Harry Brook Twitter
கிரிக்கெட்

மீண்டு வந்து ஆஸ்திரேலியாவை கதறவிட்ட இங்கிலாந்து! அதிவேகமாக 1,000 ரன்களை கடந்து ஹாரி ப்ரூக் சாதனை!

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில், 3வது போட்டியை வென்றுள்ள இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளது.

Rishan Vengai

இந்தியா பாகிஸ்தான் போட்டிகளை போல ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரானது மோதல்கள், அதிகப்படியான உணர்ச்சி பெருக்கு, விறுவிறுப்பான தருணங்கள் என ரசிகர்களை எப்போதும் சுவாரசியத்துடனே வைத்திருக்கும். 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி, 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி என இரண்டு அணி வீரர்களும் கடைசி நேரம் வரை வெற்றிக்காக முயற்சித்து கொண்டே இருப்பார்கள்.

டெஸ்ட் கிரிக்கெட்டை அதிகமான ரசிகர்கள் விரும்புவதற்கு காரணமாக ஆஷஸ் தொடரும் இருக்கிறது. அந்த வகையில் தற்போது நடக்கும் ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்திய நிலையில், மீண்டு வந்து ஆஸிக்கு பதிலடி கொடுத்துள்ளது இங்கிலாந்து அணி.

7 விக்கெட்டுகள் எடுத்து மாஸ் காட்டிய மார்க் வுட்!

முதல் இரண்டு ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் ஆஸி, இங்கி என இரண்டு அணிகளும் முழுவீச்சில் போட்டியிட்டன. ஆனால் பந்துவீச்சில் ஒருபடி மேலே இருந்த ஆஸ்திரேலிய அணி, 2 போட்டிகளின் வெற்றியையும் தட்டிச்சென்றது. நட்சத்திர பவுலரான ஜேமி ஆண்டர்சன் ஃபார்மில் இல்லாமல் போனது, இங்கிலாந்து அணிக்கு பாதகமாக போனது. இந்நிலையில் ஆண்டர்சனுக்கு பதிலாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மார்க் வுட்டை களமிறக்கியது இங்கிலாந்து அணி.

Mark Wood

3-வது டெஸ்ட்டில் களத்திற்கு வந்த மார்க் வுட், சிறந்த ஃபார்மில் இருக்கும் காவாஜாவின் ஸ்டம்புகளை பறக்கவிட்டு தரமான கம்பேக் கொடுத்தார். மேலும் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியை சோதித்த லோயர் மிடில் ஆர்டர் பேட்டர்களை களத்தில் நிற்கவே அனுமதிக்காத வுட், ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், அலெக்ஸ் கேரி என அத்தனை பேரையும் சொற்ப ரன்களில் வெளியேற்றி ஆஸ்திரேலியாவை 263 ரன்களில் ஆட்டமிழக்க வைத்தார். இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், பேட்டிங்கிலும் 3 சிக்சர்களை பறக்கவிட்டு முக்கியமான நேரத்தில் தேவையான ரன்களை எடுத்துவந்தார். முடிவில் இங்கிலாந்து அணி ஒரு த்ரில்லர் வெற்றியை பதிவு செய்ய காரணமாக இருந்த மார்க் வுட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்து உலக சாதனை!

மார்க் வுட் ஒருபக்கம் அசத்த... டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆயிரம் ரன்களை குறைவான பந்துகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார், இங்கிலாந்தின் 24 வயதான ஹாரி ப்ரூக். வெற்றிபெற்றே ஆகவேண்டிய போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், ஒருபுறம் நிலைத்து நின்று விளையாடிய ஹாரி ப்ரூக் போட்டியை இங்கிலாந்து அணிக்கு சாதகமாக மாற்றினார்.

அடுத்தடுத்து 9 பவுண்டரிகளை விரட்டிய ப்ரூக், அரைசதம் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுத்தார். ஒருவர் கூட அரைசதம் அடிக்காத நிலையில் கடைசிவரை நிலைத்து நின்று ஆடிய ப்ரூக் 75 ரன்கள் அடித்து, இங்கிலாந்தை வெற்றிக்கு அருகில் அழைத்துச்சென்று வெளியேறினார். இந்நிலையில் இந்த போட்டியில் புதிய சாதனையை தன்னுடைய பெயரில் எழுதினார் ஹாரி ப்ரூக். கடந்த சில மாதங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ப்ரூக், குறைவான பந்துகளில் ஆயிரம் டெஸ்ட் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்து அசத்தினார்.

இதற்கு முன்புவரை 1,140 பந்துகளில் இந்த சாதனையை எட்டி நியூசிலாந்தின் கொலின் டி கிராண்ட்ஹோம் முதலிடத்தில் இருந்தார். அதனை 1,058 பந்துகளில் முறியடித்து முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ப்ரூக். அடுத்தடுத்த இடத்தில் நியூசிலாந்தின் டிம் சவுத்தி 1,167 பந்துகள், இங்கிலாந்தின் தொடக்க வீரர் பென் டக்கெட் 1,168 பந்துகளுடன் இருக்கின்றனர்.