Ben Duckett cricinfo
கிரிக்கெட்

ENG vs WI: டெஸ்ட் போட்டியில் 26 பந்தில் அரைசதம்.. 30 வருட சாதனையை முறியடித்த இங்கிலாந்து அணி!

Rishan Vengai

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

ஜூலை 3ம் தேதி முதல் ஜுலை 30ம் தேதிவரை நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. அதில் கஸ் அட்கின்ஸன்னின் அபாரமான பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணியை இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது. அபாரமாக பந்துவீச்சிய அட்கின்ஸன் முதல் இன்னிங்ஸ் 7 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் என அறிமுக டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி எல்லோரையும் வியக்க வைத்தார்.

atkinson

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

4.2 ஓவரில் 50 ரன்களை எட்டி இங்கிலாந்து அணி சாதனை!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரின் 3வது பந்தில் ஜாக் கிராவ்லியை வெளியேற்றிய அல்சாரி ஜோசப் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் விக்கெட்டை எடுத்துவந்தார்.

Alzarri Joseph

ஆனால் அதற்குபிறகு பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடிய பென் டக்கெட் விக்கெட் விழுந்த தடமே தெரியாமல் “பாஸ்பால்” கிரிக்கெட் ஆடி விறுவிறுவென ரன்களை உயர்த்தினார். பென் டக்கெட் 8 பவுண்டரிகள், ஒல்லி போப் 3 பவுண்டரிகள் என அடுத்தடுத்து துவம்சம் செய்ய 4.2 ஓவரிலேயே 50 ரன்களை எட்டியது இங்கிலாந்து அணி.

இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 50 ரன்களை அடித்த முதல் அணி என்ற 30 வருட சாதனையை முறியடித்துள்ளது இங்கிலாந்து அணி.

Ben Duckett

டெஸ்ட் போட்டியில் ஒரு அணியாக அதிவேக 50:

4.2 - இங்கிலாந்து vs WI, நாட்டிங்ஹாம், 2024

4.3 - இங்கிலாந்து vs SA, தி ஓவல், 1994

4.6 - இங்கிலாந்து vs SL, மான்செஸ்டர், 2002

5.2 - இலங்கை vs PAK, கராச்சி, 2004

5.3 - இந்தியா vs ENG, சென்னை, 2008

5.3 - இந்தியா vs WI, போர்ட் ஆஃப் ஸ்பெயின், 2023

32 பந்தில் அரைசதமடித்த பென் டக்கெட்!

தொடர்ந்து அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய பென் டக்கெட், 11 பவுண்டரிகள் உட்பட 32 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக 3வது அதிவேக அரைசதத்தை பதிவுசெய்த பென் டக்கெட், 71 ரன்கள் இருந்தபோது ஷமர் ஜோசப் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.

Ben Duckett

தொடர்ந்து விளையாடிவரும் இங்கிலாந்து அணி 32 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளுடன் 161 ரன்களுடன் விளையாடிவருகிறது. களத்தில் ஒல்லி போப் 63, ஹேரி ப்ரூக் 10 ரன்னுடன் விளையாடிவருகின்றனர். ஜோ ரூட் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

6வது சதமடித்த ஒல்லி போப்..

தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒல்லி போப், 6வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து தன்னுடைய திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். 15 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசிய ஒல்லி போப் இங்கிலாந்து அணியை ஒரு நல்ல ஸ்கோருக்கு அழைத்துவந்து 121 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

ஒல்லி போப்

இங்கிலாந்து அணியில் ஒருநாள் மற்றும் டி20 என எந்த வடிவத்திலும் விளையாடாத ஒல்லி போப், கிடைத்த டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தான் ஒருசிறந்த வீரர் என சிம்மாசனமிட்டு அமர்ந்துவருகிறார். 45 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் போப் 6 சதங்கள், 1 இரட்டை சதம் மற்றும் 12 அரைசதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.

ஒல்லி போப்

இங்கிலாந்து அணி 63 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 313 ரன்களுடன் விளையாடி வருகிறது, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் களத்தில் இருக்கின்றனர். பென் ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்துள்ளார்.