இந்தியாவில் நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்று விளையாடிய நிலையில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின.
இதில் இந்திய அணி லீக் போட்டிகள் ஒன்பதிலும் வெற்றிபெற்று, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. பின்னர், நேற்று (நவ.15) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி, 4வது முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்த நிலையில் இந்திய அணியின் தொடர் வெற்றி குறித்து, பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக, ’இந்தியாவுக்கு சாதகமாக ஆடுகளங்கள் மாற்றப்படுகின்றன; இந்தியா பந்து வீசும்போது மட்டும் வேறு ஒரு பந்தை ஐசிசி வழங்குகிறது; இந்தியாவுக்கு சாதகமாக டிஆர்எஸ் முடிவை மூன்றாம் நடுவர் மாற்றுகிறார்’ என தொடர்ந்து பாகிஸ்தான் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. அதிலும் தற்போது, இந்திய அணிக்கு சாதகமாக டாஸ் விழுவது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டை வைத்திருப்பதுதான் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
இதுகுறித்து சேனல் ஒன்றில் பேசியிருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சிக்கந்தர் பக்த், “இந்தத் தொடரில் ரோகித் சர்மா டாஸிலேயே பிக்சிங் செய்து இந்தியாவுக்கு சாதகமாக விளையாடுகிறார். இதற்கு ஐசிசி அதிகாரிகளும் இந்தியாவுக்கு உடந்தையாகச் செயல்படுகிறார்கள். நீங்கள் கவனியுங்கள், டாஸ் வீசும்போது ரோகித் சர்மா டாஸை எதிரணி கேப்டனிடம் இருந்து அதிக தூரம் வீசுகிறார்.
இதன்மூலம் டாஸை எதிரணி கேப்டன் சென்று பார்க்க முடியாது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு போட்டி நடுவரும் இந்தியாவுக்குச் சாதகமாக டாஸைக் கூறுகிறார்கள்” என பகீரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் பலரும் இவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். ’அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறி இருக்கும் விரக்தியில், அதிலும், இந்திய அணியின் தொடர் வெற்றியை தாங்கிக்கொள்ள முடியாத சூழலில்தான் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்’ என பதிவிட்டு வருகின்றனர்.
’ஏற்கெனவே இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் பங்குகொள்ள மாட்டோம்’ எனத் தெரிவித்தனர். பின்னர், ’இந்தியாவுக்கு வந்திறங்கிய பிறகு உணவில் மாட்டிறைச்சி இல்லை எனவும், ரசிகர்கள் இந்தியா வர விசா வழங்கப்படவில்லை எனவும் தொடர்ந்து குற்றஞ்சாட்டிக் கொண்டே இருந்தார்களே ஒழிய, திறமையுடன் விளையாண்டு இறுதிப்போட்டிக்குள் நுழைய வேண்டும் என அவர்கள் எண்ணவில்லை. அந்த வகையில்தான் தற்போது இதுபோன்ற குற்றச்சாட்டை வைத்துள்ளனர்’ என இந்திய நெட்டிசன்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராகப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகல்... இதுதான் காரணமா?
முன்னதாக, உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி, விளையாடிய 9 லீக் போட்டிகளில் 4-இல் மட்டுமே வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 5வது இடம்பிடித்ததுடன், அரையிறுதிக்கு முன்னேறும் தகுதியை இழந்து தொடரைவிட்டே வெளியேறியது.
இதையடுத்து, முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலரும் தற்போதைய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்தனர். அத்துடன் பாபர் அசாம் கேப்டன்சியிலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தினர். அதன்படி, அவர் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.