ஆஸ்திரேலியாவை விட அதிக புள்ளிகள் பெற முடியாது என்பதாலும், முந்தைய ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றிருந்ததாலும் அந்தக் கோப்பையை அந்த அணி தக்கவைத்துக்கொண்டது. இருந்தாலும் கடைசிப் போட்டியை வென்று இந்தத் தொடரையும் கைப்பற்ற அந்த அணி முனைந்திருந்தது. ஆனால் நேட் ஷிவர்-பிரன்ட்டின் அசத்தல் சதத்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இரு அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் ஆஷஸ் தொடரை முடித்தன.
புள்ளிகள் அடிப்படையில் ஆஷஸ் நடக்கத் தொடங்கியதில் இருந்து டெஸ்ட் போட்டியை வென்ற அணி, தொடரை வெல்லாமல் இருந்ததில்லை. ஆனால் இம்முறை பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டியை வென்றும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கோட்டை விட்டிருக்கிறது.
அந்த அணியின் கேப்டன் மெக் லேனிங் இல்லாதது நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு இழப்பு தான். அவருடைய பேட்டிங் அனுபவத்தை அந்த அணி பெருமளவு இழந்திருந்தது. அவர் இடத்தை ஒரு மிடில் ஆர்டர் பேட்டர் கொண்டு நிரப்பாமல் இளம் அதிரடி ஓப்பனர் ஃபீபி லிட்ச்ஃபீல்டை பரிசோதித்துப் பார்த்தது அந்த அணி. அதனால் வழக்கமான ஓப்பனர் பெத் மூனி மிடில் ஆர்டருக்கு மாறினார். மூனி ஓரளவு நன்றாகவே ஆடியிருந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்த முயற்சி பெரிய பலன் கொடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அந்த அணியின் மிடில் ஆர்டரில் லேனிங் கொடுக்கும் அந்த திடத் தன்மை சற்றுத் தவறியது போலவே இருந்தது.
அதை விடவும் அவருடைய கேப்டன்சியை ஆஸ்திரேலியா தவறவிட்டது போலவே இருந்தது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. லேனிங் நிச்சயமாக அவரது பௌலர்களை வேறு விதமாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அதுதான் ஆஸ்திரேலியாவின் இந்த சொதப்பலுக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், இங்கிலாந்து அணியின் செயல்பாடும் மிகச் சிறப்பாகவே இருந்தது.
அவர்களின் கேப்டன் ஹெதர் நைட் முதல் ஒருநாள் போட்டியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தாரெனில், சூப்பர் ஸ்டார் ஆல்ரவுண்டர் நேட் ஷிவர்-பிரன்ட் கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்தினார். சோஃபி எகில்ஸ்டன் எப்போதும்போல் விக்கெட் வேட்டை நடத்தினார். இந்த வழக்கமான பெர்ஃபாமர்கள் கடந்து லாரன் பெல், அலீஸ் கேப்ஸி போன்ற இளம் வீரர்கள் தேவையான நேரத்தில் தங்களின் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அணிக்கு உதவினர். வெல்லவே முடியாத அணியாகக் கருதப்பட்ட ஆஸ்திரேலியாவை இரு தொடர்களிலும் இங்கிலாந்து வீழ்த்தியிருப்பது அந்த அணியையும் வெல்ல முடியும் என்று காட்டியிருக்கிறது.