ஹீத் ஸ்ட்ரீக் Twitter
கிரிக்கெட்

மறைந்தார் கிரிக்கெட் ஜாம்பவான் ஹீத் ஸ்ட்ரீக்! சோகத்தில் கிரிக்கெட் உலகம்!

Prakash J

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனான ஹீத் ஸ்ட்ரீக், கடந்த சில ஆண்டுகளாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக, ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

Heath streak with his family

இந்தச் செய்தி வைரலான நிலையில், ’ஹீத் ஸ்ட்ரீக் மரணமடையவில்லை’ என அவருடைய நண்பரும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ஹென்றி ஒலங்கா தெரிவித்தார். இதுதொடர்பாக, ‘ஹீத் ஸ்ட்ரீக் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்’ எனக் கேட்டுக்கொண்ட அவர், அவருடன் டெக்ஸ்ட் மெசேஜில் உரையாடியதை ஆதாரமாக வெளியிட்டிருந்தார். இதையடுத்து பல வீரர்கள் இரங்கல் வெளியிட்ட தங்களது ட்விட்டர் பதிவுகளை நீக்கினர்.

இந்த நிலையில்தான் ஹீத் ஸ்ட்ரீக், இன்று காலமானதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஹீத் ஸ்ட்ரீக்கின் மனைவி தனது சமூக வலைதளபக்கத்தில், “இன்று அதிகாலையில், என் வாழ்க்கையின் அன்புக்குரியவரும் என் அழகான குழந்தைகளின் தந்தையுமான என் கணவர், தேவதூதர்களுடன் இருக்க எங்கள் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்” என தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது. 1993ஆம் ஆண்டு தன்னுடைய 19வது வயதில் முதல்முறையாக முதல் தரப் போட்டிகளில் அறிமுகம் ஆன ஸ்ட்ரீக், அதே ஆண்டு நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்க அணிக்கான ஒருநாள் தொடரில் முதல்முறையாக தேசிய அணிக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

அவர் ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,990 ரன்களும், 216 விக்கெட்டுகளும், 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,943 ரன்களும், 239 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

இவர் கடைசியாக கடந்த 2005ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடினார். அதன்பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். வங்கதேசம், ஜிம்பாப்வே சர்வதேச அணிகளுக்கும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.