ரோகித் சர்மா கேப்டனாகும் வரை மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்லவில்லை. சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஹர்பஜன் சிங் போன்ற ஸ்டார் வீரர்கள் அணியில் இருந்தபோதும் கூட, 2013 ஐபிஎல் தொடரின் பாதியிலிருந்து ரிக்கி பாண்டிங் கையிலிருந்து கேப்டன்சி ரோகித் சர்மாவின் கைகளுக்கு வந்துசேர்ந்தது.
ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர் போன்ற ஸ்டார் பேட்டர்கள் இருந்தபோதும் கூட, 2013 ஐபிஎல் தொடரின் பைனலில் பலம் வாய்ந்த சென்னை அணிக்கு எதிராக இளம் வீரர்களை கொண்டு களமிறங்கிய ரோகித் சர்மா மும்பை அணிக்கு முதல் ஐபிஎல் கோப்பையை வென்றெடுத்தார். அதன்பிறகு 2013, 2015, 2017, 2019, 2020 என அடுத்தடுத்து 5 ஐபிஎல் கோப்பைகளை கேப்டனாக வென்ற ரோகித் சர்மா, 5 ஐபிஎல் கோப்பையை வென்ற முதல் ஐபிஎல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேடித்தந்தார்.
5 ஐபிஎல் கோப்பைகளை மும்பைக்காக வென்ற ஒரே கேப்டனாக ரோகித் சர்மா இருந்தபோதும் கூட, 2024 ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித்தை நீக்கிய MI நிர்வாகம், புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது. கேப்டன்சி மாற்றம் என்பது எல்லா அணியிலும் நிகழக்கூடிய ஒன்றாக இருந்தாலும், ஒரு சாம்பியன் கேப்டனை எப்படி வெளியேற்றக்கூடாதோ அப்படியான முறையில் ரோகித்தை மும்பை அணி வெளியேற்றியது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் கோவத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுகுறித்த விவாதங்கள் தொடர்ந்து ஆன்லைனில் அதிகமாகவே இருந்துவந்தது. ரோகித் மனைவி மும்பை தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் பதிவுக்கு கமெண்ட் செய்தது, ரசிகர்கள் மும்பை அணியை அன்ஃபால்லோவ் செய்தது மற்றும் ஹர்திக் பாண்டியா அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது என ஹர்திக் - ரோகித் இரண்டு பேரும் தொடர்ந்து வலைதள பேச்சில் இருந்துவருகின்றனர்.
இந்நிலையில் தான் மும்பை அணி கேப்டன்சி மாற்றம் குறித்தும், ரோகித் சர்மா குறித்தும் முதல் முறையாக பொதுவெளியில் ஹர்திக் பாண்டியா பேசியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் திங்கள் கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சருடன் இணைந்து பங்கேற்றார் ஹர்திக் பாண்டியா. அப்போது மும்பை இந்தியன்ஸ் கேப்டன்சி மாற்றம் குறித்தும், ரோகித் சர்மாவிடம் பேசினீர்களா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேசிய ஹர்திக் பாண்டியா, “ரோகித் சர்மாவின் கை இந்த சீசன் முழுவதும் என் தோளில் இருக்கும் என்று எனக்குத் தெரியும். அவரது கேப்டன்சியின் கீழ் நான் பத்து வருடங்கள் விளையாடியுள்ளேன், எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை" என்று ஹர்திக் கூறினார்.
“மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக மாறிய பிறகு ரோகித் சர்மாவிடம் பேசினீர்களா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்குபதிலளித்த அவர் “ஆமாம் மற்றும் இல்லை, அவர் இந்திய கேப்டனாக அதிகப்படியான சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால் அவருடன் பேச எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அவர் மும்பை அணியுடன் இணையும் போது நான் நிச்சயமாக பேசுவேன்” என்று பேசியுள்ளார்.
அத்துடன் ஜஸ்பிரிட் பும்ரா குறித்த கேள்விக்கு, “அவர் எங்கள் அணியில் உள்ள நம்பர் 1 பவுலர். மீண்டும் அவருடன் இணைந்து விளையாட ஆர்வமாக இருக்கிறேன். கடந்த ஆண்டு மும்பை அணி அவரை மிஸ் செய்தது. அவர் மீண்டும் அணிக்கு முழுவீச்சில் திரும்பியுள்ள நிலையில், இளைஞர்களுக்கு அவரது வழிகாட்டுதலை காண ஆர்வமுடன் இருக்கிறேன்” என்றார்.
“கசப்பை ஒதுக்கிவிடுங்கள். உண்மையில் நான் ரசிகர்களை மதிக்கின்றோம். அதேசமயம் விளையாட்டின் மீது கவனம் செலுத்த விரும்புகிறோம். என்னால் கண்ட்ரோல் செய்ய முடியாத விஷயத்தின் மீது கவனம் செலுத்துவதில்லை. அதேசமயம் ரசிகர்களுக்கு நேர்மையாக செயல்படுவேன். கருத்து சொல்ல அவர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. அவர்களுடைய கருத்துக்களுக்கு நான் மதிப்பு அளிக்கிறேன். அதேசமயம் சிறப்பாக செயல்படுவதில் கவனம் செலுத்த நாங்கள் விரும்புகிறோம்” என்றார்