Maxwell - Warner Cricinfo
கிரிக்கெட்

40 பந்தில் அதிவேக சதம் அடித்து ’மேக்ஸ்வெல்’ சாதனை! 6 சதங்கள் மூலம் சச்சினை சமன்செய்த வார்னர்!

உலகக்கோப்பை வரலாற்றில் 40 பந்துகளில் சதமடித்து ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Rishan Vengai

தொடர் தோல்விகள்! புள்ளிப்பட்டியலில் 10வது இடம்!

நடப்பு உலகக்கோப்பையின் முதலிரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததை அடுத்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட ஆஸ்திரேலியா மீது அழுத்தம் அதிகமானது. 5 முறை சாம்பியன் அணியாக இருந்தும் கூட, உலகின் தலைசிறந்த வீரர்கள் இருந்தும் கூட ஆஸ்திரேலியா அணி சந்தித்த இந்த மோசமான அனுபவம், அந்த அணியின் வலிமையை சோதித்தது.

Australia

அதுமட்டுமல்லாமல் முக்கியமான போட்டிகளில் களநடுவர்களால் அளிக்கப்பட்ட சில சர்ச்சைக்குரிய முடிவுகள், ஆஸ்திரேலிய வீரர்களை உளவியலாகவே பாதித்தது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 134 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்த போது, அவுட்டாகி சென்ற ஆஸ்திரேலிய வீரர்கள் கிட்டத்தட்ட அழும் நிலைக்கே சென்றனர். ஆனால் அதற்கு பிறகு 2 போட்டிகளில் சிறப்பான வெற்றியை பதிவுசெய்த ஆஸ்திரேலிய அணி, 10வது இடத்திலிருந்து முன்னேறி 4வது இடத்தை சீல் செய்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கும், ஆஸ்திரேலிய அணிக்கும் பலத்த போட்டி இருப்பதால் இன்றைய நெதர்லாந்து போட்டியில் வெற்றிபெறுவது மட்டுமல்லாமல், ஒரு பெரிய வெற்றியை தேடி களம்கண்டது ஆஸ்திரேலிய அணி.

6வது உலகக்கோப்பை சதமடித்த டேவிட் வார்னர்!

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஸ் விரைவாகவே வெளியேறி ஏமாற்றம் அளித்தாலும், பின்னர் கைக்கோர்த்த டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடந்த போட்டியில் சதமடித்திருந்த டேவிட் வார்னர் இந்த போட்டியிலும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். உடன் ஸ்மித்தும் தன்னுடைய பங்கிற்கு வெளுத்துவாங்க ஆரம்பிக்க, நெதர்லாந்து அணி அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்தது. 11 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி சதம் விளாசிய டேவிட் வார்னர், உலகக்கோப்பையில் தன்னுடைய 6வது சதத்தை பதிவுசெய்தார்.

David Warner

இதன்மூலம் உலகக்கோப்பையில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 6 சதங்கள் அடித்திருந்த சச்சினின் சாதனையை சமன்செய்துள்ளார் வார்னர். அதுமட்டுமல்லாமல் 7 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கும் ரோகித் சர்மாவை பீட் செய்ய இன்னும் 1 சதம் மட்டுமே வார்னருக்கு மீதமுள்ளது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்மித 71 ரன்னிலும், மார்னஸ் லபுசனே 62 ரன்னிலும் வெளியேற, கடைசி 10 ஓவர்களின் போது களத்திற்கு வந்த க்ளென் மேக்ஸ்வெல் ஒரு வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

40 பந்துகளில் சதமடித்து உலக சாதனை!

டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட்டாக இருந்துவரும் க்ளென் மேக்ஸ்வெல் காயத்திலிருந்து திரும்பி வந்த பிறகு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வந்தார். இந்நிலையில் இன்றைய போட்டியில் களமிறங்கிய மேக்ஸ்வெல் அவர்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் 7 பந்துகளில் 14 ரன்களில் இருந்த மேக்ஸ்வெல் அடுத்த 33 பந்துகளில் 87 ரன்கள் விளாசி துவம்சம் செய்தார். எதிர்கொண்ட ஓவரில் எல்லாம் 15 ரன்களுக்கு மேல் அடித்த மேக்ஸ்வெல், பாஸ் டி லீடே வீசிய 49வது ஒவரில் மட்டும் 28 ரன்கள் விளாசி மிரட்டிவிட்டார்.

Maxwell

9 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய மேக்ஸ்வெல், 40 பந்துகளில் சதமடித்து உலகக்கோப்பையில் புதிய சாதனையை உருவாக்கினார். உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட சதம் இதுவாகும். நடப்பு உலகக்கோப்பை தொடரில் 49 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்திருந்த மார்க்ரம் சாதனையை, 18 நாளிலேயே முறியடித்து அசத்தியுள்ளார் மேக்ஸ்வெல். இந்த பட்டியலில் 49 பந்தில் சதமடைத்த மார்க்ரம், 50 பந்தில் கெவின் ஓப்ரைன், 51 பந்தில் மேக்ஸ்வெல், 52 பந்துகளில் டிவில்லியர்ஸ் என அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர்.

50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா அணி. 400 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிவருகிறது நெதர்லாந்து அணி.