இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி வென்ற 3 ஐசிசி கோப்பைகளில், 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை வென்றதில் முக்கிய பங்கு வகித்தவர் இந்திய அணியின் முன்னாள் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர். கடினமான நேரத்தில் விராட் கோலி மற்றும் எம்.எஸ்.தோனியோடு கவுதம் கம்பீர் போட்ட இரண்டு முக்கிய பார்ட்னர்ஷிப் தான் இந்தியாவை 28 வருடங்கள் கழித்து கோப்பை வெல்வதற்கான முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில், உலகக்கோப்பை வென்றவரான கவுதம் கம்பீர் தன்னுடைய விருப்பமான பேட்டிங் பார்ட்னர் யார் என்ற கேள்விக்கு, எம்.எஸ்.தோனியின் பெயரை கூறியுள்ளார்.
ஸ்போர்ட்ஸ்கீடா உடனான உரையாடல் ஒன்றில் செய்தியாளர் கவுதம் கம்பீரிடம் உங்களுடைய விருப்பமான பேட்டிங் பார்ட்னர் யார் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் பேசியிருக்கும் கம்பீர், ”எனக்கு மிகவும் பிடித்த பேட்டிங் பார்ட்னர் என்றால் அது எம்.எஸ்.தோனி தான். பலபேர் அது வீரேந்திர சேவாக் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் உண்மையில் தோனியுடன் குறிப்பாக ஒயிட்-பால் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறேன். ஒயிட் பால் கிரிக்கெட்டில் நாங்கள் பெரிய பார்ட்னர்ஷிப்களை பகிர்ந்து கொண்டோம் ” என்று கம்பீர் கூறியுள்ளார். அவர்களுடைய பெரிய பார்ட்னர்ஷிப் தான் 2011 உலகக்கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தது.
இதற்கு முன் தோனியை புகழ்ந்து கூறியிருந்த கம்பீர், “ தோனி ஒருவேளை மிடில் ஆர்டர் வீரராக விளையாடாமல் முதலில் பேட்டிங் விளையாடியிருந்தால் பல ஒருநாள் சாதனைகளை படைத்திருப்பார். அவருடைய கேப்டன் பொறுப்பு அவரின் தனிப்பட்ட சாதனைகளை தடுத்துவிட்டது” என்றும், “கோலியை போல் அதிக சதமடிக்கவும், ரோகித் சர்மாவை போல் அதிக இரட்டை சதங்கள் அடிக்கவும் வீரர்கள் வருவார்கள். ஆனால் தோனியை போல் 3 ஐசிசி கோப்பைகளை வெல்ல ஒரு இந்திய கேப்டன் வர வாய்ப்பில்லை” என்று புகழ்ந்து பேசியிருந்த நிலையில் தற்போதும் விருப்பமான பார்ட்னர் தோனி என்று கூறியுள்ளார் கம்பீர்.