mithali - anjum - jhulan - smriti PT
கிரிக்கெட்

Women’s Day| மிதாலி ராஜ் முதல் ஸ்மிரிதி மந்தனா வரை! IND கிரிக்கெட்டில் சிகரம் தொட்ட 5 வீராங்கனைகள்!

உலக கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை குவித்து சிகரம் தொட்ட இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள், இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Rishan Vengai

இந்தியாவில் பல பகுதிகளில் பண்டிகைகள், கலாச்சார கொண்டாட்டங்கள் என வெவ்வேறு கொண்டாட்ட வடிவங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்த இந்திய மக்களால் திருவிழா போல கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு என்றால் அது கிரிக்கெட் மட்டும் தான். இந்திய மக்களின் உணர்வோடு ஒன்றிய கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கும் வீரர்களை ரசிகர்கள் தங்களுடைய ஹீரோவாகவே கொண்டாடுவது வழக்கம். ஆனால் துரதிருஷ்டவசமாக கிரிக்கெட்டில் சாதனைகள் புரிந்த ஆண் வீரர்களுக்கு கிடைக்கும் அதே வரவேற்பும் உற்சாகமும் பெண் கிரிக்கெட்டர்களுக்கும் கிடைக்கிறதா எனால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

எப்படியிருப்பினும், இந்திய நாட்டிற்காக தங்களையே அர்ப்பணித்த பெண் கிரிக்கெட் வீரர்கள் “சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா” போன்று சமமான திறமைகளால் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். தங்களுடைய தீவிர முயற்சிகளால் தற்போதும் தமது நாட்டின் கௌரவத்திற்காக எவ்வளவு கூடுதல் மைல் செல்ல வேண்டுமானாலும் அதற்கு தயாராகவே இருந்து வருகின்றனர்.

அப்படி தங்களுடைய திறமைகளால் உலக கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட 5 இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் குறித்து பார்க்கலாம்..

1. மிதாலி ராஜ்

பல தசாப்தங்களை கடந்த இந்திய கிரிக்கெட்டில் “சுனில் கவாஸ்கர், கபில் தேவ், ரவி சாஸ்திரி, ஸ்ரீகாந்த், அசாருதீன்” முதலிய ஜாம்பவான் வீரர்கள் இருந்தாலும், கிரிக்கெட்டை இந்தியாவின் பட்டித்தொட்டி எங்கும் எடுத்துச்சென்ற பெருமை சச்சின் டெண்டுல்கரையே சேரும். அதுவரை கால்பந்தை உதைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்த சிறுவர்களின் கண்ணில் கிரிக்கெட் கனவை விதைத்தவர் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். ஆண்கள் கிரிக்கெட்டில் அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் சச்சின் என்றால், பெண்கள் கிரிக்கெட்டில் ஏற்படுத்தியவர் மிதாலி ராஜ் என்ற ஜாம்பாவான் வீராங்கனை என்றால் மிகையாகாது.

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முகவரி என்றும், லேடி சச்சின் டெண்டுல்கர் என்றும், கேப்டன் கூல் என்றும் புகழப்படும் மிதாலி ராஜ், ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் இரண்டிலும் இந்திய அணியை 2 முறை ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்ற ஒரே கேப்டன் ஆவார்.

மிதாலி ராஜ்

அதுமட்டுமல்லாமல் உலக மகளிர் கிரிக்கெட்டில் அனைத்து ஃபார்மேட்களிலும் அதிக ரன்கள் (10,868 ரன்கள்) குவித்த ஒரே வீரர், பெண்கள் ஒருநாள் போட்டிகளில் 7805 ரன்கள் குவித்த ஒரே வீரர் என்ற சாதனைகளை மிதாலி ராஜ் தன்வசம் வைத்துள்ளார். மிதாலியை தவிர வேறு எந்த வீராங்கனைகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் 6000 ரன்களை கூட இதுவரை எட்டவில்லை. அதேபோல பெண்கள் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக ஏழு அரைசதங்கள் அடித்த முதல் வீரர் மற்றும் பெண்கள் ஒருநாள் போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்தவரும் மிதாலிதான்! ஒருநாள் போட்டிகளில் மட்டும் 64 அரைசதங்களை விளாசியுள்ளார்.

