Hardik Pandya ICC
கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஹர்திக் விலகல்! உடற்தகுதி சோதனைக்கு பிறகே அடுத்த முடிவு!

Rishan Vengai

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி புனே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில், இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டது. கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் வீசிய ஓவரை கூட முடிக்க முடியாமல் பாதியிலேயே மைதானத்தை விட்டே வெளியேறினார் ஹர்திக். அந்த ஓவரின் மீதமுள்ள 3 பந்துகளை ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் விராட் கோலி வீசி முடித்துவைத்தார்.

Virat Kolhi

போட்டிக்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஹர்திக் பாண்டியாவிற்கு "பெரிய சேதாரம் எதுவும் இல்லை" என்று கூறினார். பின்னர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, 22ஆம் தேதி நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் இருந்தார். இருப்பினும் வரும் ஞாயிறுக்கிழமையன்று லக்னோவில் நடைபெறவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான போட்டியில் இடம்பெறுவார் என BCCI எதிர்பார்த்தது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் பங்கேற்க வாய்ப்பில்லை!

கடந்த 2019 உலகக்கோப்பை போட்டியிலும், 2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியிலும் இந்தியாவை இங்கிலாந்து அணி வீழ்த்தியிருந்தது. அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு சிறப்பான ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்டியா அதில் இடம்பெற்றால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருந்திருக்கும். ஆனால் துரதிருஷ்டவசமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஹர்திக் பாண்டியா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Hardik Pandya

காயத்திலிருந்து மீண்டுவரும் ஹர்திக் பாண்டியா சிறிய தசைநார் பாதிப்பால் இன்னும் முழுமையாக குணம்பெறாத நிலையில், அவர் முதலில் உடற்தகுதி டெஸ்ட்டுக்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறார். அந்த தேர்வுக்கு பிறகு மருத்துவ குழு முழுமையான அப்டேட் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா இல்லாத போது கடந்த போட்டியில் களமிறக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், இங்கிலாந்து போட்டியிலும் விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.