ரிங்கு சிங், கிரண் மோரே ட்விட்டர்
கிரிக்கெட்

“சிறந்த ஃபினிஷராக இருப்பார்” - ரிங்கு சிங்கிற்கு ஆதரவளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர்!

“ரிங்கு சிங் சிறந்த ஃபினிஷராக இருப்பார்” என இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரண் மோரே தெரிவித்துள்ளார்.

Prakash J

அயர்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பும்ரா தலைமையிலான இளம்வீரர்களைக் கொண்ட இந்திய அணி, அங்கு 3 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நேற்று (ஆகஸ்ட் 18) நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி, மழை காரணமாக டக்வொர்த் லூயில் முறைப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ரிங்கு சிங்

இந்தப் போட்டியில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணியில் பங்கேற்றிருந்த ரிங்கு சிங், தன்னுடைய அதிரடி பேட்டிங் மூலம் கவனம் ஈர்த்தார். நேற்றைய போட்டி மூலமாகத்தான் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார் அவர். இதே போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் அறிமுகமானார். இந்தப் போட்டியில் அவர் பேட்டிங் செய்யவில்லை என்றாலும், அடுத்த போட்டியில் இவரது பேட்டிங்கின் தாக்கம் எப்படியிருக்குமென எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.

ரிங்கு சிங்கின் தேர்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரண் மோரே, “அவர் 5 அல்லது 6வது இடத்தில் சிறப்பாகச் செயல்படுவார். அந்த இடங்களில் யுவராஜ் சிங் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் வெற்றிகரமாகச் செயல்பட்டதை நாம் பார்த்தோம். ஆனால் அதன்பின் நமக்கு அவர்களைப் போன்ற வீரர்கள் இதுவரை கிடைக்கவில்லை. அவர்களைப் போன்ற வீரர்களை உருவாக்க முயற்சித்தும் நமக்கு வெற்றியும் கிடைக்கவில்லை.

இருப்பினும், தற்போதைய நிலைமையில் அந்த இடத்தில் அசத்துவதற்கு திலக் வர்மாவும் வந்துள்ளார். மேலும் ரிங்கு சிங் சிறந்த ஃபீல்டராக செயல்படும் திறமையை கொண்டவர். ஒரு சிறந்த ஃபினிஷராகவும் அவரால் இருக்க முடியும். உள்நாட்டு கிரிக்கெட்டிலும் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் நிறைய மேம்பட்டு இருக்கிறார் என்று நான் உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து அயர்லாந்து தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே கருத்து தெரிவித்திருந்தார் ரிங்கு சிங். அப்போது அவர், “நான் இங்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்ததால் இதை ஓர் இனிமையான தருணமாக உணர்கிறேன். என்னுடைய பெற்றோர்கள் ஐபிஎல் போட்டியில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததுபோல இந்திய அணிக்காக விளையாடவேண்டும் என்ற ஆசையுடன் இருந்தார்கள்.

கிட்டத்தட்ட என்னுடைய பல ஆண்டு கனவு இப்போது நிறைவேறிவிட்டது. இந்திய அணியில் எனது தேர்வு பற்றி என் அம்மாவிடம் சொன்னபோது, அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அவருடைய குரலைக் கேட்டு, மகிழ்ச்சியின் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. என்னுடைய அம்மாவின் கனவும் என்னுடைய கனவும் இப்போது நடந்துள்ளது. அம்மா கூறியதைப்போல நான் கடினமாக உழைப்பேன்” என தெரிவித்திருந்தார்.

மேலும் பேசிய ரிங்கு சிங் “இன்றுவரையிலான எனது பயணத்தில் எனது குடும்பம் பெரும் பங்கு வகித்தது. என் பயிற்சியை தொடர வீட்டில் போதுமான நிதி இல்லாதபோது, ​​​​என் அம்மா மற்றவர்களிடம் கடன் வாங்கினார். இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு, அன்று எனக்குக் கிடைத்த ஆதரவுதான் காரணம்” என்றிருந்தார்.

Rinku Singh

கடந்த 2022 ஐபிஎல் சாம்பியனாக இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக, சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் அதுவும், கடைசி ஓவரில் 5 சிஸ்சர்களை விளாசி ஐபிஎல் நாயகனாக உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார், ரிங்கு சிங். அதிலும் இந்த வருடம் முழுமையான 14 போட்டிகளில் வாய்ப்பு பெற்று 416 ரன்களை 145.45 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.