மிதாலி ராஜ்

மிதாலி தன்னுடைய 10 வயதில் கிரிக்கெட் பேட்டைப் பிடித்து விளையாடி, 16 வயதில் முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். முதல் போட்டியிலேயே சதமடித்து மிரட்டினார். ராஜஸ்தான் ஜோத்பூரில் மிதாலி ராஜ் பிறந்து வளர்ந்தாலும், அவருடைய தந்தை துரைராஜ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது.

mithali raj

ஒருமுறை “தமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை” என்று பதிவிட்டு எல்லோரையும் மிரட்சியில் ஆழ்த்தினார். அப்போது தான் அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்றே பல்வேறு ரசிகர்களுக்கு தெரியவந்தது.

கிரிக்கெட்டில் பல சாதனைகளை குவித்த மிதாலி ராஜுக்கு, 2015-ல் பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.

2. ஜுலன் கோஸ்வாமி

பெண்கள் கிரிக்கெட்டின் க்ளென் மெக்ராத், பெங்கால் எக்ஸ்பிரஸ், சக்தா எக்ஸ்பிரஸ் என்றெல்லாம் கிரிக்கெட் ரசிகர்களால் புகழப்படும் ஜுலன் கோஸ்வாமி, அதிகம் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படாத ஒரு கிரிக்கெட் பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும்.

மேற்கு வங்கத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் 1982-ல் பிறந்து, கிரிக்கெட்டே அதிகம் பரிட்சயம் இல்லாத காலகட்டத்தில் 15 வயதில் தொடங்கிய ஒரு சிறுமியின் கனவுப்போராட்டம், உலக நாடுகள் போற்றும் வகையிலும், தன் நாட்டின் அரசே அழைத்து பத்மஸ்ரீ வழங்கும் நிலையிலும் சென்று முடிந்தது என்றால் அது ஒரு வரலாறுதானே.

jhulan goswami

1997 பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியை வேடிக்கை பார்த்து பந்து பொறுக்கிப்போட்ட சிறுமி தான் ஜுலான் கோஸ்வாமி. அந்த போட்டியின் தாக்கத்தால் 15 வயதில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற தாக்கம் கோஸ்வாமிக்கு எழுகிறது. 15 வயதில் எல்லாம் மற்ற கிரிக்கெட்டர்கள் தொழில்முறை கிரிக்கெட்டர்களாகவே மாறியிருப்பார்கள். ஆனால் அதுவரை கிரிக்கெட்டே பெரிதாக பரிட்சயம் இல்லாத சிறுமி கோஸ்வாமிக்கு அப்போதுதான் கிரிக்கெட் ஆடவேண்டும் என்ற ஆசையே எழுகிறது. அந்த வயதில் முளைத்த கனவிற்காக அவர் நிறைய கஷ்டங்களையும், நிறைய தூரம் ஓட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

jhulan goswami

தொடக்கத்தில் குடும்பத்தாலேயே “பொம்பள புள்ளைக்கு எதுக்கு விளையாட்டு” என்ற பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்த கோஸ்வாமி, தன்னுடைய விடாமுயற்சியால், அடுத்த 4 வருடத்திற்குள்ளாகவே இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தினார்.

jhulan goswami

1997-ல் கண்ட கனவை 2002-ஆம் ஆண்டு நிஜமாக்கினார் ஜுலன் கோஸ்வாமி. உலக கிரிக்கெட்டில் 355 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பெண் பந்துவீச்சாளர் இந்திய கிரிக்கெட்டில் 2002-ல் அறிமுகம் ஆனார். தன் கனவை எட்டிப்பிடிப்பதற்கான ஓட்டத்தில் சிறுமி கோஸ்வாமி பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமில்லை. அவருடைய இறுதிப்போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஜுலனுக்காக மரியாதை பதிவை பதிவிட்டது.

சாதனைகளை குவிப்பதை வழங்கமாக வைத்திருந்த ஜூலன் கோஸ்வாமி, 355 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பெண்கள் கிரிக்கெட்டராகவும், 250 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பெண்கள் கிரிக்கெட்டராகவும் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடித்தார்.

jhulan goswami

ஐசிசியின் 2007-ம் ஆண்டுக்கான ''சிறந்த வீராங்கனை'' விருதைப் பெற்று சாதனை படைத்தார் ஜூலன். இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியப் பெண் இவர்தான். மேலும் கிரிக்கெட் சாதனைகளுக்காக 2010-ல் அர்ஜுனா விருது மற்றும் 2012-ல் பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு ஜூலன் கோஸ்வாமியை கௌரவித்தது.

3. நீது டேவிட்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சக வீரர்களால் "சுழற்பந்துவீச்சு ராணி என்றும், சுழல் மந்திரவாதி" என்றும் புகழப்படுபவர் 'நீது டேவிட்'. நன்றாக திரும்பக்கூடிய ஆடுகளம் அமைந்துவிட்டால், உலகத்தின் தலைசிறந்த பேட்டருக்கு கூட நைட்மேராக மாறக்கூடியவர் நீது டேவிட்.

