படிக்கல் cricinfo
கிரிக்கெட்

’ரஞ்சிக்கோப்பை சிறந்த வேலையை செய்துள்ளது’! 36 ஆண்டில் முதல்வீரர்! படிக்கலை பாராட்டிய முன்.ENG வீரர்!

துருவ் ஜுரேல், சர்பராஸ் கான், ரஜத் பட்டிதார், தேவ்தத் படிக்கல் என அறிமுகம் கிடைத்த அனைத்து இந்திய இளம்வீரர்களும் தங்களுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Rishan Vengai

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது இந்தியாவின் இளம் திறமைகளை கண்டறியும் ஒரு வாய்ப்பாகவே இந்திய அணி நிர்வாகத்திற்கு அமைந்தது. ஒவ்வொரு போட்டியிலும் தங்களுடைய திறமைகளை வெளிக்கொண்டுவந்த இளம் வீரர்கள், இங்கிலாந்தின் பாஸ்பால் அட்டாக்கை தூள்தூளாக்கி உள்ளனர்.

அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்கள்!

முதலிரண்டு போட்டிகளில் விளையாடிய ஸ்ரீகர் பரத், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட சதத்திற்கு பிறகு இந்திய அணியில் இணைக்கப்பட்டார். நல்ல தொடக்கத்தை கொடுத்து விளையாடிய ஸ்ரீகர் பரத், அதை பெரிய ரன்களாக கன்வெர்ட் செய்ய தவறிவிட்டார். அதற்கு பிறகு 2-வது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய அறிமுகத்தை பெற்ற ரஜத் பட்டிதார், திறமையான பேட்டிங் நுணுக்கங்கள் இருந்தபோதும் கிடைத்த நல்ல தொடக்கத்தை பெரியதாக கன்வெர்ட் செய்யாமல் சொதப்பினார்.

sarfaraz khan

இந்த இரண்டு வீரர்களும் பெரிய ஸ்கோர்கள் அடிக்கவில்லை என்றாலும், கெவின் பீட்டர்சன் போன்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் அவர்களின் திறமையை பாராட்டினர். ஆனால் அவர்களுக்கு பிறகு வரிசையில் இருந்த மற்ற வீரர்களான சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் முதலிய வீரர்களுக்கு வாய்ப்பை வழங்கும் முன்னிரிமை அளிக்கப்பட்டது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட சர்பராஸ் மற்றும் துருவ் ஜுரேல் இருவரும் இங்கிலாந்துக்கு எதிராக பாஸ்பால் ஆட்டத்தை ஆடி மிரட்சியை ஏற்படுத்தினர்.

Dhruv Jurel

அறிமுகப்போட்டியிலேயே இரண்டு அரைசதங்களை பதிவுசெய்த சர்பராஸ் கானை, தைரியமான வீரர் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் பாராட்டினார். அதேபோல் 4-வது போட்டியில் இந்தியாவை 90 ரன்கள் பேட்டிங்கின் மூலம் வெற்றிக்கு அழைத்துச்சென்ற துருவ் ஜுரேலை பாராட்டிய கவாஸ்கர், இந்தியாவின் எதிர்காலம் நல்ல வீரர்களின் கைகளில் இருக்கிறது என்று பாராட்டினார். இந்தப் பட்டியலில் தற்போது தேவ்தத் படிக்கலும் இணைந்துள்ளார்.

சிக்சருடன் அரைசதமடித்த தேவ்தத் படிக்கல்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய அறிமுக இந்திய கேப் வாங்கிய தேவ்தத் படிக்கல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, சுப்மன் கில்லுக்கு பிறகு 4வது வீரராக இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கி விளையாடினார். ரோகித் சர்மா மற்றும் சுப்மன்கில் இருவரும் அடுத்தடுத்து சதமடித்து வெளியேறிய போது, விரைவாக 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை தாங்கிப்பிடித்தார் தேவ்தத்.

சர்பராஸ் கானுடன் 4வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட அவர், 45 ரன்கள் இருந்தபோது இங்கிலாந்து ஸ்பின்னர் ஷோயப் பஷீருக்கு எதிராக சிக்சரை பறக்கவிட்டு அரைசதத்தை எடுத்துவந்தார். சதமடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்போது துரதிர்ஷ்டவசமாக, பஷீரின் ஒரு அற்புதமான பந்தில் 65 ரன்களில் வெளியேறினார். இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 473 ரன்கள் அடித்துள்ளது.

ரஞ்சிக்கோப்பை ஒரு சிறந்த வேலையை செய்துள்ளது!

அறிமுக போட்டியிலேயே அரைசதமடித்த தேவ்தத் படிக்கலை பாராட்டியிருக்கும் முன்னாள் இங்கிலாந்து வீரர் நிக் நைட், “இதுவரை இருந்த அறிமுகத்தில் தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாடினார்” என்று ஜியோ சினிமாவில் பாராட்டினார்.

மேலும் ரஞ்சிக்கோப்பை தொடரை பாராட்டி பேசிய நைட், “உண்மையில் இந்த வீரர்கள் சிறந்த அறிமுகத்தை பெற்றுள்ளார்கள். அதற்கு காரணம் அவர்கள் 4 நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி பின்னர் இந்தியா ஏ அணிக்கு வருகிறார்கள். இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து ஏ அணிகளுக்கு இடையேயான போட்டியில் இவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இப்போது தேசிய அணிக்கும் சிறந்ததை செய்துள்ளனர். அதற்கு காரணமாக ரஞ்சிக்கோப்பை இருந்துள்ளது. எனக்கு தெரியும் ரஞ்சிக்கோப்பை அதன் வேலையை சிறப்பாக செய்துள்ளது, இதன்மூலம் இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பலவீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்” என்று பாராட்டி பேசியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் மேற்கோள் காட்டியுள்ளது.

36 வருடத்தில் முதல் வீரராக மாறிய தேவ்தத் படிக்கல்!

கடந்த 36 வருடத்தில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் 4ம் நிலை வீரராக அறிமுக போட்டியில் களமிறங்கும் முதல்வீரராக தேவ்தத் படிக்கல் மாறியுள்ளார். இதற்கு முன் 1988ம் ஆண்டு தான், 4ம் நிலை வீரராக ராமன் களமிறங்கினார். அதற்கு பிறகு இந்திய பேட்டிங் வரிசையில் முக்கியமான இடமாக பார்க்கப்படும் 4வது இடத்தில் தேவ்தத் படிக்கல் தற்போதுதான் அறிமுகமாகியுள்ளார்.

padikkal

அதுமட்டுமல்லாமல் 4வது இடத்தில் களமிறங்கி 67 ரன்கள் அடித்திருக்கும் இந்த ரன்களே, அந்த பேட்டிங் வரிசையில் ஒரு அறிமுக வீரர் பதிவுசெய்த இரண்டாவது அதிகபட்ச ரன்களாகும். இதற்கு 1969-ம் ஆண்டு விஸ்வனாத் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 137 ரன்களே அதிகபட்ச ரன்களாக இருந்துவருகிறது. எப்படியிருப்பினும் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் இரண்டிற்கும் பாலமாக இருக்கும் ஒரு பேட்டிங் பொசிசனில் தேவ்தத் படிக்கல் ஜொலித்துள்ளார். வாழ்த்துக்கள்!