Harmanpreet Kaur Twitter
கிரிக்கெட்

“ஹர்மன்ப்ரீத் வரம்பை மீறிவிட்டார்; இந்திய அணிக்கு இது மோசமான முன்னுதாரணம்” - முன்னாள் இந்திய கேப்டன்

இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டியில், இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அம்பயர்களுக்கு எதிராக நடந்து கொண்ட விதம் மோசமான விதத்தில் அமைந்தது.

Rishan Vengai

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடியது. அதில் டி20 தொடரை 2-1 என இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்து கோட்டைவிட்டது.

IndW vs BanW

முதல் ஒருநாள் போட்டியில் 153 ரன்கள் என்ற இலக்கை கூட அடிக்கமுடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்த இந்திய அணி மீது பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனங்களும் வைக்கப்பட்டன. அதன் பிறகு இரண்டாவது ஒருநாள் போட்டியில் 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வங்கதேசத்துக்கு பதிலடி கொடுத்தது இந்திய அணி.

இந்நிலையில் தொடர் யாருக்கு என்ற 3வது ஒருநாள் போட்டியில் 226 ரன்களை துரத்திய இந்திய அணியால் சமன் மட்டுமே செய்யமுடிந்தது. ஒரு கட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றுவிடும் என்ற நிலையிலிருந்துவிட்டு பின் போட்டியை கோட்டைவிட்டது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது. அதுவும் கடைசி 34 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியால், 4 பந்துகளில் 1 ரன்னை கூட அடிக்கமுடியாமல் போனது வருத்தமளித்தது.

அம்பயரின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஸ்டம்பை அடித்த ஹர்மன்ப்ரீத்!

மாடர்ன் டே கிரிக்கெட் போட்டியில் ரிவ்யூ கேட்கும் டிஆர்எஸ் சிஸ்டம் இல்லை, சூப்பர் ஓவர் இல்லை என்பதையெல்லாம் தாண்டி அம்பயர்களின் சர்ச்சைக்குரிய முடிவுகள் என பல சிக்கல்கள் இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களாக அமைந்தன.

IndW vs BanW

இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் போது ரிவ்யூ சிஸ்டம் இல்லாததால் அம்பயர்களின் எந்த முடிவையும் எதிர்த்து கேட்க முடியாமல் போனது. அதே போல இந்திய வீரர்கள் பேட்டிங் செய்த போது, அம்பயர்கள் கொடுத்த LBW முடிவுகள் அனைத்தும் வீரர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது. இந்திய விக்கெட் கீப்பர் யஸ்திகா பாட்டியா அம்பயரின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் சிறிது நேரம் களத்தைவிட்டு செல்லாமல் இருந்தார். அதே போல அமன்ஜோத் கவுருக்கு வழங்கப்பட்ட LBW-விலும் அவர் திருப்தியில்லாமல் வெளியேறினார்.

இதையெல்லாம் தாண்டி இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு எதிராக LBW வழங்கப்பட்ட போது அதை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவர் ஸ்டம்பை அடித்துவிட்டு கத்திக்கொண்டே வெளியேறினார். வங்கதேச ரசிகர்களை நோக்கி தவறான சைகை செய்ததாகவும் சில நெட்டிசன்கள் குற்றச்சாட்டை வைத்தனர்.

‘போட்டியில் இப்படி நடைபெறுவதெல்லாம் சகஜம் தான், போட்டிக்கு பிறகு வீரர்கள் இலகுவாக கைக்குலுக்கி விட்டு நண்பர்களாக சென்றுவிடுவார்கள்’ என்று நினைத்தால், இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் செயல்பட்ட விதம் இந்திய ரசிகர்களையே முகம் சுளிக்க வைத்தது. போட்டிக்கு பிறகான ப்ரசண்டேஷனில் பேசிய கவுர் அம்பயர்களை மோசமாக விமர்சித்தார். அதுமட்டுமல்லாமல் தொடரின் இறுதி போட்டோ ஷூட்டின் போது “அம்பயர்களையும் கூப்பிடுங்கள், அவர்களும் உங்கள் அணி தானே” என வங்கதேச வீராங்கனைகளிடம் கூறி மேலும் மோசமான அணுகுமுறையை வெளிப்படுத்தினார்.

“அவருடைய வரம்பை மீறிவிட்டார்! இந்திய அணிக்கு இது மோசமான முன்னுதாரணம்!”

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில் முன்னாள் இந்திய கேப்டன் டயானா எடுல்ஜி, இந்திய கேப்டனின் மோசமான அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

diana edulji

கவுர் நடந்துகொண்ட விதத்தை பற்றி பேசுகையில், “கிரிக்கெட் வீரர்கள் நடுவரின் மோசமான சில முடிவுகளுக்கு எதிர்வினையாற்றுவது ஒன்றும் புதியதல்ல. வெற்றிபெற வேண்டிய முக்கியமான போட்டியில் அவுட்டாகும்போது, ​​சில சமயங்களில் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதால், ஓரளவிற்கு அதை மன்னித்துவிடலாம். ஆனால் போட்டிக்கு பிறகான ஹர்மன்ப்ரீத்தின் அணுகுமுறை ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை. ஏனென்றால் ஹர்மன்ப்ரீத் இந்திய அணியின் கேப்டன் ஆவார். அணியில் இருக்கும் தனது சக வீரர்களுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக ஒரு கேப்டன் செயல்பட கூடாது. இளம் வீரர்கள் இப்படியான சீனியர்களின் அணுகுமுறையை பின்பற்றினால் பிற்காலத்தில் அணியின் மாண்பும், கலாச்சாரமும் இல்லாமலே போய் விடும் “ என்றுள்ளார் இந்திய ODI முன்னாள் கிரிக்கெட் வீரர் எடுல்ஜி.

மேலும் பேசியிருக்கும் எடுல்ஜி, இரண்டு அணி வீரர்களும் பங்குபெற்ற போட்டோ ஷூட்டில் நடுவர்களையும் அழைத்த ஹர்ம்ப்ரீத்தின் செயல்பாட்டை குற்றஞ்சாட்டியதோடு, வங்கதேச வீரர்களின் மீதான வருத்தத்தையும் பதிவுசெய்துள்ளார். தொடர்ந்து பேசுகையில், ” ‘வங்கதேச வீரர்களுடன் அம்பயர்களும் நிற்க வேண்டும், அவர்களும் அந்த அணியின் வீரர்கள் தான்’ என்று நடுவர்களை கவுர் அழைத்தது உண்மையில் வருத்தமளிக்கிறது. ஹர்மன்ப்ரீத் கோபமானவர் என்பதை நான் அறிவேன். ஆனால் இந்த கோபமெல்லாமல் அவருடைய மோசமான பேட்டிங் ஃபார்மால் ரன்களை அடிக்க முடியாததால் வந்திருக்கலாம் என நினைக்கிறேன். உண்மையில் அன்று அவருடைய வரம்பை மீறிவிட்டார்” என்று காட்டமாக பேசியுள்ளார்.