தோனி எக்ஸ் தளம்
கிரிக்கெட்

விதிமுறையில் மாற்றம் இருக்குமா?.. ஐபிஎல்லில் தோனி விளையாடுவது பிசிசிஐ கைகளில்! நாளை முக்கிய ஆலோசனை

அடுத்தாண்டு ஐபிஎல்லில் தோனி விளையாடுவது பிசிசிஐ எடுக்கும் முடிவுகளில்தான் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Angeshwar G

சிஎஸ்கே = தோனி

ஐபிஎல் தொடருக்கு இருக்கும் வரவேற்பு அனைவரும் அறிந்ததே. அதிலும் சென்னைக்கும், தோனிக்கும் இருக்கும் மாஸ் எவ்வளவு என்பதைச் சொல்லவா வேண்டும்.

சென்னை அணியை 10 முறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற கேப்டன், 5 முறை கோப்பையை வெல்லவைத்த தலைவன், சென்னை என்றால் ப்ளே ஆஃப் உறுதி என்று சொல்லவைத்தவர் என சிஎஸ்கே உடனான தோனியின் பிணைப்பு என்பதை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.

தோனி

உதாரணமாக, 2023 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியைச் சொல்லலாம். ஒருவேளை இதுதான் தோனிக்கு கடைசி போட்டியாக இருக்குமோ என்ற பயத்தால், கண்ணில் கண்ணீரோடு தோனியை பார்க்க இறுதிப்போட்டிக்கு சென்ற சென்னை ரசிகர்கள், போட்டி முடிவதற்கு 3 நாட்கள் ஆனபோதும் மழை வெயில் என எதையும் பார்க்காமல் கொசுக்கடியில் ரயில்வே ஸ்டேசனில் படுத்தெழுந்து வந்து தோனியின் வெற்றியை தங்களுடைய வெற்றியைபோல் பறைசாற்றினர்.

ரசிகர்கள் உடனான தோனியின் பிணைப்பு

இதையெல்லாம் கவனித்த மகேந்திர சிங் தோனி, “இதைவிட ஓய்வை அறிவிக்கை சிறந்த தருணம் இருக்கமுடியாது. ஆனால், இவ்வளவு அன்புகாட்டும் சென்னை ரசிகர்களுக்காக கூடுதலாக ஒரு ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறேன்” என்று அறிவித்தார். இதை சற்றும் எதிர்பாராத தோனி மற்றும் சென்னை ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் சென்னை திரும்பினர்.

தோனி

இத்தனை பெருமைகளுக்கு உரித்தான தோனிதான் தற்போது, ப்ளேயராக தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளார். ருதுராஜிடம் கேப்டன் பதவியைக் கொடுத்தபோதே அடுத்த சீசனில் தோனி விளையாடுவது சந்தேகம்தான் என்ற செய்திகள் வந்தன. இப்போது அதை உறுதிப்படுத்தும் விதமான தகவல்களும் வருகின்றன.

2024 ஆம் ஆண்டு தொடருக்குப் பின் தோனி அணியில் மீண்டும் விளையாடுவாரா அல்லது வழிகாட்டியாகவோ, பயிற்சியாளராகவோ அணியில் நீடிப்பாரா என்ற தகவல் ஏதும் இல்லை. ஆனால் ஏதேனும் ஒரு வகையில் அணியில் நீடிப்பார் என்ற எதிர்பார்ப்பு தற்போது வரை இருக்கிறது.

தோனி விளையாடுவது சந்தேகம்?

ஆனால் அடுத்த சீசனில் தோனி விளையாட வேண்டுமானால் பிசிசிஐயின் முடிவுக்கு நாம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஏனெனில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் மெகா ஏலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாளை மும்பையில் பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் ஒன்று கூடி ஆலோசிக்க உள்ளனர். ஆலோசனை ஆண்டு இறுதியில் நடக்கும் மெகா ஏலம் பற்றியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி

இதில் ஐபிஎல் உரிமையாளர்கள் 5 முதல் 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கினால் மட்டுமே தோனி அடுத்த சீசன் ஐபிஎல்லில் விளையாடக்கூடும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. ஆனால் 4 வீரர்கள் மட்டுமே தக்கவைத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டால் தோனி விளையாடுவது சந்தேகமே என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், வீரர்களை தக்கவைப்பதில் ஐபிஎல் உரிமையாளர்களின் கோரிக்கையை நிர்வாகக்குழு ஏற்றுக்கொண்டால் விதி மாறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழலின் படி, சென்னை அணி ஜடேஜா, ருதுராஜ், மதீஷா பதிரானா, துபே போன்ற வீரர்களை தக்கவைப்பதற்கு முனைப்பு காட்டலாம். அதுமட்டுமின்றி தோனியை அணியின் வழிகாட்டியாக மாற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி

கடந்த மே மாதத்தில் தோனி விளையாடுவது குறித்து பேசியிருந்த சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், “அவர் எப்போதும் தனது முடிவுகளை சரியான நேரத்தில் அறிவிப்பார். அடுத்த ஆண்டும் சிஎஸ்கேவிற்கு விளையாடுவார் என எதிர்பார்க்கிறோம். அதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பு” என தெரிவித்திருந்தார்.