kohli - dinesh karthik web
கிரிக்கெட்

”தவறிலிருந்து ஓடிவிட முடியாது.. கோலி இதை செய்தே ஆகவேண்டும்!” - தினேஷ் கார்த்திக் அட்வைஸ்

விராட் கோலி தனது தவறிலிருந்து ஓடிவிட முடியாது, சிறப்பாக திரும்பி வர என்ன செய்யவேண்டும் என முடிவெடுக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

Rishan Vengai

கடந்த 2020 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் 2 சதங்களை மட்டுமே அடித்திருக்கும் கோலி, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார். எப்படி 71வது சர்வதேச சதத்தை எட்டுவதற்கு நீண்டகாலம் தேவைப்பட்டதோ, அதேபோல 81வது சர்வதேச சதத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறிவருகிறார்.

விராட் கோலி

இடைப்பட்ட காலத்தில் அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கோலி, குறைவான டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அதிலும் பெரும்பாலான டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடமலும் கோலி இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில் அதிகப்படியான ஒருநாள் போட்டிகளில் விளையாடியது, ஐபிஎல் தொடர், டி20 போட்டிகள் போன்ற காரணத்தினால் டெஸ்ட் ஃபார்மேட்டிற்கு தன்னுடைய பேட்டிங்கை எளிதில் மாற்றிக்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறார் கோலி.

virat kohli

இந்திய அணியின் பேட்டிங் தூணாக இருந்துவரும் கோலியின் சொதப்பலான ஆட்டத்தால் 12 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. கோலி மட்டுமே இதற்கு காரணம் இல்லை என்றாலும், கோலி போலான இரு உலகத்தரம் வாய்ந்த வீரர் அணியில் இருக்கும்போது இது நடந்திருக்க கூடாது என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கோலியின் மோசமான பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

தவறிலிருந்து ஓடிவிட முடியாது.. தினேஷ் கார்த்திக் அட்வைஸ்!

கோலியின் மோசமான பேட்டிங் குறித்தும், ஸ்பின்னர்களுக்கு எதிராக தொடர்ந்து சொதப்புவது குறித்தும் பேசியிருக்கும் தினேஷ் கார்த்திக் மீண்டும் கோலி உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்ப வேண்டும் என்று பேசியுள்ளார்.

கிறிக்பஸ் உடன் பேசியிருக்கும் அவர், “விராட் கோலிக்கு இந்த தொடர் எளிதாக இல்லை. ஸ்பின்னர்கள் அவரைத் தடுமாற வைக்கிறார்கள். அதனால் அதற்கான காரணத்தை கண்டறிந்து மீண்டும் வலுவாக திரும்ப என்ன செய்ய வேண்டும் என விராட் கோலி யோசிக்க வேண்டுமென நினைக்கிறேன். தற்போது அவர் அதற்கெல்லாம் விடைகளை தேடும் மனிதராக இருக்கிறார்.

தினேஷ் கார்த்திக்

நீங்கள் ஜீனியஸ் போன்ற உச்சத்தை தொட்டு நட்சத்திர அந்தஸ்தை பெறும் போது உங்கள் மீது சவால் மேல் சவால்கள் என எறியப்படும். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களில் இந்தியா ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்ள விரும்புவார்கள். அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? என்பதே கேள்வி. விராட் கோலி எந்தளவுக்கு திறன் மிக்கவர் என்பது நமக்குத் தெரியும். ஆனால் ரசிகர்கள் சொல்வது போல அவர் நீண்ட காலமாக அசத்தவில்லை என்று சொல்வதிலிருந்து நாம் ஓட முடியாது.

கோலி

அதை மூடி மறைக்க விரும்பவில்லை. கடந்த 2 – 3 வருடங்களாக சுழலுக்கு எதிராக விராட் கோலியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. அதற்கு அவர் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு மீண்டும் விளையாடச் சென்று தற்போதைய டிஆர்எஸ் விதிமுறைகளை தாண்டி எப்படி அசத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக விராட் கோலிக்கு இடது கை ஸ்பின்னர்கள் பெரிய அச்சுறுத்தலை கொடுக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை” என்று பேசியுள்ளார்.