ind vs eng Cricinfo
கிரிக்கெட்

3 நாள் வரை இந்தியா கையிலிருந்த ஆட்டம்! ஒரே நாளில் திருப்பிய போப்-ஹார்ட்லி! 28 ரன்னில் ENG வெற்றி!

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத் மைதானத்தில் கடந்த ஜனவரி 25ம் தேதி தொடங்கியது.

டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய ஸ்பின்னர்களின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் 155 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் கடைசிநேரத்தில் பாஸ்பால் அட்டாக்கை வெளிப்படுத்திய கேப்டன் பென் ஸ்டோக்ஸ், அதிரடியாக விளையாடி 70 ரன்கள் அடித்து இங்கிலாந்தை 246 ரன்களுக்கு எடுத்துச்சென்றார்.

பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், தொடக்கவீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 80 ரன்கள் குவித்து வெளியேறினார். பின்னர் வந்த கே.எல் ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 87 ரன்கள் என அடுத்தடுத்து அடிக்க 436 ரன்கள் குவித்து, முதல் இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்தைவிட 190 ரன்கள் முன்னிலை பெற்றது இந்திய அணி.

196 ரன்கள் அடித்து இங்கிலாந்துக்கு நம்பிக்கை கொடுத்த போப்!

இரண்டாவது இன்னிங்ஸை நன்றாகவே இங்கிலாந்து அணி தொடங்கினாலும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அஸ்வின் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தையே திருப்பி போட்டனர். 163 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி தடுமாறியது. அவ்வளவுதான் எப்படியும் அடுத்த 50 ரன்களுக்குள் இங்கிலாந்து ஆல் அவுட்டாகிவிடும் என்று நினைத்தபோது தான், பாஸ்பால் ஆட்டத்தை களத்தில் எடுத்துவந்தார் ஒல்லி போப்.

ollie pope

ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்கூப் ஷாட் என அனைத்து விதமான ஷாட்களையும் விளையாடிய ஒல்லி போப், இந்திய ஸ்பின்னர்களை செட்டிலாக விடாமல் அழுத்தம் போட்டார். கடைசி 5 விக்கெட்டுக்கு டெய்ல் எண்டர் பேட்டர்களுடன் 257 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட போப், 196 ரன்கள் எடுத்து இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஒல்லி போப்பின் அபாரமான ஆட்டத்தால் 230 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி.

7 விக்கெட்டுகள் வீழ்த்தி கலக்கிய டாம் ஹார்ட்லி!

231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இந்திய அணி சிறப்பாகவே தொடங்கியது. ஆனால் சிறப்பாக சென்றுகொண்டிருந்த போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் அவர்களாகவே அவர்களுடைய விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினார். இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ இங்கிலாந்து ஸ்பின்னர்களின் ஆதிக்கம் அதிகமானது.

ind vs eng

119 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியபோது, 8வது விக்கெட்டுக்கு அஸ்வின் மற்றும் கேஎஸ் பரத் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் போட்டனர். 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடியை சிறப்பான பந்துவீச்சு மூலம் போல்டாக்கி வெளியேற்றினார் டாம் ஹார்ட்லி. 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய டாம் ஹார்ட்லி, இங்கிலாந்து அணியை ஒரு வரலாற்று வெற்றிக்கு அழைத்துச்சென்றார். முடிவில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Tom Hartley

5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. அழுத்தமான நேரத்தில் கோட்டைவிடும் வழக்கம் இந்திய அணியில் தொடர்ந்துவருகிறது.