தோனி  X
கிரிக்கெட்

வாய்ப்பு தேடி அலைந்தபோது உதவிய பால்ய நண்பன்! பதிலுக்கு தோனி செய்த ’வாவ்’ செயல்! வைரல் புகைப்படம்

இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்ற கனவோடு சுற்றிய காலத்தில், தன்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த சிறுவயது நண்பனுக்காக உதவி செய்யும் வகையில் தோனி செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rishan Vengai

மனிதனிடத்தில் இருக்கும் முக்கியமான மாண்பு செய்நன்றி அறிதல் என்பதாகும். அதனால் தான் வள்ளுவர் தனி அதிகாரத்தையே ஒதுக்கி அதனை உலகிற்கு தந்துள்ளார். எப்போதும் தன்னுடைய நல்ல குணத்திற்காக எம்எஸ் தோனி தலைப்புச்செய்திகளில் வருவது இயல்பான ஒன்று தான், ஆனால் தற்போது வைரலாகி இருப்பது உண்மையில் அனைத்து மக்களும் பின்பற்றவேண்டிய ஒரு காரியம் என்றால் மிகையாகாது.

”எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு” என்ற குரளின் பொருளிற்கு ஏற்ப, தம்முடைய துன்பத்தை ஒழித்தவரின் நட்பை ஏழு பிறவியிலும் மறவாது போற்றுபவர் நன்றியுடையவர் என்று நன்றி மறவாமை குறித்து வள்ளுவர் எடுத்துக் கூறியதை தோனி நிரூபித்துக்காட்டியுள்ளார். அந்த வகையில், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவோடு பெரிதாக பின்புலம் இல்லாமல் கஷ்டப்படும் குடும்பத்திலிருந்து வந்த தோனி, பெரும் சிக்கல்களை சந்தித்த போது தனக்கு உதவிய சிறுவயது நண்பன் பரம்ஜித் சிங்கிற்கு தற்போதும் உதவிசெய்துவருகிறார்.

தோனியின் பேட்டில் ஒட்டப்பட்டுள்ள நண்பரின் ஷாப் ஸ்டிக்கர்!

2024 ஐபிஎல் தொடரானது மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஹெல்மெட்டை தாண்டி நிற்கும் பழைய பங் ஸ்டைல் முடியுடன் ராஞ்சியில் பேட்டிங் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் எம்எஸ் தோனி, தன்னுடைய பேட்டில் தன்னுடைய சிறுவயது நண்பரின் ஸ்போர்ட்ஸ் ஷாப் கடையின் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளார். தோனி பேட்டிங் செய்யும் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், அவருடைய நன்றி மறவாத செயலை பார்த்து புகழ்ந்து வருகின்றனர்.

தோனியின் சிறுவயது நண்பரான பரம்ஜித் சிங் 'பிரைம் ஸ்போர்ட்ஸ்' என்ற பெயரில் விளையாட்டு பொருட்கள் விற்பனை ஷாப் வைத்துள்ளார். எம்எஸ் தோனி படத்தில் வருவதைப்போல தோனிக்கு முதல்முறையாக நல்ல பேட்டை வாங்க ஸ்பான்சர்ஷிப் வாங்கித்தந்த நண்பர் பரம்ஜித் சிங் தான். அதுமட்டுமல்லாமல் தோனியின் கடினமான காலங்களில் அவருக்கு பக்கபலமாக பரம்ஜித் சிங் நிறைய பங்காற்றியுள்ளார்.

அந்த நன்றியை வெளிப்படுத்தும் விதமாக 'பிரைம் ஸ்போர்ட்ஸ்' என்ற ஸ்டிக்கரை அவருடைய பேட்டில் வைத்து பயன்படுத்திவருகிறார். அதுமட்டுமல்லாமல் நண்பரின் ஷாப்பில் விற்கப்படும் பேட்களுக்கு தோனி தன்னுடைய ஆட்டோகிராஃபையும் போட்டிருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தோனி இதே பேட்டுடன் தான் 2024 ஐபிஎல் தொடர் முழுக்க விளையாடப்போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தோனி எப்போதும் செய்த உதவியை மறக்காமல் இருந்துவரும் பண்பை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.