hardik pandya X
கிரிக்கெட்

சாமி கும்பிட்டு தேங்காய் உடைத்து தொடங்கிய ஹர்திக்.. முதல்நாள் அனுபவம் குறித்து எமோசனல் பதிவு!

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், டிரெஸ்ஸிங் அறையில் சாமி போட்டோ வைத்து அதற்கு தேங்காய் உடைத்து துவங்கியுள்ளார் ஹர்திக் பாண்டியா.

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடரின் ஹைலைட் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது தான். 2022, 2023 ஐபிஎல் சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியை டைட்டிலுக்கும், இறுதிப்போட்டிக்கும் அழைத்துச்சென்ற ஹர்திக் பாண்டியாவை, குஜராத் அணியிலிருந்து வாங்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமித்துள்ளது மும்பை அணி நிர்வாகம்.

5 முறை கோப்பை வென்றுகொடுத்து சாம்பியன் அணியாக மாற்றிய ரோகித் சர்மாவை, இந்தமுறையில் வெளியேற்றியிருக்க கூடாது என்பதில் கோவமாக இருக்கும் ரோகித் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியா மீதான வெறுப்பை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்திவருகின்றனர். ஆனால் எடுத்த முடிவில் திடமாக இருக்கும் மும்பை அணி ஹர்திக் பாண்டியா தான் தங்களுடைய கேப்டன் என்பதில் உறுதியாக இருக்கிறது.

Hardik Pandya

ரோகித் சர்மா ஒரு வீரராக மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடுவாரா என்ற கேள்வி இருந்துவரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் கேம்ப்பில் இணைந்து தன்னுடைய பயிற்சியை தொடங்கியுள்ளார் ஹர்திக் பாண்டியா.

சாமி போட்டோ வைத்த ஹர்திக் பாண்டியா.. தேங்காய் உடைத்த பவுச்சர்!

ஹர்திக் பாண்டியாவின் வரவை தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருக்கும் மும்பை அணி, ”ஆரம்பிக்கலாம்” என்ற பதிவை பதிவிட்டு வரவேற்றுள்ளது. அந்தவீடியோவில், மும்பை டிரெஸ்ஸிங் அறைக்குள் செல்லும் ஹர்திக் பாண்டியா, ஒரு போட்டோ வைத்து அதற்கு மாலையிட்டு கோவிலாக மாற்றினார். பின்னர் அதற்கு தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தேங்காய் உடைக்க, பூஜையுடன் தொடங்கியுள்ளது ஹர்திக் தலைமையிலான மும்பை அணி.

அதற்கு பிறகு பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்ட ஹர்திக் பாண்டியா, முதல்நாள் அனுபவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “முதல் நாளில் பல உணர்வுகள், பல நினைவுகள் கிடைத்தது. பழைய நண்பர்களைப் பார்த்து, பழைய நல்ல நாட்களை மீட்டெடுக்கும் விசயங்கள் நடந்தன. இந்த அற்புதமான குழுவுடன் சேர்ந்து பயணிப்பதில் உற்சாகத்துடன் இருக்கிறேன். ஒரு அணியாக நமக்கு என்ன காத்திருக்கிறது என்பதற்கு முன், வாருங்கள் நம் வேலையை தொடங்குவோம் பல்தான்” என்று பதிவிட்டுள்ளார்.

ரோகித் சர்மா இன்னும் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளிவரவில்லை, இருப்பினும் ரோகித் சர்மாவின் வெளியேற்றம் குறித்து அவ்வப்போது அவருடைய மனைவி ரிதிகா மும்பை நிர்வாகத்திடம் கோவத்துடன் இருந்துவருகிறார். ரோகித் சர்மா மும்பை அணியில் ஒரு வீரராக விளையாடுவாரா என்ற கேள்விக்கு மத்தியில், சென்னை அணிக்கு வாருங்கள் ரோகித் என்று ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களும் தெரிவித்து வருகின்றனர்.