இங்கிலாந்து பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் சேர்ந்து இங்கிலாந்து டெஸ்ட் அணியை வழிநடத்திய பிறகு, மிக மோசமான ஒரு தோல்வியை முதன்முதலாக இந்தியாவிற்கு எதிராக சந்தித்துள்ளது இங்கிலாந்து அணி. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணி பாஸ்பால் கிரிக்கெட்டை ஆட ஆரம்பித்த பிறகு, ஒரு எதிரணி பாதியிலேயே டிக்ளார் செய்து இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது இதுவே முதல்முறை.
கடந்த முதல் போட்டியில் ஒரு வரலாற்று தோல்வியை சந்தித்த இந்திய அணி, அதற்கு பழிதீர்க்கும் விதமாக 434 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்து பதிலடி கொடுத்துள்ளது. 1-0 என இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலை பெற்றபோதும், தொடரில் விராட் கோலி இல்லாதபோதும் கூட இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி பலம்வாய்ந்த இங்கிலாந்தை சம்பவம் செய்துள்ளது.
இந்நிலையில், இதற்கு முன்னர் ஆதரவாக இருந்த மைக்கேல் வாகன், நாசர் ஹூசைன் மற்றும் அலைஸ்டர் குக் முதலிய இங்கிலாந்தின் முன்னாள் வீரர்களே பாஸ்பால் அணுகுமுறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இத்தகைய சூழலில் 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தும் ஒரு முயற்சியாக, அறுவை சிகிச்சைக்கு பிறகு பென் ஸ்டோக்ஸ் மீண்டும் பந்துவீச போவதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் இறுதியில் இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பென் ஸ்டோக்ஸ், இந்த சுற்றுப்பயணம் முழுவதும் பந்துவீசாமல் இருந்துவருகிறார். கடைசியாக அவர் ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தான் பந்துவீசியிருந்தார். அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவரின் உத்தரவின் பேரில் பந்துவீசாமல் இருந்துவரும் பென் ஸ்டோக்ஸ், இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில் தன்னுடைய அணிக்காக பந்துவீசுவதற்கு முடிவெடுத்துள்ளதாக க்றிக்இன்ஃபோ தெரிவித்துள்ளது.
பந்துவீசும் முடிவு குறித்து பேசியிருக்கும் பென் ஸ்டோக்ஸ், “இந்தியாவிற்கு வந்த பிறகான வார்ம்-அப் நாட்களில் என்னால் ஒருநாள் 100% பந்துவீச முடிந்தது. அன்று பந்துவீசிய பிறகு எனக்கு மிகவும் நன்றாக இருந்தது. 3வது டெஸ்ட் போட்டியில் கூட நான் பந்துவீசியிருக்கலாம் என்று உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் உடல்நிலையை கருத்தில் கொண்டு நாங்கள் பந்துவீச அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்திருக்கும் பயிற்சியாளர் மெக்கல்லம், ஒருவேளை அவரால் பந்துவீச முடிந்தால் அது இங்கிலாந்துக்கு போனஸ் என்று தெரிவித்துள்ளார். ஒருவேளை 4வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீசும் பட்சத்தில் இங்கிலாந்து அணி கூடுதல் பலம்பெறும். 4வது டெஸ்ட் போட்டியானது வரும் பிப்ரவரி 23ம் தேதி ராஞ்சியில் நடைபெறவிருக்கிறது.