இந்திய அணி சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியதோடு, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 முறை டெஸ்ட் தொடரை வென்ற அணியாக உச்சம் தொட்டது.
அதாவது மற்ற உலக கிரிக்கெட் நாடுகள் அனைத்தும் அதிகபட்சமாக 10 டெஸ்ட் தொடர்களை மட்டுமே தொடர்ச்சியாக வென்ற நிலையில், இந்திய அணி கடந்த 2012-லிருந்து ஒரு டெஸ்ட் தொடரை கூட இழக்காமல் 18 தொடர்களை வென்று வெற்றிநடைபோட்டு வருகிறது.
இந்நிலையில் சொந்த மண்ணில் இந்திய அணியின் ஆதிக்கம் குறித்து பேசியிருக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயன் மோர்கன், இந்தியாவை புகழ்ந்து பேசியுள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி இந்தியாவை 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. அதற்குபிறகு வேறு எந்த அணியாலும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து சமன்கூட செய்யமுடியவில்லை.
சமீபத்தில் பாஸ்பால் அணுகுமுறையை வெளிப்படுத்திவரும் இங்கிலாந்து அணி, இந்தியாவை மீண்டும் அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த ‘பாஸ்பால்’ இங்கிலாந்து அணியை பஞ்சர் செய்த இந்தியா, 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற வென்று பெரிய அடியை பரிசாக கொடுத்தது.
இந்நிலையில் தற்போதும் டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்திவரும் இந்திய அணி குறித்து பேசியிருக்கும் இயன் மோர்கன் மிகப்பெரிய பாராட்டை இந்திய அணிக்கு வழங்கினார்.
இதுகுறித்து பேசிய இயன் மோர்கன், “இந்தியா அவர்களின் சொந்த மண்ணில் மிகச்சிறந்த அணியாக இருக்கிறது. அவர்கள் எப்பொழுதும் வெற்றி பெறவே பார்க்கிறார்கள், அதனால்தான் அவர்கள் சிறந்த அணியாக இருக்கிறார்கள். இந்தியா எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது. நாங்கள் சொந்த மண்ணில் விளையாடும்போது பெரிய நன்மைகளைக் கொண்ட ஒரு அணியாக இருக்கிறோம். ஆனால் பல ஆண்டுகளாக எங்களின் (இங்கிலாந்து) பதிவுகள் கூட இந்திய அணியை போல் ஈர்க்கவில்லை” என்று மிகப்பெரிய பாராட்டை வைத்தார்.
மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா அதிரடியாக விளையாடும் என்று கூறிய அவர், ஒருவேளை இந்தியா நாதன் லயனை அட்டாக் செய்தால், அதன்மூலம் அவர்களுக்கு பல கேள்விகளை இந்தியா எழுப்பும் என்றும் பேசியுள்ளார்.