bairstow - sarfaraz X
கிரிக்கெட்

”ரன்னு கம்மியா இருக்கு; பேச்சு மட்டும் அதிகமா இருக்கே”! - பேர்ஸ்டோவை ஸ்லெட்ஜ் செய்த சர்பராஸ்-கில்!

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Rishan Vengai

பாஸ்பால் கிரிக்கெட்டை கையில் எடுத்த பிறகு 7 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்ற இங்கிலாந்து அணி, 4 தொடர்களில் வெற்றி மற்றும் 2 தொடர்களில் சமன் என ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோல்வியை சந்திக்காமல் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தமுறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து இங்கிலாந்து வீழ்த்தும் என்று நம்பப்பட்டது.

அதற்கேற்றார்போல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவுசெய்து இங்கிலாந்து மிரட்டியது. ஆனால் அதற்குபிறகு கம்பேக் கொடுத்திருக்கும் இந்திய அணி முதல் போட்டியில் தோற்றாலும், அடுத்த 4 போட்டிகளிலும் வெற்றிபெற்று 4-1 என தொடரை வென்று அசத்தியுள்ளது.

ashwin

தர்மசாலாவில் நடைபெற்ற கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 477 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து அணி 218 மற்றும் 195 ரன்கள் மட்டும் அடித்து சுருண்டது. அபாரமாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 9 விக்கெட்டுகள், குல்தீப் யாதவ் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

பேர்ஸ்டோவை ஸ்லெட்ஜிங் செய்த இந்திய இளம்வீரர்கள்!

5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் பாஸ்பாலை சுக்கு நூறாக்கிய இந்திய வீரர்கள், இங்கிலாந்து வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வதிலும் விட்டுவைக்கவில்லை. இந்தியவீரர்கள் சுப்மன் கில், சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் மூவரும், இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவிடம் ஸ்லெட்ஜிங் செய்தது ஸ்டம்ப் மைக்கில் சிக்கியது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

kuldeep

இங்கிலாந்து அணி அஸ்வின் சுழலில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அஸ்வின் வீசிய ஓவரில் 2 சிக்சர்களை அடுத்தடுத்து பறக்கவிட்ட பேர்ஸ்டோ, 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என விரட்டி கெத்துகாட்டினார். நல்ல டச்சில் தெரிந்த பேர்ஸ்டோவை ஸ்லிப், லெக் ஸ்லிப் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்த கில், சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் மூவரும் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டனர். அதுவரை அபாரமாக விளையாடிய பேர்ஸ்டோ, அந்த உரையாடலுக்கு பிறகு கவனம் இழந்து குல்தீப் ஓவரில் பேக்ஃபுட்டில் LBW விக்கெட்டாகி வெளியேறினார். அப்போது நடந்த ஸ்லெட்ஜிங் உரையாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேர்ஸ்டோவ் - ஜேமி ஆண்டர்சன் சோர்வாக இருந்ததற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள், அதன் பிறகு அவர் உங்களை வெளியேற்றிவிட்டார்?

சுப்மன் கில் - அதனால் என்ன நான் சதமடித்த பிறகு தானே வெளியேற்றினார். நீங்க எத்தனை ரன் எடுத்திங்க?

துருவ் ஜுரேல் - சரி ஈசியா விடுங்க ஜானி பாய்

சர்ஃபராஸ் கான் - கொஞ்சம் ரன்னு அடிச்சதுக்கே அதிகமாக துள்ள ஆரம்பித்துவிட்டார்

பேர்ஸ்டோவ் - போதும் நிறுத்துங்கள்

இந்த கன்வர்சேசன் நடந்த ஓவரிலேயே பேர்ஸ்டோ குல்தீப் யாதவுக்கு எதிராக LBW விக்கெட்டாகி, 31 பந்துகளுக்கு 39 ரன்கள் அடித்து வெளியேறினார். இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4-1 என படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்தது.