யஷ் தயாள் - தோனி web
கிரிக்கெட்

ஏன் கைகுலுக்கவில்லை? RCB-க்கு எதிரான தோல்விக்கு பிறகு டிவியை உடைத்தாரா தோனி.. வைரலாகும் வீடியோ!

2024 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியடைந்த போது தோனி கைகுலுக்காமல் சென்றது பேசுபொருளான நிலையில், தற்போது அப்போட்டிக்கு பிறகு தோனி டிவியை உடைத்ததாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடரின் நாக்அவுட் சுற்றுக்கு தகுதிபெற வேண்டிய முக்கியமான போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கடந்த மே 18-ம் தேதியன்று பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த கடைசி லீக் போட்டியில், ஆர்சிபி அணிக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

dhoni

219 என்ற இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி 201 ரன்களை அடித்தால் பிளேஆஃப்களுக்கு தகுதிபெற வேண்டிய சூழல் இருந்தது. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோன் பேட்டிங் செய்ய யஷ் தயாள் பந்துவீசினார். முதல் பந்து லோ ஃபுல்-டாஸாக வீச அதை ஃபைன்-லெக்கில் பெரிய சிக்ஸருக்கு பறக்கவிட்டார் எம் எஸ் தோனி. எப்படியும் சிஎஸ்கே வென்றுவிடும் என்ற நிலையில், RCB வேகப்பந்து வீச்சாளர் தனது அடுத்த பந்திலேயே தோனியை பழிவாங்கினார். ஒரு பேக்-ஆஃப்-தி-ஹேண்ட் ஸ்லோயர் பந்தை வீசிய யஷ் தயாள் தோனியை அவுட்டாக்கி வெளியேற்றினார். பின்னர் ஒரு பவுண்டரியை கூட விட்டுக்கொடுக்காத அவர் ஆர்சிபி அணியை பிளேஆஃப் சுற்றுக்கு அழைத்துச்சென்றார்.

யஷ் தயாள்

போட்டி முடிந்தபிறகு ஆர்சிபி வீரர்களிடம் தோனி கைகுலுக்காமல் சென்றது அப்போது பேசுபொருளாக மாறியது. பின்னர் கோலி தனியாக சென்று பேசியதாகவும் செய்திகள் வெளியாகின.

பெங்களூரு மைதானம்

இந்நிலையில் தற்போது சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி அந்த போட்டிக்கு பிறகு கோபத்தில் டிவியை உடைத்ததாக ஒரு பத்திரிகையாளர் கூறியுள்ளார். இந்த தகவலை ஹர்பஜன் சிங்கிடம் இருந்து பெற்றதாக வீடியோ ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

டிவியை உடைத்தாரா தோனி?

வைரலாகும் அந்த வீடியோவில் ஸ்போர்ட்ஸ் யாரிடம் பேசும் அந்த பத்திரிக்கையாளர், “எனக்கு ஒரு பிரத்யேக ஸ்கூப் பற்றித் தெரிய வந்தது. நான் பஜ்ஜி [ஹர்பஜன்] பாஜியிடம் தோனி ஏன் ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர் கை மட்டும் குலுக்காமல் செல்லவில்லை, கோபத்தில் ஒரு டிவியையும் உடைத்தார் என்று கூறினார். அவர் கையிலிருந்த போட்டியை தவறவிட்டதற்காக மிகவும் கோபமாக இருந்தார்” என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை ஆர்சிபி ரசிகர்கள் சிலர் பகிர்ந்து “தோனியை இன்னொரு ஐபிஎல் ஆடவைத்ததே ஆர்சிபியின் வெற்றி’ என தோனியை விமர்சித்து வருகின்றனர்.

அதேநேரத்தில் தோனி ரசிகர்கள் 4 மாதங்களுக்கு பிறகு ஏன் இப்படி ஒரு செய்தி வெளிவருகிறது, இது உருவாக்கப்பட்ட கதை என்றும் பதிவிட்டுவருகின்றனர்.