போட்டி 35: நியூசிலாந்து vs பாகிஸ்தான்
முடிவு: 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி (DLS முறை)நியூசிலாந்து: 401/6
பாகிஸ்தான்: 200/1, ஓவர்கள்: 25.3 (DLS Par ஸ்கோர் - 179)
ஆட்ட நாயகன்: ஃபகர் ஜமான் - 81 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் (8 ஃபோர்கள், 11 சிக்ஸர்கள்)
401 என்ற மிகப் பெரிய டார்கெட். உலகக் கோப்பை அரங்கில் இதுவரை எந்த அணியும் சேஸ் செய்திடாத ஒரு ஸ்கோர். அதுவே சேஸ் செய்யப் போகும் அணியின் நம்பிக்கையை மொத்தமாக உடைத்துவிடும். ஸ்கோர் போர்ட் பிரஷர் என்ன என்பதை இதுபோன்ற போட்டிகள் தான் உணர்த்தும். அதிலும் தோற்றால் அரையிறுதி வாய்ப்பு பறிபோய்விடும் நிலை இருக்கும் ஒரு வாழ்வா சாவா போட்டியில் இப்படியொரு நிலை வந்தால், எந்த அணியுமே மனமுடைந்து தான் போகும். முதல் இன்னிங்ஸ் முடிந்து டிரஸ்ஸிங் ரூம் சென்றபோது பாகிஸ்தான் அணி அப்படித்தான் இருந்திருக்கும்.
நினைத்துப் பார்க்க முடியாத ஒரு இலக்கை சேஸ் செய்யும்போது அந்த அணி எப்படி இன்னிங்ஸை தொடங்குகிறது என்பது மிகவும் முக்கியம். ஒரு அட்டகாசமான தொடக்கம் கிடைத்தால், அது நெருக்கடியை குறைப்பதோடு, அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கும் நம்பிக்கை கொடுக்கும். அதனால் ஓப்பனர்களுக்கு பெரும் நெருக்கடி இருக்கும். அப்படியொரு நெருக்கடியை சுமந்துகொண்டு தான் அப்துல்லா ஷஃபீக், ஃபகர் ஜமான் இருவரும் களமிறங்கினார்கள். அனுபவம் வாய்ந்த ஜமான் ஓரளவு நிதானமாக ஆடத் தொடங்கினாலும், ஷஃபீக் தடுமாறினார். இரண்டாவது ஓவரிலேயே அவர் அவுட் ஆகி வெளியேறினார். 2 ஓவர்கள் முடிந்த நிலையில், ஆறே ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டை பறிகொடுத்தது பாகிஸ்தான். இது எப்படியான நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கவேண்டும்! ஆனால் அது எதையுமே ஏற்றிக்கொள்ளாமல் வேறொரு ஆட்டம் ஆடினார் ஃபகர் ஜமான்.
முந்தைய போட்டியில் சொன்னதுபோலவே முதல் 4 ஓவர்கள் தாக்குப்பிடித்து நின்றுவிட்டு, அதன் பிறகு தன் கை வரிசையைக் காட்டினார் அவர். ஐந்தாவது ஓவரை போல்ட் வீசவந்தார். எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளாசினார் ஜமான். முதல் பந்தில் ஃபோர், அடுத்த பந்தில் சிக்ஸர் என பறந்தது. போல்ட்டின் அடுத்த ஓவரிலும் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். மற்றொரு முன்னணி வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌத்தி வீசிய ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரில் ஒரு ஃபோரும், ஒரு சிக்ஸரும் பறந்தன. வில்லியம்சன் ஸ்பின்னுக்கு மாறினால், ஜமான் அவர்களையும் விட்டுவைக்காமல் விளாசினார். கிளென் ஃபிலிப்ஸை கிழித்துத் தொங்கவைத்தார். 39 பந்துகளில் அரைசதம் கடந்தவர் 64 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
ஜமானின் அதிரடி பாபர் ஆசம் மீதான் நெருக்கடியைக் குறைத்தது. இவர் ஒருபுறம் பௌண்டரிகளாக அடித்ததால், ஆரம்பத்தில் ரன்ரேட் பற்றி அலட்டிக்கொள்ளாமல் தன்னுடைய கேமை ஆடி செட்டில் ஆனார் பாபர்.
அதுமட்டுமல்லாமல் மழை வருவதற்கான வாய்ப்புகள் இருந்ததால், அதற்கு ஏற்றதுபோல் மிகவும் புத்திசாலித்தனமாகவும் அவர்கள் விளையாடினார்கள். 20 ஓவர்கள் வரை விக்கெட் விழாமல் இருக்கவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தினார்கள். அதேசமயம் பௌண்டரி அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் ஆடினார்கள். ஜமான் அடித்த விதம், நியூசிலாந்து பௌலர்களை உளவியல் ரீதியாக பாதிக்க, தவறான பந்துகள் இன்னும் அதிகம் கிடைத்தன.
ஒரு ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள் (11) அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்தார் ஜமான். ஆனால் அவருடைய முதிர்ச்சி அவர் ஆடிய டாட் பால்களில் தெரியும். அத்தனை சிக்ஸர்கள் அடித்த அவர், கிளென் ஃபிலிப்ஸ் வீசிய முதல் ஓவரை மெய்டன் ஆக்கினார். அந்த ஓவரை மிகவும் ஃபுல்லாக சிறப்பாக ஃபிலிப்ஸ் வீச, அதற்கு மதிப்பு கொடுத்து யோசிக்காமல் டாட் பால்கள் ஆடினார் அவர். அந்த மெய்டன் ஆடுவதற்கு முன் 4 சிக்ஸர்கள் விளாசியிருந்தாலும், அந்த ஓவருக்கு மரியாதை கொடுத்து ஆடியிருந்தார். அதேபோல் மழைக்குப் பிறகு இரண்டு ஓவர்கள் அமைதியாக களத்தை ஆராய்ந்தவர், அதன்பிறகே அதிரடியைக் கையில் எடுத்தார். இந்த முதிர்ச்சியும் நிதானமும் தான் இவ்வளவு முக்கியமான போட்டியில் இப்படியொரு சிறப்பான இன்னிங்ஸை அவரை ஆடவைத்திருக்கிறது.
"முதல் ஒருசில ஓவர்களைக் கடந்துவிடவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். ஒருசில முறை எனக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது. இந்த இன்னிங்ஸை நான் மிகவும் ரசித்தேன். ஒவ்வொரு போட்டியுமே எங்களுக்கு வாழ்வா சாவா போட்டி தான் என்று நாங்கள் அறிவோம். அணி மீட்டிங்கில் நாங்கள் அக்ரஸிவாக ஆடவேண்டும் என்று நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டது. அதனால் நாங்கள் அப்படித்தான் போட்டியை அணுகுகிறோம். எல்லோருமே அதிக ரன்கள் சேர்க்க முயற்சி செய்கிறோம். என்னுடைய சதங்களில் இது ஸ்பெஷலான ஒன்று. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நான் 193 ரன்கள் அடித்ததை எப்போதுமே என்னால் மறக்க முடியாது. ஆனால் இது என்னுடைய சிறந்த இன்னிங்களுள் ஒன்று. உலகக் கோப்பையில் நீடிக்கவேண்டும் என்று நாங்கள் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறோம். அடுத்த போட்டியிலும் இதேபோல் அக்ரஸிவான ஆட்டத்தை ஆட விரும்புகிறோம்"ஃபகர் ஜமான்