Neetu David

இந்திய அணிக்காக 97 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் நீது டேவிட் 141 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் குறைவான டெஸ்ட் போட்டிகளே நடைபெறும் நிலையில், விளையாடிய 10 போட்டிகளிலேயே 41 விக்கெட்டுகளை அசத்தியுள்ளார் நீது டேவிட். ஆண்கள் கிரிக்கெட் போன்று அதிக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடபட்டால், தலைசிறந்த வீரர்களில் முதல் பெண் கிரிக்கெட்டராக தன்னை நிலைநிறுத்தியிருப்பார்.

Neetu David

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சை வைத்திருப்பவர் நீது தான். 1995-ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 53 ரன்களை விட்டுக்கொடுத்த அவர், 8 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்சியை ஏற்படுத்தினார்.

Neetu David

தற்போது பிசிசிஐ-ன் பெண்கள் தேர்வுக்குழுவில் இருந்துவரும் நீது டேவிட், இளம் திறமைகளை அடையாளம் காண்பதில் முக்கிய பங்காற்றிவருகிறார். ஷபாலி வர்மா, ரிச்சா கோஷ் போன்ற திறமை வாய்ந்த வீரர்களை கண்டுபிடித்த பெருமை நீது டேவிட்டுக்கே சேரும்.

4. அஞ்சும் சோப்ரா

அஞ்சும் சோப்ரா இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் முன்னோடியாவார். 1995-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இடது கை பேட்டர் தன்னுடைய அற்புதமான ஸ்டிரோக் பிளேவிற்கு பெயர் போனவர். 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற அஞ்சும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

Anjum Chopra

2000 காலகட்டத்தில் இந்தியாவுக்காக ஒரு நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்திய அஞ்சும் சோப்ரா, இந்தியாவை பல போட்டிகளில் வெற்றிக்கு அழைத்துசென்றதில் முக்கிய பங்கு வகித்தார். 2005 மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவை அழைத்துச்சென்றதில் அவருடைய பங்கும் முக்கியமானது. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தியாவால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

Anjum Chopra

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்துவருகிறார் சோப்ரா.

5. ஸ்மிரிதி மந்தனா

"Princess of Indian Cricket" இந்திய கிரிக்கெட்டின் இளவரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ஸ்மிரிதி மந்தனா. மெக் லானிங், எல்லிஸ் பெர்ரி போன்ற ஜாம்பவான் வீரர்களுக்கு மத்தியில் இந்திய அணியின் பில்லராக நிற்பவர் ஸ்மிரிதி மந்தனா. 1996-ல் மகாராஷ்டிராவின் மும்பையில் பிறந்த ஸ்மிரிதி மந்தனா, இந்திய அணியின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறார்.

Smriti Mandhana

போட்டியில் லெக் சைடு, ஆஃப் சைடு என இரண்டு பக்கமும் ஸ்டிராங்க் பிளேயராக இருக்கும் ஸ்மிரிதி மந்தனா, தன்னுடைய ஸ்டைலிஸ் டிரைவ் ஷாட்களுக்கு பெயர் போனவர். இலங்கையின் ஜாம்பவான் கிரிக்கெட்டர் குமார் சங்ககராவை ரோல் மாடலாக கொண்ட இவரின் கிளாசிக் பேட்டிங்கை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

Smriti Mandhana

இந்திய கிரிக்கெட் அணியில் ODI மற்றும் T20I இரண்டிலும் மிகப்பெரிய ஆளுமையாக தன்னை நிலைநிறுத்தியிருக்கும் ஸ்மிரிதி மந்தனா, இங்கிலாந்துக்கு எதிராக அதிவேகமாக டி20 சதமடித்த (23 பந்துகளில்) ஒரே இந்திய வீரர், ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 10 அரைசதங்கள் அடித்த ஒரே இந்திய வீரர், டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை அடித்த 3வது இந்திய வீரர், ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் அடித்த 6வது இந்திய வீரர் என்ற பெருமைகளை தன்வசம் வைத்துள்ளார்.

Smriti Mandhana

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை, யு19 ஒருநாள் போட்டியில் இரட்டைசதமடித்த முதல் வீராங்கனை மற்றும் இரண்டு முறை ஐசிசி-ன் சிறந்த பெண் கிரிக்கெட்டர் விருது வாங்கிய இந்திய வீராங்கனை முதலிய பெருமையையும் பெற்றுள்ளார்.

Smriti Mandhana

இவருக்கு இந்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்துள்ளது.