பேட்டை கையில் எடுத்தால் பட்டையை கிளப்பும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், பேச்சிலும் சரவெடியாய் வெடிக்கக்கூடியவர். கலகலப்பாக பேசி சுற்றியிருக்கும் அனைவரையும் சிரித்தமுகத்துடன் வைத்திருக்கும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை பிடிக்காதவர்கள் என யாரும் இருக்கவே முடியாது. தன் பேச்சாலும், செயலாலும் இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் சீக்கா, யுவராஜ் சிங் உட்பட பல வீரர்கள் தங்களுடைய பேட்டிங் திறனை வெளிப்படுத்த முக்கிய காரணமாக அமைந்தவர்.
இந்திய அணி முதன்முறையாக 1983 ஒருநாள் உலகக்கோப்பையையும், 1985 சாம்பியன்ஸ் டிரோபியையும் வென்றபோது கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தவர் சீக்கா. அதுமட்டுமல்லாமல் 1983க்கு பிறகு 28 வருடங்கள் கழித்து இந்தியா மீண்டும் 2011-ல் உலகக்கோப்பையை வெல்லக்காரணமான முக்கியமான நபரும் சீக்காதான். அவ்வளவு ஏன்... இந்த இரண்டு உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு அதிகமாக போராடிய ஒரே நபர்கூட கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் என்றுதான் சொல்லவேண்டும்.
1983 உலகக்கோப்பையை பொறுத்தவரையில் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்ற முக்கிய காரணியாக சீக்காவே இருந்தார். அவர்தான் இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர். 183 ரன்கள் அடித்திருந்த இந்திய அணியில் 7 பவுண்டரிகள் 1 சிக்சர் என வெளுத்துவாங்கிய சீக்கா 38 ரன்கள் அடித்திருந்தார். அவரடித்த 38 ரன்களே இந்திய அணியில் ஸ்கோர் போர்டில் பதிவான அதிகபட்ச ரன்களாகும். அவருடைய முக்கியமான பங்கினால் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று கோப்பையை கைப்பற்றியது.
அதேபோல 1985ஆம் ஆண்டு வெற்றிபெற்ற சாம்பியன்ஸ் டிரோபி தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி கபில்தேவ் மற்றும் லக்சுமனன் சிவராமகிருஷ்ணனின் அபாரமான பந்துவீச்சால் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டாவது பேட்டிங் செய்த இந்திய அணியில் வெறும் 77 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 6 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் விளாசி 67 ரன்களை விளாசி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். அந்த போட்டியிலும் சீக்காதான் அதிக ரன்கள் அடித்தவராவார்.
2011 உலகக்கோப்பையை பொறுத்தவரையில், இந்திய அணியின் தேர்வாளாராக செயல்பட்டவர் சீக்கா. அணிக்கான வீரர்களை தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வீரருக்கும் உத்வேகம் அளிப்பதும், சிறந்த சொற்களை எடுத்துக்கூறுவதும் எந்தளவு தேவையென்பதை உணர்ந்தவர் சீக்கா.
உலகக்கோப்பையின் போது ஒருமுறை யுவராஜ் சிங்கிடம் பேசிக்கொண்டிருந்த சீக்கா, அவரிடம் ”அடுத்த போட்டில நீதான் அதிக ரன்கள் அடிக்கப்போற பாரு, இந்த ஷாட்ட மட்டும் தைரியமா ஆடு, பவுலர்கள பத்தி கவலைப்படாத. ஒரு பவுலருக்கு எதிரா டவுட் இருந்தா அந்த பவுலருக்கு எதிராவே சிக்சர் அடிக்க பாரு, சென்சுரி அடிக்க போற பாரு” என பாசிட்டிவாக பேசி உத்வேகம் அளித்துள்ளார். அதற்கு யுவராஜ், “உண்மையாவா சீக்கா? நான் சென்சுரி அடிக்கப்போறனா?” எனக்கூறி, மகிழ்ச்சியில் அதிக தன்னம்பிக்கையோடு விளையாடியுள்ளார். சீக்கா சொன்னதுபோலவே அடுத்த போட்டியிலேயே யுவராஜ் சிங் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சதமடித்து அசத்தியிருந்தார். இதை ஒருமுறை சீக்காவே ஒரு வீடியோவில் கூறியிருப்பார். யுவராஜ் சிங் போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த வீரருக்கே பாசிட்டிவான உத்வேகம் தேவை என்பதை உணர்ந்தவர் கிருஷ்ணமாச்சாரி சீக்கா. 2011 உலகக்கோப்பையை வெல்ல சீக்காவின் பங்கு என்பது மிகப்பெரியது.
1969ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார் சீக்கா. பின்னர் சர்வதேச போட்டியில் 1981 முதல் 1992 வரை 11 ஆண்டுகளாக இந்தியாவுக்காக விளையாடிய அவர், 43 டெஸ்ட் மற்றும் 146 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 6000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். 1989ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். அவரின் சாதனைகளில் முதலில் இருப்பது ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அரைசதமடித்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர், டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் 5 கேட்ச்களை எடுத்த முதல் இந்திய வீரர் போன்றவைதான். அதேபோல முதல்முறையாக 99 ரன்களில் அவுட்டான ஒரே இந்திய வீரரும் அவர்தான்.
1987ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த பாகிஸ்தான் அணிக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் 18 பவுண்டரிகள், 2 சிக்சர்களை பறக்கவிட்ட சீக்கா 123 அடித்தார். அவரின் சதத்தின் உதவியால் 527 ரன்களை குவித்த இந்திய அணி அந்த போட்டியை சமன்செய்தது.
1959ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதியன்று சென்னையில் பிறந்தவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். தனது சிறுவயது முதலே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்த சீக்கா, முறையான பயிற்சிக்குப் பிறகு இந்தியாவுக்காக விளையாடும் தனது கனவை நிறைவேற்றினார். இந்தியாவின் அதிரடி தொடக்கவீரர் என்றால் இன்றளவும் முதலில் எழும் பெயர் அவருடைய பெயர் மட்டும்தான். கல்வியை பொறுத்தவரையில் சீக்கா அடிப்படையில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர். கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். அவருடைய லக்கி நம்பர் 9!