Virat Kohli X
கிரிக்கெட்

”கோலி வந்துட்டா Win பண்ண முடியாது.. அதற்குள் ENG முந்திக்கொள்ள வேண்டும்!” - முன். இங்கிலாந்து வீரர்

விராட் கோலி, ஜடேஜா இருவரும் இல்லாத நிலையில், இந்தியாவை 12 வருடத்தில் முதல் அணியாக சொந்த மண்ணில் வீழ்த்தும் வாய்ப்பை இங்கிலாந்து பெற்றுள்ளதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் எளிதாக வெல்லவேண்டிய இடத்திலிருந்தது. ஆனால் அதை கோட்டை விட்ட இந்திய அணி, 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்ற பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் தோற்பது இதுவே முதல்முறையாகும். இந்தியாவை சரியான நேரத்தில் இழுத்துப்பிடித்த இங்கிலாந்து அணி ஒரு வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.

ஏற்கனவே விராட் கோலி இல்லாத நிலையில், முதல் போட்டியில் காயமடைந்த ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தொடரிலிருந்து விலகியுள்ளனர். மூத்த வீரர் ரோகித்சர்மாவும் பெரிய ஃபார்மில் இல்லை என்பதால், “இங்கிலாந்து அணி இதை பயன்படுத்திக்கொண்டு 12 வருடத்தில் இந்தியாவை வீழ்த்தும் முதல் அணியாக மாறவேண்டும்” என முன்னாள் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மாவிடம் பழைய ஆட்டம் இல்லை!

இங்கிலாந்து அணிக்கு இருக்கும் வாய்ப்பு குறித்து டெலிகிராப் உடன் பேசியிருக்கும் பாய்காட், இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் பழைய ஆட்டம் இல்லை என்று விமர்சித்தார்.

rohit sharma

ரோகித் குறித்து பேசியிருக்கும் அவர், “இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, கிட்டத்தட்ட 37 வயதில் இருக்கிறார். அவரிடம் அவரின் பழைய ஆட்டம் இல்லை. அவர் ஒரு கேமியோ ஆட்டத்தை மட்டுமே விளையாட பார்க்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த அணுகுமுறை வெற்றியை தேடித்தராது. கடந்த நான்கு ஆண்டுகளில் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்களை மட்டுமே அடித்துள்ளார் அவர். கூடுதலாக, இந்திய அணியின் பீல்டிங்கும் வலுவாக இல்லை” என விமர்சித்துள்ளார்.

Ravindra Jadeja

மேலும் ஜடேஜா ஆப்செண்ட் குறித்து பேசிய அவர், “கோலி இல்லாத நிலையில், ஜடேஜாவும் தொடை காயத்தால் வெளியேறியிருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு. ஏனெனில் ஜடேஜா ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர், சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த ஃபீல்டர். முதல் டெஸ்ட்டில் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக ஜடேஜாதான் வெளிப்பட்டார். ஜடேஜா, ராகுல், ஷமி, ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் இல்லாதது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

கோலி வருவதற்குள் இங்கிலாந்து முந்திக்கொள்ள வேண்டும்!

மேலும் “கோலி ஒருவர் இந்திய அணியின் தூண் போன்றவர். அவர் இல்லாத நிலையில் பல முக்கியமான வீரர்கள் கிடைக்காமல் போனது இங்கிலாந்துக்கு பெரிய வாய்ப்பு. 12 வருடத்தில் முதல் அணியாக இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்த இங்கிலாந்து அணி முயற்சிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

virat kohli

விராட் கோலி குறித்து பேசியிருக்கும் பாய்காட், “இந்திய ஆடுகளங்களில் 60 சராசரியுடன் விராட்கோலி ஒரு அற்புதமான பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். பேட்டிங்கில் மட்டுமில்லாமல் ஃபீல்டிங்கிலும் அவரால் பெரும் ஆற்றலை எடுத்துவர முடியும். அவர் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு. மூன்றாவது டெஸ்ட்டுக்கு கோலி திரும்புவதற்கு முன், இங்கிலாந்து அணி அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவை வீழ்த்த இதுவே சிறந்த வாய்ப்பு” என்று தெரிவித்துள்ளார்.