தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி 1-1 என தொடரை சமன்செய்தது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என வெற்றிபெற்று தென்னாப்பிரிக்கா மண்ணில் புதுவரலாறு எழுதியது.
இந்நிலையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிக்கான அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா முதலிய ஸ்டார் வீரர்கள் திரும்புவதால் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்கா மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதேயில்லை என்பதால், ரோகித் சர்மா தலைமயிலான இந்த அணி வெற்றியை ருசிக்கும் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது.
இந்நிலையில்தான் இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் ஒருதலைபட்சமாக இருக்காது என்று தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்காவின் இளம் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸீ.
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருக்கும் ஜெரால்ட் கோட்ஸீ, தொடர் எப்படியிருக்கப்போகிறது என்பதை பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து ரெவ்ஸ்போர்ட்ஸிடம் பேசியிருக்கும் அவர், “இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் என்பது எனக்கு கடினமான சவாலாகவே இருக்கும். நான் உலகத்தின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக என்னை சோதிக்க விரும்புகிறேன். விராட் கோலி மற்றும் ரோகித் போன்ற பெரிய வீரர்களுக்கு எதிராக என் திறமையை வெளிக்காட்ட நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், “நான் எப்போதும் போட்டியை விரும்பக்கூடிய ஒரு நபராகவே இருந்துள்ளேன். அதை இவ்விரு ஜாம்பவான் வீரர்களுக்கு எதிராகவும் டெஸ்ட் செய்ய நினைக்கிறேன். ஆனால் என்னுடைய சவால் அவர்களுக்கு ஒன்றும் புதியதாக இருக்கப்போவதில்லை, அவர்கள் க்ளாஸ் பேட்டர்கள், என்னைப்போல நிறைய பேரை பார்த்திருப்பார்கள். ஆனால் என்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுக்கு எதிராக விளையாடுவது எனக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கப்போகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும் டேய்ல் ஸ்டெனை தன்னுடைய கிரிக்கெட் ஹீரோ என்று தெரிவித்திருக்கும் அவர், “என்னுடைய கிரிக்கெட் ஹீரோ எப்போதும் டேல் ஸ்டெய்ன்தான். நான் சிவப்பு-பந்து கிரிக்கெட்டில் கடினமான பாதையில் செல்லும்போது அவரை சந்தித்தேன். அவர் என்னுடைய முன்னேற்றத்தில் பெரிய உதவியாக இருந்தார். நாங்கள் ஒன்றாக காபி சாப்பிட்டோம். நான் அவருடன் நல்ல உறவைப் பகிர்ந்து கொள்கிறேன். எதிர்காலத்தில் அவருக்கு கீழ் விளையாடுவேன் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.