2019 உலகக்கோப்பையை வென்று நடப்பு உலக சாம்பியனாக இருந்துவரும் இங்கிலாந்து அணி, 2023 உலகக்கோப்பையில் தொடர்ந்து சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. முதல் 4 லீக் போட்டிகளில் 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருக்கும் இங்கிலாந்து, 1 போட்டியில் மட்டுமே வெற்றியை பதிவுசெய்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி, தொடர்ச்சியான இரண்டு தோல்விக்கு பிறகு வெற்றியை தேடி இலங்கைக்கு எதிராக நேற்று களமிறங்கியது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வரலாற்று தோல்விக்கு பிறகு, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியிலும் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி சொதப்பியது இங்கிலாந்து. இந்நிலையில் 5வது லீக் போட்டியில் இலங்கைக்கு எதிராக நேற்று களமிறங்கிய இங்கிலாந்து அணி, பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூர் மைதானத்தில் முதலில் பேட் செய்தது.
நல்ல டாஸ் வென்ற போதும் கூட, இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு எதிராக தாக்குபிடிக்க முடியாத இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது வெளியேறினர். 33.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து 156 ரன்கள் மட்டுமே அடித்தது.
அந்த அணியில் 6 வீரர்கள் ஓரிலக்க ரன்களில் நடையைக்கட்டினர். அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் அடித்தார். இலங்கை அணியில் லஹிரு குமரா 3 விக்கெட்டுகளும், மேத்யூஸ் மற்றும் ரஜிதா இருவரும் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
157 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி விரைவாகவே 2 விக்கெட்டுகளை இழந்தாலும், 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த பதும் நிஷாங்கா மற்றும் சதீரா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி வரை நிலைத்து நின்ற இந்த ஜோடி அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்து அசத்த, 26வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது. 7 பவுண்டரிகள் 2 சிச்கர்கள் விளாசி 77 ரன்களுடன் பதும் நிஷாங்காவும், 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 65 ரன்களுடன் சதீராவும் இறுதிவரை களத்தில் இருந்தனர்.
இந்த போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து 5 போட்டிகளில் 4 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது இங்கிலாந்து. இதன்மூலம் உலகக்கோப்பை அரையிறுதியை எட்டும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது நடப்பு உலக சாம்பியனான இங்கிலாந்து அணி. மீதமிருக்கும் 4 போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை எதிர்த்து விளையாடவிருக்கிறது இங்கிலாந்து. நேற்றைய தோல்வியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 9வதுஇடத்திற்கு சரிந்துள்ளது இங்கிலாந்து.
இங்கிலாந்து அணி முதல்முறையாக மூன்று உலகக்கோப்பை லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல், அளவில் சிறியதும் அதிரடிக்கு பெயர் போனதுமான பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் 156 ரன்கள் என்ற மிகக்குறைவான ரன்களை பதிவுசெய்த அணியாகவும் மாறியுள்ளது. மேலும் நடப்பு உலகக்கோப்பை போட்டிகளில் 5 போட்டிகளில் நான்கில் தோல்வியுற்று இருக்கும் அந்த அணி, அடுத்து பலம்வாய்ந்த இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக மோத உள்ளது.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையின் படுமோசமான தோல்விகளை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், 2019 உலகக்கோப்பை பைனல் போட்டியை நினைவுகூறும் விதமாக, ‘அந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக நீங்கள் செய்த கர்மாதான் இப்போது உங்களுக்கே திரும்பியுள்ளது’ என விமர்சித்துவருகிறார்கள். 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பொறுத்தவரையில் மூன்று வகையில் நியூசிலாந்து அணிக்கு அநியாயம் நிகழ்ந்தது என்றே சொல்லவேண்டும். அவை - போட்டிக்கு இடையே பென் ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு 4 ரன்கள் சென்றது; சூப்பர் ஓவரில் போட்டி சமன் செய்யப்பட்ட போது மற்றொரு சூப்பர் ஓவர் வைக்காதது; கோப்பையை பவுண்டரிகள் கணக்கில் நிர்ணயித்து வழங்கியது ஆகியவை. இப்படி முறைகேடான விதிமுறையால் 2019 உலகக்கோப்பையை வென்றது இங்கிலாந்து அணி.
2003 சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியா-இலங்கை அணிகள் மோதிய போட்டி மழையால் தடைப்பட்ட போது, கோப்பையானது இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. ஆனால் 2019 உலகக்கோப்பை பைனலில் பவுண்டரிகள் எண்ணிக்கையில் கோப்பை வழங்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து அணிக்கும் கோப்பை பகிர்ந்து வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் எண்ணமாக இருந்துவருகிறது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து சொதப்பி வருவதை முந்தைய உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு செய்த கர்மாவின் பலனே தற்போது அனுபவித்து வருகிறீர்கள் என விமர்சித்து வருகின்றனர்.