IND vs WI Twitter
கிரிக்கெட்

தொடரை வென்றது இந்தியா.. ஆனால் எதிர்பார்த்த பதில்கள் கிடைத்ததா?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என வென்றிருக்கிறது.

Viyan

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சம நிலையில் இருந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 200 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா. ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்த உலகக் கோப்பைக்கான பதில்கள் இந்தத் தொடரில் கிடைத்தனவா என்றால் சந்தேகம் தான்!

Sanju Samson

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் சென்றபோது, அனைவரும் எதிர்பார்த்தது இந்திய உலகக் கோப்பை அணி பற்றி இருக்கும் குழப்பங்களுக்கு இந்தத் தொடர் பதில் கொடுக்கும் என்பதுதான். பல முன்னணி வீரர்கள் காயமடைந்திருக்கும் நிலையில், இந்திய அணியின் நம்பர் 4 யார், எந்தெந்த வீரர்கள் பேக் அப் ஆக செல்லப்போகிறார்கள், எத்தனை ஸ்பின்னர்களுக்கு எந்தெந்த ஸ்பின்னர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும் என பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்தால், இந்திய அணி இந்தத் தொடரை அனுகிய விதம் ஆச்சர்யமாக இருந்தது.

முதல் இடத்திற்கும் 4வது இடத்திற்கும் ஏற்பட்ட குழப்பம்!

உலகக் கோப்பை அணியில் ரோகித் ஷர்மாவுடன் சுப்மன் கில் ஓப்பனராக ஆடுவார் என்று உறுதியாகிவிட்டது. விராட் கோலி நம்பர் 3. இவர்கள் போக டாப் 7ல் ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெறுவார்கள் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், இப்போது ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் இருவரும் காயத்தால் அவதிப்பட்டுவருகின்றனர்.

உலகக் கோப்பைக்குள் அவர்கள் திரும்புவார்களா என்பது உறுதியாகவில்லை. ஷ்ரேயாஸை விட ராகுல் அணிக்கு விரைவில் திரும்பிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல் இப்போதும் நம்பர் 4 தான் கேள்விக்குறியாக இருக்கிறது. அதனால், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் செயல்பாடு பற்றி எதிர்பார்ப்பு இருந்தது. பேக் அப் ஓப்பனர், பேக் அப் விக்கெட் கீப்பர் ஆகிய இடங்களுக்கும் வீரர்களை உறுதி செய்யவேண்டும் என்பதால் இஷான் கிஷனும் அந்த கோதாவில் இருந்தார்.

மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்களே இல்லாததும் பெரிய பிரச்சனையாகப் பார்க்கப்பட்டது. அதனால் இஷானுக்கு மிடில் ஆர்டரில் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு அவரது செயல்பாடு பரிசோதிக்கப்படும் என்று கருதப்பட்டது. ஆனால், இந்தத் தொடரில் இந்திய அணி செய்தது எல்லாமே புரியாத புதிர் தான்!

Hardik Pandya

கேப்டன் ரோகித் ஷர்மா, விராட் கோலி இருவரும் இத்தொடரில் இடம்பெற்றிருந்தும் அவர்கள் முதல் போட்டியில் மட்டுமே ஆடினர். அதிலும் ரோகித் ஏழாவது வீரராக பேட்டிங் செய்ய வந்தார். கோலி பேட்டிங் செய்யவே இல்லை. அடுத்த 2 போட்டிகளிலும் இருவரும் ஆடவேயில்லை. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பரிசோதிக்கிறோம் என்றார்கள். ஆனால், அதையாவது சரியாக செய்தார்களா? அதுவும் இல்லை!

6வது இடத்தில் சூர்யாவை களமிறக்கும் திட்டம்!

முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா நம்பர் 4 இடத்தில் களமிறங்கினார். இரண்டாவது போட்டியில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையுமே ஆச்சர்யப்படுத்தும் வகையில் அக்‌ஷர் படேலை அந்த இடத்தில் இறக்கியது இந்திய அணி. மூன்றாவது போட்டியில் மட்டுமே அந்த இடத்துக்கான போட்டியில் இருக்கும் சஞ்சு சாம்சன் நான்காவது வீரராகக் களமிறக்கப்பட்டார். முதல் போட்டியில் மூன்றாவது இடத்தில் இறங்கிய சூர்யகுமார் யாதவ், அடுத்த இரு போட்டிகளிலும் நம்பர் 6 இடத்தில் களமிறங்கினார். ஓப்பனராக நன்றாக ஆடும் இஷான் கிஷன் மீண்டும் அதே இடத்தில் தான் களமிறக்கப்பட்டார். மிடில் ஆர்டரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவேயில்லை.

Suryakumar

பேட்டிங்கைப் பொறுத்தவரை எந்தெந்த கேள்விகளுக்கு இந்திய அணி விடை தேடியதோ அவை அனைத்தும் இன்னும் பதில் சொல்லப்படாமலேயே இருக்கின்றன. ஆனால், இந்தத் தொடரின் செயல்பாட்டைப் பொறுத்தவரை இஷான் கிஷன் நிச்சயம் இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. நிச்சயம் பேக் விக்கெட் கீப்பர் தேவை, பேக் அப் ஓப்பனரும் தேவை. இந்த இரண்டு இடங்களையும் இஷான் கிஷன் நிரப்புகிறார். இடது கை பேட்ஸ்மேனாகவும் இருக்கிறார். இந்தத் தொடரில் 184 ரன்கள் அடித்து தொடர் நாயகன் விருதும் வென்றிருக்கிறார். அதனால் அவர் நிச்சயம் பரிசீலனையில் இருப்பார். மற்றபடி மிடில் ஆர்டர் குழப்பங்கள் இன்னும் இந்திய அணியை தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது.