இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா குஜராத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 1992ஆம் ஆண்டுமுதல் 2000ஆம் ஆண்டுவரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். 196 ஒருநாள் மற்றும் 15 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். முன்னணி கிரிக்கெட் வீரரான இவர், இந்திய அணியின் பல வெற்றிகளில் பங்களித்தவர். எனினும், மேட்ச் பிக்சிங் ஊழலில் சிக்கிய பின்னர் அவரது கிரிக்கெட் வாழ்க்கை தடைப்பட்டது. விளையாட்டிலிருந்து அவருக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர், 2003ஆம் ஆண்டு, டெல்லி உயர்நீதிமன்றம் ஜடேஜாமீது எந்த தவறும் இல்லை எனக் கூறி அவரை சூதாட்டப் புகாரிலிருந்து விடுவித்தது. ஆனால் அதன்பிறகு, ஜடேஜா கிரிக்கெட் விளையாடத் திரும்பவில்லை.
பின்னர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர், பல்வேறு ஐபிஎல் அணிகளுக்கு வழிகாட்டியாக இருந்தார். இடையில் சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர், கிரிக்கெட் வர்ணணையாளர் ஆகவும் பணியாற்றி உள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆலோசகராகவும் செயல்பட்டார். இந்த நிலையில், குஜராத்தின் ஜாம் நகர் அரச குடும்ப வாரிசாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் நவா நகர், தற்போது ஜாம் நகர் என அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த அரச குடும்பத்தின் ஜாம் நகர் சாஹேப்பாக இருப்பவர் சத்ருசல்யா சிங்ஜி திக்விஜய்சிங்ஜி ஜடேஜா உள்ளார். இவருக்கு வாரிசு இல்லை. மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்வதாகவும் கூறப்பட்டுகிறது. இந்த நிலையில்தான், அரச குடும்பத்தைச் சேர்ந்த அஜய் ஜடேஜாவின் ஒப்புதல் பெற்று அவர் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அரச குடும்பத்தின் சாம்சாஹேப் சத்ருசல்யா சிங்ஜி திக்விஜய்சிங்ஜி ஜடேஜா வெளியிட்ட அறிக்கையில், “தசரா பண்டிகையானது பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்து வெற்றிபெற்ற நாளை குறிக்கும் என நம்பப்படுகிறது. அந்தவகையில் இவ்வருடம் தசரா நாளான இன்று (அக்.12), அஜய் ஜடேஜா என்னுடைய வாரிசாக இருப்பதற்கு ஏற்றுக்கொண்டு, எனக்கிருந்த இக்கட்டான பிரச்னைக்கு ஒரு தீர்வு வழங்கி உள்ளார். இதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
ஜாம் நகர் மக்களுக்குச் சேவைசெய்யும் பொறுப்பை அஜய் ஜடேஜா ஏற்றுக்கொண்டது அந்நகர் மக்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார். தற்போது ஜாம் நகர் அரச குடும்ப வாரிசா அஜய் ஜடேஜா தேர்வானதன்மூலம் அவரது சொத்து மதிப்பு என்பது பல மடங்கு உயர உள்ளது.
ஏனென்றால், ஜாம் நகர் சாஹேப்புக்கு என்று தனி அரண்மனை, ஏராளமான நிலங்கள், தங்க வைர நகைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், அஜய் ஜடேஜாவின் நிகர மதிப்பு 1,455 கோடி ரூபாயாக உயரக்கூடும் என நம்பப்படுகிறது. இது, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு சுமார்1,000 கோடி ரூபாயைவிட அதிகம் எனக் கூறப்படுகிறது.
அஜய் ஜடேஜா, ஜாம் நகர் அரச குடும்பத்தின் நேரடி வழித்தோன்றல் ஆவார். மேலும் தற்போதைய மகாராஜாவின் மருமகன் ஆவார். அஜய் ஜடேஜாவின் தந்தை தெளலத்சிங்ஜி ஜடேஜா, 1971 முதல் 1984 வரை தொடர்ந்து மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.