இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ஜூலை 3ம் தேதி முதல் ஜுலை 30ம் தேதிவரை நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. அதில் கஸ் அட்கின்ஸன்னின் 12 விக்கெட்டுகள் என்ற அபாரமான பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணியை இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்ஸ்கள் முடிவடைந்த நிலையில் ஒல்லி போப் சதத்தால் இங்கிலாந்து அணி 416 ரன்கள் குவித்தது.
அதனைத்தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி கவேம் ஹாட்ஜ் அடித்த 120 ரன்கள் ஆட்டத்தால் 457 ரன்கள் குவித்து 41 ரன்கள் முன்னிலை பெற்றது.
41 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்கத்திலேயே ரன்அவுட் மூலம் தன்னுடைய விக்கெட்டை 3 ரன்னில் பறிகொடுத்தார் ஜாக் கிராவ்லி. அதனைத்தொடர்ந்து வந்த அனைத்து வீரர்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடந்த இன்னிங்ஸில் அரைசதமடித்த பென் டக்கெட் 76 ரன்களும், சதமடித்த ஒல்லி போப் 51 ரன்களும் அடித்து அசத்த இங்கிலாந்து அணி வலுவான ஒருநிலையை எட்டியது.
அதற்குபிறகு 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஹாரி ப்ரூக் மற்றும் ஜோ ரூட் இருவரும் அணியை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச்சென்றனர். 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடியில், 13 பவுண்டரிகளை விரட்டிய ஹாரி ப்ரூக் 118 பந்துகளில் 100 ரன்களை பதிவுசெய்து அசத்தினார். இது அவருக்கு 23 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 5வது சதம் மற்றும் இங்கிலாந்து மண்ணில் முதல் சதமாகும். ஹாரி ப்ரூக் 109 ரன்களில் அவுட்டாகி வெளியேற, ஜோ ரூட் 80 ரன்களுடன் தொடர்ந்து விளையாடிவருகிறார்.
சமீபத்தில் ஹாரி ப்ரூக் குறித்து பேசியிருந்த ஜாம்பவான் பிரையன் லாரா, தன்னுடைய 400 ரன்கள் சாதனையை முறியடிக்க கூடிய வீரர்களில் ஹாரி ப்ரூக் பெயரை குறிப்பிட்டார். அவர் சொன்னதற்கு பிறகு சதமடித்து அசத்தியுள்ளார் ஹாரி ப்ரூக்.