ஆகாஷ் தீப் pt web
கிரிக்கெட்

இங்கிலாந்தை அதிர வைத்த ஆட்டம்... பட்ட கஷ்டங்களை எல்லாம் விக்கெட்களாக அறுவடை செய்யும் ஆகாஷ் தீப்!

ஆகாஷ் தீப்பிற்கு விதி வேறு ஒன்றை வாழ்வில் காட்டியது. கிரிக்கெட்டில் தனது காலடியை மெதுவாக வைத்த சில மாதங்களில் அடுத்தடுத்த அதிர்ச்சிகள் ஆகாஷை தாக்கின.

Angeshwar G

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் 4 ஆவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள JSCA இண்டெர்நேசனல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியை இன்றைய போட்டியில் அறிமுகமான ஆகாஷ் தீப் அதிரவைத்துள்ளார்.

பும்ராவிற்கு பதிலாக அறிமுகமாகியுள்ள ஆகாஷ் தீப் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான Zak Crawley, Ben Duckett, Ollie Pope என மூன்று வீரர்களையும் வெளியேற்றினார். அப்போது அரண்ட இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் நிதானமான ஆட்டத்தால் தற்போது சற்றே மீண்டு வருகிறது.

அடுத்துவரும் நாட்களில் ஆகாஷ் தீப் போன்ற வேகப்பந்துவீச்சாளருக்கு ஏற்ற வகையில் ராஞ்சி ஆடுகளத்தின் தன்மையும், காலநிலையும் மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதால் அவரை இந்திய அணி சேர்த்துள்ளது.

யார் இந்த ஆகாஷ்தீப்?

பீகார் மாநிலத்தில் உள்ள சாசரத்தில் டிசம்பர் 15, 1996 ஆம் ஆண்டில் பிறந்தவர் ஆகாஷ் தீப். அவருக்கு சிறுவயது முதலே கிரிக்கெட்டின் மீது தீராத காதல். ஏழ்மையான குடும்பத்தை பின்னணியாக கொண்ட ராம்ஜி சிங்தான் ஆகாஷ்தீப்பின் தந்தை. அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்த ராம்ஜிக்கு தனது மகன் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதில் விருப்பமில்லை. ஆகாஷ் தனது கல்வியில் முழுக்கவனமும் செலுத்தி அரசுப்பணியில் சேர வேண்டும் என்றே விரும்பினார். இதனால் ஆகாஷ் தீப் கிரிக்கெட் விளையாடுவதற்கு அவர் தந்தையின் ஆதரவே அவருக்கு கிடைக்கவில்லை.

இருந்தபோதும் அவர் தனது கனவை நோக்கி அடுத்த அடியை எடுத்து வைத்தார். மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள துர்காபூருக்குச் சென்ற ஆகாஷ் தீப் அங்கு தனது உறவினர் ஒருவருடன் தங்கினார். அப்போது அவரது ஆதரவுடனே கிளப் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். அப்போது அவர் பேட்ஸ்மேனாகவே தனது விளையாட்டைத் தொடங்கினார். ஆனால் அவரது பயிற்சியாளர்களோ அவரை பந்துவீச்சாளராக உருமாற்றினர்.

அடுத்தடுத்து தாக்கிய சோகங்கள்

ஆனால் விதி ஆகாஷ் தீப்பிற்கு வேறு ஒன்றை வாழ்வில் காட்டியது. கிரிக்கெட்டில் தனது காலடியை மெதுவாக வைத்த சில மாதங்களில் அடுத்தடுத்த அதிர்ச்சிகள் ஆகாஷை தாக்கின. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரின் தந்தை உயிரிழந்திருந்தார். அடுத்த சில தினங்களுக்குள், உடல்நலக்குறைவு காரணமாக அவரது மூத்த சகோதரரும் உயிரிழந்துவிட்டார். இதன்பின் குடும்பத்தினை சுமக்க வேண்டிய பொறுப்பு ஆகாஷ்தீப்பிற்கு சென்றது. மீண்டும் கிராமத்திற்கே சென்றார். ஆனாலும் கிரிக்கெட் என்ற நெருப்பை தனக்குள் எரியவைத்துக்கொண்டே இருந்தார் ஆகாஷ். களத்தில் இறங்க மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது.

2016 ஆம் ஆண்டு அவர் தனது மூத்த சகோதரியுடன் தங்குவதற்காக டெல்லிக்கு சென்றார். ஆனால் கொல்கத்தா கிளப்பில் விளையாட நண்பர் அழைத்ததால் இரு மாதங்களில் மீண்டும் கொல்கத்தா திரும்பினார். அங்கு பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் (CAB) First-division லீக்கில் யுனைடெட் கிளப்பில் சேர்ந்தார். அங்கு பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் ராண்டேப் போஸின் வழிகாட்டலில் தனது பந்துவீச்சை மெருகேற்றிக்கொண்டார்.

விடாமுயற்சியால் கிடைத்த வெற்றி

தொடர்ந்து பெங்கால் U-23 அணியில் இடம்பெற்றார். ஆனால், முதுகில் ஏற்பட்ட காயம் மீண்டும் அவரின் கிரிக்கெட் வாழ்வை மீண்டும் பாதித்தது. இருப்பினும் தலைமை பயிற்சியாளராக இருந்த சௌராஷிஸ் லஹரியின் மேற்பார்வையில் மெல்ல மீண்டு வந்தார். வங்காள அணிக்காக 30 முதல்தர, 28 லிஸ்ட் ஏ, 41 டி20 போட்டிகள் என மூன்று வடிவ கிரிக்கெட்களிலும் விளையாடினார்.

2019 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபியில் அறிமுகமான அவர் 2020 மற்றும் 2023 ஆம் ஆண்டுகள் என இரண்டு சீசன்களிலும் பெங்கால் அணியின் அதிகபட்ச விக்கெட் டேக்கராக இருந்தார். 2019 - 2020 ஆம் ஆண்டு நடந்த ரஞ்சி போட்டியில் 35 விக்கெட்களை வீழ்த்தி ஷாபாஸ் அகமது உடன் அதிக விக்கெட் வீழ்த்தியவராக திகழ்ந்தார். ஆகாஷ் இதுவரை 104 முதல்தர விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியதன் மூலமாக கிடைத்த பணத்தை தனது தாயாருக்கு அனுப்பிவைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது தந்தை இறந்தபின் எனது குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்தது. நான் கொல்கத்தா சென்ற போது உள்ளூர் கிரிக்கெட் விளையாடத்தொடங்கினேன். அப்போது அதற்கான ஊதியம் கிடைத்தது எனக்கு மிகவும் புதியதாக இருந்தது. நான் சம்பாதித்த பணம் எவ்வளவாக இருந்தாலும் அதை என் அம்மாவுக்காக சேமிக்க முயற்சித்தேன். ஆனால் அது சொற்பமான தொகையாகவே இருந்தது” என தெரிவிக்கிறார்.

ஐபிஎல் தொடரில் ஆகாஷை பெங்களூர் அணி 20 லட்சத்திற்கு 2022-ம் ஆண்டு ஏலத்தில் எடுத்தது. ஆர்சிபி அணிக்காக அவர் விளையாடிய இரு சீசன்களில் 7 போட்டிகளில் 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவிற்காக 313 ஆவது டெஸ்ட் வீரராக அறிமுகமான அவர், தான் இத்தனை ஆண்டுகாலம் சந்தித்த கஷ்டங்களை எல்லாம் விக்கெட்களாக தற்போது அறுவடை செய்து வருகிறார். அறுவடை தொடரட்டும் ஆகாஷ்!