harbhajan singh pt
கிரிக்கெட்

“PAK இல்லாமல் இந்திய கிரிக்கெட்டால் வாழ முடியும்; எங்கள் வீரர்களை அனுப்ப மாட்டோம்!” - ஹர்பஜன் ஆவேசம்

”இந்திய அணி இல்லாமல் உங்களால் கிரிக்கெட்டில் தொடர்ந்து இருக்க முடிந்தால் இருங்கள், பாகிஸ்தான் இல்லாமல் இந்திய கிரிக்கெட்டால் தொடர்ந்து வாழமுடியும்.. பாதுகாப்பில்லை என்றால் எங்கள் வீரர்களை அனுப்ப மாட்டோம்” - ஹர்பஜன் சிங்

Rishan Vengai

கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை தவிர்த்து வருகிறது. 2008 ஆசியக்கோப்பைக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதில்லை, அதேபோல இரண்டு அணிகளும் பங்கேற்று விளையாடிய இருதரப்பு தொடர் கடந்த 2006-ம் ஆண்டு நடந்ததே கடைசியாக இருந்துவருகிறது.

இதற்கிடையில் பல தொடர்கள் பாகிஸ்தானில் நடைபெற்றாலும் இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகள் மட்டும் பொதுவான ஆடுகளங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாவிட்டால் பாகிஸ்தான் அணியும் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு இந்தியா வந்து விளையாடாது என்று அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது. ஆனாலும் ஐசிசியின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து உலகக்கோப்பையில் பங்கேற்றது.

இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறவிருப்பதால், இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என்று கூறப்படுகிறது. அதனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடவேண்டும் என ஷாகித் அப்ரிடி முதலிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர். ஆனால் பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை என்றால் இந்திய அணியை அனுப்ப மாட்டோம் என ஹர்பஜன் நேரலை நிகழ்ச்சியில் காட்டமாக கூறியுள்ளார்.

எங்கள் வீரர்களை அனுப்ப மாட்டோம்!

பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் 2025 சாம்பியன்ஸ் டிரோபியில் இந்திய அணி பங்கேற்க வேண்டும் என்ற பாகிஸ்தான் டிவி நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்பஜன் சிங், “இந்திய வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யாவிட்டால் எங்கள் அணியை அனுப்ப மாட்டோம்” என்று ஆவேசமாக பேசினார்.

நேரலை நிகழ்ச்சியில் பேசிய அவர், “பாகிஸ்தானில் எங்கள் வீரர்கள் பாதுகாப்பாக இல்லை என்றால், நாங்கள் அணியை அனுப்ப மாட்டோம். இந்திய அணி இல்லாமல் நீங்கள் விளையாட விரும்பினால் விளையாடுங்கள், இல்லையென்றால் வேண்டாம். ஆனால் பாகிஸ்தான் இல்லாமல் இந்திய கிரிக்கெட்டால் தொடர்ந்து வாழ முடியும். உங்களாலும் இந்திய கிரிக்கெட் இல்லாமல் தொடர்ந்து வாழ முடிந்தால் நீங்கள் அதை செய்யுங்கள்" என்று ஆவேசமாக பேசினார்.

Ind vs Pak

இந்த விவகாரம் குறித்து இன்னும் பிசிசிஐ மற்றும் ஐசிசி இரண்டு தரப்பும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் வெளியாகியிருக்கும் தகவலின் படி, இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளை பொதுவான ஆடுகளங்களில் நடத்த ஐசிசி முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.