Glenn Maxwell Cricinfo
கிரிக்கெட்

AUSvsWI | 5வது சர்வதேச டி20 சதம் - ரோகித் சர்மா சாதனையை சமன்செய்த மேக்ஸ்வெல்; 241 ரன்கள் குவித்த ஆஸி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 50 பந்துகளில் சதமடித்து புது சாதனையை படைத்து அசத்தியுள்ளார் ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல்.

Rishan Vengai

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

முதலில் தொடங்கப்பட்ட 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா முதல் போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் ஒரு அசாத்தியமான பந்துவீச்சு மூலம் அசத்திய ஷமர் ஜோசப் 1-1 என டெஸ்ட் தொடரை சமனில் முடித்துவைத்தார்.

இதன்மூலம் 27 வருடங்களுக்கு பிறகு முதன்முதலாக ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்றது மட்டுமல்லாமல், பல வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை சமன்செய்து புது வரலாறு படைத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆனால் என்னதான் டெஸ்ட் தொடரை சமன்செய்திருந்தாலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் வென்ற ஆஸ்திரேலியா அணி, 3-0 என ஒயிட்வாஸ் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பதிலடி கொடுத்தது.

டெஸ்ட், ஒடிஐ தொடர்களுக்கு பிறகு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் இரண்டு அணிகளும் இறுதிவரை போட்டியை விட்டுக்கொடுக்காமல் உயிரை கொடுத்து போராடின. ஆனால் முடிவில் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியே வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டி அடியெல்டில் இன்று நடைபெற்றுவருகிறது. இதில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 241 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

12 பவுண்டரிகள் 8 சிக்சர்கள்! 120 ரன்கள் குவித்த மேக்ஸ்வெல்!

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில், நல்ல தொடக்கம் கிடைத்தாலும் வார்னர் 22 ரன்கள், மிட்செல் மார்ஸ் 29 ரன்கள், ஜோஸ் இங்கிலிஸ் 4 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேற 64 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா. அப்போதுதான் களமிறங்கினார் அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல்.

Maxwell

4வது விக்கெட்டுக்கு ஸ்டொய்னிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் கைக்கோர்த்தாலும், ஒருமுனையில் ஸ்டொய்னிஸை ‘நின்று வேடிக்கை பார்’ என நிறுத்திய மேக்ஸ்வெல் வானவேடிக்கை காட்டினார். ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், ஹார்டு ஹிட்டிங் என துவம்சம் செய்த மேக்ஸ்வெல் 50 பந்துகளிலேயே சதமடித்து மிரட்டினார்.

55 பந்துகளில் 12 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய மேக்ஸ்வெல் 120 ரன்கள் அடிக்க, 20 ஓவர் முடிவில் 241 ரன்கள் என்ற இமாலய ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா.

5 டி20 சதங்கள்! ரோகித்தின் உலக சாதனை சமன்!

டி20 கிரிக்கெட்டில் ஏற்கெனவே 4 சதங்களை பதிவுசெய்திருந்த மேக்ஸ்வெல், இன்றைய போட்டியில் தன்னுடைய 5வது டி20 சதத்தை பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (5) அடித்தவர் என்ற உலகசாதனையை வைத்திருக்கும் ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்துள்ளார் மேக்ஸ்வெல். ரோகித் சர்மாவிற்கு பிறகு 5 டி20 சதங்கள் அடித்த இரண்டாவது வீரர் க்ளென் மேக்ஸ்வெல். 3வது இடத்தில் 4 சதங்களுடன் சூர்யகுமார் யாதவ் நீடிக்கிறார்.

Maxwell

அதிக டி20 சதங்கள் அடித்தவர்கள்:

1. ரோகித் சர்மா - 143 இன்னிங்ஸ்கள் - 5 சதங்கள்

2. க்ளென் மேக்ஸ்வெல் - 94 இன்னிங்ஸ்கள் - 5 சதங்கள்

3. சூர்யகுமார் யாதவ் - 57 இன்னிங்ஸ்கள் - 4 சதங்கள்

4. பாபர் அசாம் - 101 இன்னிங்ஸ்கள் - 3 சதங்கள்

பெரிய இலக்கை நோக்கி விளையாடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, அடித்து ஆடும் முயற்சியில் 6 விக்கெட்டுகளை இழந்து 12 ஓவரில் 116 ரன்களுடன் ஆடிவருகிறது. களத்தில் ரோவ்மன் பவல் மற்றும் ஷெஃபர்ட் இருவரும் ஆடிவருகின்றனர்.